சர் சி.வி.ராமன் | விஞ்ஞானிகள் - 18

சர் சி.வி.ராமன் | விஞ்ஞானிகள் - 18
Updated on
2 min read

அறிவியல் துறையில் நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர், முதல் இந்தியர் சந்திரசேகர வெங்கட ராமன் (சர்.சி.வி. ராமன்). இவரின் புகழ்பெற்ற ஆராய்ச்சியான ‘ராமன் விளைவு’ கண்டறிந்த நாளான பிப்ரவரி 28 அன்று ’தேசிய அறிவியல் தினம்’ ஆக இந்தியாவில் கடைப்பிடிக்கப்படுகிறது.

1888, நவம்பர் 7 அன்று திருச்சியிலுள்ள திருவானைக்காவலில் பிறந்தார் ராமன். தந்தை சந்திரசேகர் ஆசிரியராக இருந்தார். பின்னர் விசாகப்பட்டினத்தில் கல்லூரி விரிவுரையாளராகப் பணியாற்றியதால் குடும்பம் அங்கே சென்றது. பள்ளிப் படிப்பை அதிக மதிப்பெண்களுடன் விசாகப்பட்டினத்தில் முடித்த சி.வி. ராமன், 1904இல் சென்னை பிரசிடென்சி கல்லூரியில் பி.ஏ. படிப்பை முடித்தார். இயற்பியலில் முதல் இடத்தையும் தங்கப் பதக்கத்தையும் பெற்றார். 1907இல் அதிக மதிப்பெண்களைப் பெற்று முதுகலைப் பட்டத்தை முடித்தார்.

மாணவராக இருந்த காலத்திலேயே ஒளியியல், ஒலியியல் இரண்டிலும் ஆராய்ச்சி செய்து, ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட ஆரம்பித்துவிட்டார் சி.வி.ராமன். 1907இல் நிதித்துறையில் தேர்வு எழுதி முதலிடம் பெற்றார். கொல்கத்தாவில் கணக்குத் துறை தலைமை அலுவலராக வேலை செய்தார். அங்கு அவருடைய பெரும்பான்மை நேரத்தை அலுவலகப் பணிகளே எடுத்துக் கொண்டன. 1919இல் கொல்கத்தாவில் உள்ள இந்திய அறிவியல் சங்கத்தின் கெளரவ செயலாளரானார். அப்போதுதான் மீண்டும் ஆராய்ச்சியைத் தொடர்வதற்கான வாய்ப்பு கிடைத்தது.

கடல் ஏன் நீல நிறமாக இருக்கிறது என்று யோசித்தார் ராமன். வானத்தின் நீலத்தைக் கடல் பிரதிபலிப்பதால் கடல் நீலமாக இருக்கிறது என்பது ராலேயின் முடிவு. இந்தப் பதில் ராமனுக்குத் திருப்தியாக இல்லை. எனவே அது குறித்து தொடர்ந்து ஆராய்ச்சி செய்தார்.

ஒளி ஓர் ஒளிபுகும் ஊடகத்தின் வழியே செல்லும்போது, சிதறடிக்கப்பட்டு அதன் அலைநீளத்தில் மாறுதல் ஏற்படுகிறது. இதுவே ’ராமன் சிதறல்’ (Raman Scattering) அல்லது ’ராமன் விளைவு’ (Raman Effect) என அழைக்கப்படுகிறது. இவ்வாறு உள்புகும் ஒளியில் உள்ள போட்டான்களுக்கும் மூலக்கூறுகளுக்கும் இடையே ஆற்றல் பரிமாற்றம் நிகழும்போது வெளிவரும் ஒளியின் அலைநீளம் மாறுகிறது. இந்தக் கண்டறிதலை 1928, பிப்ரவரி 28 அன்று ராமன் வெளியிட்டார். இந்த நாளைத்தான் 1987ஆம் ஆண்டு முதல் ’தேசிய அறிவியல் தினம்’ என்று கடைப்பிடித்து வருகிறோம்.

மருத்துவத் துறையில் மருந்துகள் பகுப்பாய்வு, தொழிற்சாலைகளில் ரசாயனக் கலவைகள், ஜவுளித் துறையில் சாயங்கள் போன்றவற்றில் ராமன் விளைவு பயன்படுகிறது. இந்தக் கண்டறிதலுக்காக 1930இல் இயற்பியலுக்கான நோபல் பரிசு சி.வி.ராமனுக்குக் கிடைத்தது.

ராமன் விளைவை அடிப்படையாகக் கொண்டு அடுத்த 12 ஆண்டுகள் உலகம் முழுவதும் 1500 ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளிவந்தன. இந்த ஆய்வுகள் தொழில்துறை வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றின.

இந்திய இயற்பியல் இதழின் ஆசிரியரானார் ராமன். அதில் அவருடய பெரும்பாலான ஆய்வுக் கட்டுரைகள் வெளிவந்தன. 1924இல் லண்டன் ராயல் கழகத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1948 இல் ராமன் ஆராய்ச்சிக் கழகத்தின் இயக்குநரானார். இதற்கு அவரே தன் நிதியிலிருந்து உதவி செய்தார். ராமன் ஆராய்ச்சிக் கழகம் எப்படி நடக்க வேண்டும் என்பதற்கான செயல்முறைகளை வகுத்துக் கொடுத்தார்.

உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு விருதுகள் சி.வி.ராமனைத் தேடி வந்தன. 1954ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான ’பாரத ரத்னா’ இவருக்கு வழங்கப்பட்டது.

தன் வாழ்நாள்வரை இயற்பியலுக்காகத் தொண்டாற்றிய சி.வி.ராமன் 1970, நவம்பர் 21 அன்று மறைந்தார்.

- கட்டுரையாளர், எழுத்தாளர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in