பூமி சுற்றுவதை நாம் ஏன் உணர முடியவில்லை? - டிங்குவிடம் கேளுங்கள்

பூமி சுற்றுவதை நாம் ஏன் உணர முடியவில்லை? - டிங்குவிடம் கேளுங்கள்
Updated on
1 min read

திரைப்படங்களில் காட்டுவது போல குளோரோஃபார்மை சுவாசித்த சில நொடிகளுக்குள் மயக்கம் வந்துவிடுமா, டிங்கு? - ம. சங்கேஷ்ராஜ், 8-ம் வகுப்பு, வி.எம்.ஜெ. மேல்நிலைப் பள்ளி, மதுரை.

குளோரோஃபார்ம் மயக்க மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது என்பது உண்மைதான். ஆனால், எவ்வளவு குளோரோஃபார்மை சுவாசிக்கிறோம் என்பது முக்கியம்.

திரைப்படங்களில் காட்டுவதுபோல் எங்கிருந்தோ ஒரு துணியில் குளோரோபார்மை நனைத்துக் கொண்டுவந்து, ஒருவரின் முகத்தில் வைத்த அடுத்த நொடி அந்த நபர் மயங்கிவிடுவார் என்பதில் உண்மை இல்லை. இப்படிச் செய்தால் குளோரோஃபார்ம் வேலை செய்யாது. நிஜத்தில் செய்வதுபோல் திரைப்படத்தில் காட்டவும் முடியாது அல்லவா, சங்கேஷ்ராஜ்.

பூமி சுற்றுகிறது என்றால், நாம் ஏன் சுற்றவில்லை டிங்கு? - நா. செம்மொழி, 1-ம் வகுப்பு, நேட்ரோ டேம் அகாடமி பள்ளி, போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி.

பூமியும் சுற்றுகிறது, பூமியுடன் சேர்ந்து நாமும் சுற்றிக்கொண்டுதான் இருக்கிறோம் செம்மொழி. அப்புறம் ஏன் நம்மால் பூமி சுற்றுவதை உணர முடியவில்லை? நீங்கள் விமானத்திலோ காரிலோ பயணம் செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். பயணம் ஆரம்பித்த சிறிது நேரத்தில் வாகனம் ஓடுவதை நம்மால் உணர முடியாது.

வேகத்தில் ஏதாவது மாற்றம் வந்தால் மட்டுமே அதை உணர முடியும். அதே போலதான் பூமியும். மணிக்கு 1,000 மைல் வேகத்தில் பூமி சுற்றிக்கொண்டிருக்கிறது. இந்த வேகம் நிலையானது. அதனால் பூமி சுற்றுவதை நம்மால் உணர முடியவில்லை. பூமி சுற்றும் வேகத்தில் பெரிய அளவில் மாற்றம் வந்தால் மட்டுமே, பூமி சுற்றுவதை நம்மால் உணர முடியும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in