

வீட்டில் வளர்க்கப்படும் பூனையால் பாம்பைக் கொல்ல முடியுமா, டிங்கு? - வி. நரேந்திரன், 6-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, விருதுநகர்.
பூனைகளுக்கு இயற்கையாகவே வேட்டையாடும் திறன் உண்டு. எனவே துரத்துவது, பிடிப்பது, கொல்வது போன்றவற்றை இயற்கையாகவே செய்கின்றன. பூனைகள் வேட்டையாடிகள் என்பதால் பாம்புகளைக் கண்டதும் துரத்தி, பிடித்து, கொல்வதற்கு சாத்தியம் அதிகமாக இருக்கிறது. விஷம் இல்லாத பாம்புகள் என்றால் சண்டையில் பூனைகளே வெற்றி பெறுகின்றன, நரேந்திரன்.
பூமியில் தோன்றிய முதல் உயிரினம் அமீபாவா? - இரா. முத்துக்குமார், 7-ம் வகுப்பு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, தங்களாச்சேரி, மதுரை.
பூமியில் தோன்றிய முதல் உயிரினம் பாக்டீரியா. ஒரு செல் உயிரியான பாக்டீரியாக்கள் Prokaryotes என்று அழைக்கப்படுகின்றன. முதல் உயிரினம் தோன்றி சுமார் 100 கோடி ஆண்டுகளுக்குப் பிறகே ஒரு செல் உயிரியான அமீபா உருவாகியிருக்கிறது, முத்துக்குமார்.
பசுவின் சிறுநீருக்கு நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் உண்டா, டிங்கு? - கே. திவ்யா, 7-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, வேலூர்.
பாரம்பரிய மருத்துவத்தில் பசுவின் சிறுநீரைச் சேர்த்து மருந்து தயாரிக்கிறார்கள். நவீன மருத்துவம் வளர்ந்துவிட்ட இந்தக் காலத்தில் பசுவின் சிறுநீர் நோயைக் குணமாக்குகிறது என்பதை நிரூபித்திருக்க வேண்டும். இதுவரை அப்படி அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. அதனால் பசுவின் கழிவான சிறுநீரைக் குடிப்பதால் நோய் குணமாகும் என்பதற்கு எந்தவிதமான அறிவியல் சான்றும் இல்லை, திவ்யா.