

கடல்வாழ் உயிரினங்கள் ஓங்கிலைத் (டால்பின்) தலைவராகத் தேர்ந்தெடுத்து இருந்தன. ஓங்கில் தலைவரானதும் சில சட்டங்களைக் கொண்டுவந்திருந்தது. இனப்பெருக்கக் காலத்தில் இருக்கும் மீன்களை வேட்டையாடக் கூடாது. மீன் முட்டைகளை உடைக்கக் கூடாது.
பசிக்குதான் வேட்டையாட வேண்டும். பொழுதுபோக்குக்காக வேட்டையாடக் கூடாது என்று எல்லாம் சட்டம் கொண்டுவந்ததால், கடல்வாழ் உயிரினங்களின் அன்பு ஓங்கிலுக்கு அதிகமாகவே இருந்தது. ஆனால், ஒரு கணவாய்க்கு மட்டும் தான் தலைவராக முடியவில்லையே என்கிற வருத்தம் இருந்தது. அதனால் தினமும் ஒரு பாறையிடம் சென்று ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தது. ஆனால், அதை முதலில் யாருமே கண்டுகொள்ளவில்லை.
சில நாள்களுக்குப் பிறகு கடல்வாழ் உயிரினங்கள் கணவாயைக் கவனிக்க ஆரம்பித்தன. ‘ஏன் இப்படிச் செய்கிறது, ஏன் இப்படிச் செய்கிறது’ என்று அறிய எல்லாருக்கும் ஆர்வம் வந்துவிட்டது. நட்சத்திரமீன் கணவாயிடம் சென்று ஏன் இப்படிச் செய்கிறாய் என்று கேட்டது. “நான்தான் கடல்தேவதை அனுப்பிய தூதுவன். தினமும் கடல் தேவதை கிட்ட பேசிட்டு இருக்கேன். தேவதையோட மொழி உங்களுக்குப் புரியாது” என்று சொன்னது கணவாய். “அப்படியா! தேவதை என்ன சொன்னாங்க?” என்று ஆச்சரியமாகக் கேட்டது நட்சத்திரமீன்.
“உங்களை எல்லாம் நான்தான் ஆட்சி செய்யணுமாம். தவறா ஒரு தலைவரைத் தேர்ந்தெடுத்துட்டீங்களாம். இதுக்கு நீங்க வருத்தப்படப் போறீங்கன்னு சொல்லச் சொன்னாங்க தேவதை. அதான் உங்களை எல்லாம் நினைச்சு எனக்குக் கவலையா இருக்குது. எதுவும் கெட்டது நடக்கக் கூடாதுன்னு தேவதை கிட்ட உங்களுக்காகத் தினமும் வேண்டிக்கிறேன்” என்றது கணவாய். நட்சத்திரமீனும் அதை உண்மை என்று நம்பி, பலரிடம் சென்று சொல்லிக்கொண்டிருந்தது.
அன்று நட்சத்திரமீன் கடலாமையிடம் சொன்ன விஷயத்தை, அது ஒரு சொறி (ஜெல்லி) மீனிடம் சொன்னது. “அந்தக் கணவாய்க்கு தேவதை தன்னோட சக்தியை எல்லாம் கொடுத்திருக்காம். நடக்க முடியாத நட்சத்திரமீனைத் தன் சக்தியால நடக்க வச்சுச்சாம்” என்று ஒரு பொய்யான தகவலைச் சேர்த்துச் சொல்லிவிட்டது கடலாமை. அதை சொறிமீன் கடல்குதிரையிடம் சொல்லும்போது, “நடக்க முடியாத நட்சத்திரமீன் நடந்துச்சாம், ஆமைக்கு றெக்கை முளைச்சுச்சாம்” என்று சேர்த்துச் சொல்லிவிட்டது.
இப்படி ஒருவரிடம் இருந்து இன்னொவரிடம் தகவல் போகும்போது கட்டுக்கதைகளும் கூடிக்கொண்டே சென்றன. அந்தப் பகுதியில் இருந்த பெரும்பாலான உயிரினங்கள், கணவாய்தான் தேவதை அனுப்பிய தூதுவன் என்று நம்ப ஆரம்பித்துவிட்டன. எல்லாரும் தினமும் வந்து கணவாயை வணங்கி, வாழ்த்துப் பெற்றுச் சென்றன. இவற்றை எல்லாம் ஓங்கில் கவலையாகப் பார்த்துக்கொண்டு இருந்தது.
அறியாமையைப் போக்குவதும் ஒரு தலைவனோட கடமை என்று நினைத்தது. ‘கண்ணால் பார்ப்பதும் பொய். காதால் கேட்பதும் பொய். தீர விசாரிப்பதே மெய்’ என்கிற வாசகங்களை ஆமை, நண்டு ஆகியவற்றின் ஓடுகளில் எழுதி எல்லா இடங்களுக்கும் பிரச்சாரம் செய்யுமாறு அனுப்பி வைத்தது.
நண்டுகளும் கடலாமைகளும் சுற்றிச்சுற்றி வந்தன. அவற்றை எல்லாம் வாசித்த கடல்வாழ் உயிரினங்கள் யோசிக்க ஆரம்பித்தன. கணவாய் சொல்வதை அப்படியே நம்பிவிட்டோமே, தீர விசாரிக்கவே இல்லையே என்று நினைத்தன. கடல்வாழ் உயிரினங்கள் எல்லாம் கணவாயிடம் வந்து, தங்கள் முன் உன் சக்தியைக் காட்டுமாறு கேட்டன.
கணவாயால் ஒன்றுமே செய்ய இயலவில்லை. அதன் பிறகு அந்தக் கணவாயை யாருமே கண்டுகொள்ளவில்லை. கடல்வாழ் உயிரினங்கள் அவரவர் வேலையைப் பார்க்க ஆரம்பித்தன. ஓங்கிலின் முயற்சியால் மீண்டும் அந்தப் பகுதி இயல்பு நிலைக்குத் திரும்பியது. நண்டுகளுக்கும் கடலாமைகளுக்கும் ஒரு தலைவராக ஓங்கில், நன்றி சொன்னது.