Last Updated : 05 Feb, 2025 06:17 AM

 

Published : 05 Feb 2025 06:17 AM
Last Updated : 05 Feb 2025 06:17 AM

நீச்சல் தெரியாத சிங்கக்குட்டி | கதை

குறிஞ்சிக்காட்டின் சிங்கராஜாவுக்குத் தன் குட்டியை நினைத்துக் கவலையாக இருந்தது. மலையடி வாரத்தில் இருந்த காட்டில் அடிக்கடி மழை பெய்து, வெள்ளம் சூழ்ந்துகொள்ளும். அதனால் காட்டிலுள்ள விலங்குகள் நன்றாக நீந்தக் கற்று வைத்திருந்தன. ஆனால், சிங்கக்குட்டிக்கு மட்டும் நீச்சல் தெரியவில்லை.

சிங்கராஜா சற்று உயரமான குகையில்தான் வசித்தது. காட்டில் வெள்ளம் வந்தாலும் குகைக்குப் பாதிப்பு வராது. அதனால் சிங்கக்குட்டி குகையை விட்டு வெளியே வராமல் இருந்தது. தனக்குப் பிறகு அரசனாகப் போகிற சிங்கக்குட்டி இப்படி பயப்படுகிறானே என்று வருத்தப்பட்டது சிங்கராஜா.

சிங்கக்குட்டிக்கு நீச்சல் கற்றுக் கொடுப்பதற்காக ஆமையை வரவழைத்தது. ஆமையும் சிங்கக் குட்டியை அழைத்துக் கொண்டு ஆற்றங்கரைக்கு வந்தது. “இளவரசரே, ஆற்றில் இறங்குங்கள். பிறகு நான் சொல்வது போல தலையைத் தண்ணீருக்கு மேலே தெரியும்படி வைத்துக் கொண்டு, நான்கு கால் களையும் நன்றாக அசையுங்கள்” என்றது ஆமை. “ஐயோ, நான் ஆற்றில் இறங்க மாட்டேன். தண்ணீரில் மூழ்கிவிடுவேன்” என்று பயந்துகொண்டே சொன்னது சிங்கக்குட்டி.

“பயப்படாதீர்கள் இளவரசரே, நான் அருகில்தான் இருப்பேன். நீங்கள் நீருக்குள் மூழ்கினால் உங்களை மேலே தூக்கிக் கொண்டு வந்துவிடுவேன். நீரில் இறங்காமல் நீந்தக் கற்றுக்கொள்ள முடியாது.” சிங்கக்குட்டி ஆற்றில் இறங்க மறுத்து, குகைக்குத் திரும்பிவிட்டது.

“அரசே, நான் எவ்வளவோ தைரியம் சொல்லியும் இளவரசர் நீரில் இறங்கவே பயப்படுகிறார். நான் எப்படி நீந்தக் கற்றுக் கொடுக்க முடியும்?” என்று கேட்டது ஆமை. ஆமையை அனுப்பிவிட்டு, சிங்கக்குட்டிக்கு நீந்தக் கற்றுக் கொடுக்கும்படி சிறுத்தையிடம் சொன்னது சிங்கராஜா. சிறுத்தை எவ்வளவோ தைரியம் சொல்லியும் சிங்கக்குட்டி நீரில் இறங்க மறுத்து, குகைக்கு ஓடிவிட்டது.

அடுத்து சிங்கராஜா நீர்யானையை அழைத்து, சிங்கக்குட்டிக்கு நீந்தக் கற்றுக் கொடுக்கும்படி சொன்னது. நீர்யானையிடமும் சிங்கக்குட்டி அப்படியே நடந்துகொண்டது. ‘இப்படியே இவன் பயந்துகொண்டிருந்தால் எப்படி நீச்சல் கற்றுக் கொள்வான்?’ என்று சிங்கராஜா கவலை அடைந்தது. “இளவரசருக்கு யார் நீச்சல் கற்றுக் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு மிகச் சிறந்த பரிசு தருவேன்” என்று அறிவித்தது சிங்கராஜா.

மறுநாள் சிங்கத்தின் குகை வாசலில் கரடி வந்து நின்றது. “அரசே, நம் இளவரசருக்கு நான் நீந்தக் கற்றுத் தருகிறேன். நாளையிலிருந்து பயிற்சியைத் தொடங்குகிறேன். ஆனால், இளவரசருக்குத் துணையாக வேறு யாரும் வர வேண்டாம்” என்றது கரடி.

“கரடியாரே, நீங்கள் இளவரசருக்கு நீச்சல் கற்றுக் கொடுக்கும்போது வேறு யாருமே வரமாட்டோம்” என்று உறுதி கூறியது சிங்கராஜா. மறுநாளிலிருந்து சிங்கக்குட்டிக்கான நீச்சல் பயிற்சி தொடங்கியது. கரடி சிங்கக்குட்டியை ஆற்றுக்கே அழைத்துச் செல்லவில்லை. ஒரு மரத்தடியில் அமரவைத்து சிறிது நேரம் சிங்கக்குட்டியிடம் பேசிக்கொண்டிருந்தது. இப்படியே சில நாள்கள் சென்றன.

பிறகு திடீரென்று ஒருநாள் சிங்கக்குட்டியை அழைத்துக் கொண்டு ஆற்றுக்குச் சென்றது கரடி. “இளவரசரே, ஆற்றில் இறங்குங்கள். தலையை மட்டும் நீருக்கு மேலே உயர்த்தி வைத்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் சுவாசிக்க முடியும். தண்ணீருக்குள் உங்கள் கால்களை நன்றாக அசைத்துக்கொண்டே நகருங்கள்.”

உடனே சிங்கக்குட்டியும் கரடி சொன்னபடியே செய்தது. இப்போது சிங்கக்குட்டி அழகாக நீரில் நீந்திச் சென்றது. சிங்கக்குட்டியால் சரிவர நீந்த முடியாதபோது கரடி அதைப் பிடித்துக்கொள்ளும். விரைவிலேயே சிங்கக்குட்டி ஆற்றில் வெகுதூரம் நீந்திச் செல்லும் அளவுக்கு நீந்தக் கற்றுக் கொண்டது.

ஒரு வாரம் கழித்து, சிங்கக்குட்டி எவ்வளவு தூரம் நீந்தக் கற்றிருக்கிறது என்று பார்ப்பதற்காகச் சிங்கராஜா வந்தது. அதற்குத் தன் கண்களையே நம்ப முடியவில்லை. சிங்கக்குட்டி ஆற்றில் நன்றாக நீச்சல் அடித்து விளையாடிக்கொண்டிருந்தது. “கரடியாரே, இவ்வளவு நாளும் ஆற்றில் இறங்கவே பயந்து கொண்டிருந்த இளவரசரை எப்படி நீந்த வைத்தீர்கள்?” என்று கேட்டது சிங்கராஜா.

“அரசே, இவ்வளவு நாளும் இளவரசரின் மனதில் பயம் இருந்ததற்கு அவரின் சுயநலம்தான் காரணமாக இருந்தது. அந்தச் சுயநலத்தை மாற்றிவிட்டேன். இளவரசரும் ஆற்றில் இறங்கி நீச்சல் பழகிவிட்டார்” என்றது கரடி. “சுயலத்தை மாற்றினால் பயம் போய்விடுமா? என்ன சொல்கிறீர்கள்?” “அரசே, ஆற்றில் இறங்கினால், தான் மூழ்கி விடுவோமோ என்று தன்னைப் பற்றி மட்டுமே இளவரசர் நினைத்துக் கொண்டிருந்தார்.

நீச்சல் கற்றுக்கொண்டால் வெள்ளம் வரும்போது தன்னையும் காப்பாற்றிக் கொள்ளலாம், நீச்சல் அறியாத மற்றவர்களையும் வெள்ளத்திலிருந்து காப்பாற்றலாம் என்று இளவரசரிடம் கூறினேன். காட்டின் அரசராகப் போகிறவர் மற்றவர்களைக் காக்கும் திறமையோடு இருக்க வேண்டாமா என்று கேட்டேன்.

இளவரசரின் மனதில் சுயநலம் போய், பொதுநலம் வந்துவிட்டது. அதனால் ஆற்றில் இறங்கும் பயமும் நீங்கிவிட்டது” என்று கரடி சொல்லி முடித்தது. கரடியின் அறிவாற்றலைக் கண்டு வியந்த சிங்கராஜா, காட்டின் அமைச்சராக நியமித்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x