கதை: சிங்கம் சொன்ன தீர்ப்பு

கதை: சிங்கம் சொன்ன தீர்ப்பு
Updated on
2 min read

செ

ண்பகக் காட்டில் மயில், கிளி, குயில், வண்ணத்துப்பூச்சி நான்கும்

கூடியிருந்தன. மயில் உற்சாக மிகுதியில் தன் நீண்ட அழகிய தோகையை விரித்து ஆடியது.

அதைக் கண்டதும் குயில் கூவியது. குயில் தனக்குப் போட்டியாகக் கூவுவதாக நினைத்த மயில், “நிறுத்து. நான் ஆடும்போது ஏன் நீ கூவ வேண்டும்?” என்று கோபத்துடன் கேட்டது.

“ஏன் நீ ஆடும்போது நான் கூவக் கூடாது என்று சட்டம் உள்ளதா? எனக்கு நல்ல குரல் வளம் இருக்கிறது. நான் கூவுகிறேன். அதில் உனக்கு என்ன கஷ்டம்?” என்று பதிலடி கொடுத்தது குயில்.

“உனக்குக் குரல் வளம் இருக்கலாம். ஆனால் உலகில் உள்ள அத்தனை உயிரினமும் மயங்கக் கூடிய அழகு, எனக்கு மட்டும்தான் இருக்கிறது. ஆகவே நான் அழகில் சிறந்தவன். அதனால்தான் நமது நாட்டின் தேசியப் பறவையாகவும் இருக்கிறேன்” என்றது மயில்.

“ஓ… அதனால்தான் ஆணவத்தில் இப்படிப் பேசுகிறாயா? நானும் அழகுதான். என் குரலின் சிறப்பை பற்றிப் பாடாத கவிஞர்களே உலகில் இல்லை. ஆகவே நானே சிறந்தவன்” என்றது குயில்.

அதைக் கேட்டதும் கிளி கோபம் கொண்டது. “கரிய குயிலே வீண் பெருமை கொள்ளாதே. என்னை விட நீ அழகானவனா? இளம் பச்சை உடலில் சிவந்த மூக்கு. அழகு என்றாலே எல்லோருக்கும் என் நினைவுதான் வரும்” என்றது கிளி.

வண்ணத்துப்பூச்சி அவர்களைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தது.” “நீங்கள் மூவரும் உங்களை உயர்த்திப் பேசி சண்டையிடுவதைப் பார்த்தால் வேடிக்கையாக உள்ளது. எங்கள் இனத்தைப் பாருங்கள். இத்தனைச் சிறிய உடலில் எத்தனை வண்ணங்கள் கொட்டிக் கிடக்கின்றன! ஓவியனின் கை தேர்ந்த ஓவியம்போல என் மேனி உள்ளது. என்னை மறந்து விட்டு நீங்கள்

தற்பெருமை பேசுவது மிகவும் அபத்தமானது” என்று மீண்டும் சிரித்தது.

அந்தப் பக்கம் வந்த நரி, சண்டையைக் கண்டது. ’அடடே... இவர்கள் சண்டை போடுவதை சிங்கத்திடம் சொன்னால் போதும். ஒரு வழி பண்ணி விடுவார்’ என்று நினைத்துக்கொண்டு ஓடியது.

ஒரு பெரிய மரத்தின் கீழ் சிங்கம் அமர்ந்திருக்க, மற்ற விலங்குகள் ஆவலுடன் காத்திருந்தன. மயில், கிளி, குயில், வண்ணத்துப்பூச்சி நான்கும் அமைதியாக நின்றுகொண்டிருந்தன.

சிங்கம் பேச ஆரம்பித்தது. “நீங்கள் நால்வரும் நான்தான் பெரியவன் என்று சண்டையிட்டீர்களாமே, உண்மைதானா? உங்களில் யார் அழகு என்பதை நான் கண்டுபிடிக்கிறேன். மயிலே நான் சொல்லும்வரை நீ வெயிலில் நிற்க வேண்டும். குயிலே நீ ஒரு முள் செடியின் மீது அமர்ந்து கொள்ள வேண்டும். கிளியே, இதோ இந்தக் கனியை நீ பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். !உண்ணக் கூடாது. வண்ணத்துப்பூச்சியே, நீ அந்த மரத்தின் மேலே உள்ள பூக்களைச் சுற்றி சுற்றி வர வேண்டும். மறந்தும் கூட எந்தப் பூவிலும் தேன் எடுக்க அமர்ந்து விடக் கூடாது” என்றது.

சிங்கம் சொன்னபடியே நான்கும் செய்தன.

சிறிது நேரம் கழித்து, “ராஜா, என்னால் வெயிலின் சூட்டைத் தாங்க முடியவில்லை. நிழலுக்கு வர அனுமதியுங்கள்” என்று மயில் கெஞ்சியது.

“மன்னா, பழத்தைக் கொத்தாமல் இருக்க இயலவில்லை. பழத்தை உண்ண உத்தரவிடுங்கள்" என்றது கிளி.

“சிங்க ராஜா, முள் செடியில் அமர்ந்து என் கால்கள் வலிக்கின்றன. என்னை இதிலிருந்து விடுவியுங்கள்” என்று குயில் மன்றாடியது.

“வன ராஜா, என் சிறகுகள் வலிக்கின்றன. பூக்களில் தேன் குடிக்கா விட்டால் எனக்குப் பைத்தியமே பிடித்துவிடும் போலிருக்கிறது” என்றது வண்ணத்துப்பூச்சி.

சிங்கம் இரக்கம் கொண்டது. “சரி, எல்லோரும் மரத்தடிக்கு வாருங்கள்” என்றதும் தண்டனையில் தப்பிவிட்ட மகிழ்ச்சியில் மர நிழலில் வந்து நின்றன.

“இப்போது உங்கள் அழகு உங்களுக்கு எந்த விதத்திலாவது உதவியதா? இல்லையே... மயிலுக்கு நிழல் தேவைப்பட்டது. கிளிக்குக் கனி தேவைப்பட்டது. குயிலுக்கு நல்ல இடம் தேவைப்பட்டது. வண்ணத்துப்பூச்சிக்குத் தேன் தேவைப்பட்டது. இவை எல்லாவற்றையும் இந்த மரம்தான் தருகிறது. மரம் தன்னைப் பற்றி எப்போதாவது தற்பெருமை பேசியது உண்டா? பலருக்கு உதவும்

மரம் அமைதியாக இருக்கிறது. ஆனால் நீங்கள் உங்கள் பெருமையைப் பேசி, கர்வம் கொள்கிறீர்கள். இந்த உண்மையை உணர்த்தவே நான் உங்களுக்குப் பரீட்சை வைத்தேன்” என்றது சிங்கம்.

“ராஜா, எங்களை மன்னித்து விடுங்கள். இனிமேல் எங்களைப் பற்றிப் பெருமை பேசுவதை விட்டு, மரங்களின் பெருமையையும் அதை வளர்க்க வேண்டிய அவசியத்தையும் பேசுவோம்.” என்றது மயில்.

சிங்கத்தின் தீர்ப்பைக் கண்டு வியந்த விலங்குகளும் பறவைகளும் மனமாரப் பாராட்டிச் சென்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in