

நாம் அழும்போது வரும் கண்ணீருக்கும் நாம் சிரிக்கும்போது வரும் கண்ணீருக்கும் வித்தியாசம் இருக்கிறதா, டிங்கு? - ஜி. இனியா, 8-ம் வகுப்பு, தி விஜய் மில்லினியம் மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி.
நல்ல கேள்வி, இனியா. அழுகை என்பது உணர்வின் வெளிப்பாடு. வலி, துக்கம், இழிவு, இயலாமை போன்ற நிகழ்வுகளின்போது நம் உணர்வு அழுகையாக வெளிப்படுகிறது. தாங்க முடியாத வலி, பிரியத்துக்குரியவரின் மரணம், மற்றவர்கள் தரக்குறைவாகப் பேசும்போது / நடத்தும்போது, நம்மால் ஒரு செயலைச் செய்ய முடியாதபோது செக்ரடோமோட்டார் (Secretomotor) நுணுக்கமாகச் செயல்பட்டு, கண்ணீர்ச் சுரப்பியிலிருந்து (Lacrimal Gland) கண்ணீரைச் சுரக்க வைக்கிறது.
சில நேரம் மகிழ்ச்சியிலும் கண்ணீர் சுரக்கும்; இதை ஆனந்தக் கண்ணீர் என்று சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். வருத்தமான கண்ணீருக்கும் மகிழ்ச்சியான கண்ணீருக்கும் இடையே ரசாயனக் கலப்பில் மாற்றம் இருக்கிறது. ஆண்களைவிடப் பெண்களும் குழந்தைகளும் அதிகமாக அழுகின்றனர். விலங்குகள் நம்மைப்போல் உணர்ச்சிவசப்பட்டு அழுவதில்லை. கண்களில் தூசி, வேண்டாத பொருள் உறுத்தும்போது கண்ணீர் விடுகின்றன.
நமக்குக் காய்ச்சல் வருவதுபோல் விலங்குகளுக்கும் காய்ச்சல் வருமா, டிங்கு? - ரா. நிவேதா, 6-ம் வகுப்பு, ஆர்கா கிரீன் பள்ளி, குலசேகரம், கன்னியாகுமரி.
வைரஸ் கிருமியால் பாலூட்டிகளுக்குச் சளியும் காய்ச்சலும் ஏற்படுகின்றன. வீட்டில் வளர்க்கும் நாய், பூனையிலிருந்து அனைத்துப் பாலூட்டிகளும் காய்ச்சலுக்கு உள்ளாகின்றன. தாவரங் களைச் சாப்பிடும் விலங்குகள் மூலிகைத் தாவரங்களைத் தின்று குணப்படுத்திக்கொள்கின்றன. பிற விலங்குகள் சில நாள்கள் ஓய்வெடுத்து, குணம் பெறுகின்றன. தண்ணீரில் வசிக்கும் மீன்களுக்கும் ஊர்வனவற்றுக்கும்கூடத் தொற்றின் காரணமாக உடல் வெப்பநிலை உயர்கிறது.
மீன்களின் உடல் வெப்பம் உயரும்போது, குளிர்ச்சியான பகுதியிலிருந்து வெப்பமான பகுதியை நோக்கிச் சென்றுவிடுகின்றன. ஊர்வனவற்றால் சூழலுக்கு ஏற்ப உடல் வெப்பநிலையை மாற்றிக்கொள்ள இயலும் என்பதால், காய்ச்சலின்போது வெப்பத்தைக் குறைத்துக்கொள்கின்றன. மனிதர்களின் மூலம் விலங்குகளுக்குச் சளியோ காய்ச்சலோ தொற்றுவதில்லை, நிவேதா.