

பறம்பின் பாரி,
உதயசங்கர்,
வானம் வெளியீடு, தொடர்புக்கு: 91765 49991
கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரி, வேள் பாரியாகப் பெரியவர்களுக்கான நாவல் மூலம் பரவலாக அறியப்பட்டுள்ளார். இயற்கையோடு இயைந்து வாழ்ந்த பாரி மன்னனின் இளமைக் காலம் எப்படி இருந்திருக்கும்? அந்தக் காலத்துக்கே நம்மை அழைத்துச் செல்கிறது உதயசங்கர் எழுதியுள்ள 'பறம்பின் பாரி' இளையோர் நாவல்.
காட்டுக்குள்ளே ஒரு பள்ளிக்கூடம்,
குருங்குளம் முத்துராஜா,
மேஜிக் லாம்ப் வெளியீடு,
தொடர்புக்கு: 99425 11302
குழந்தைகளுக்காகப் பாடல் எழுதிவருபவர்களில் முக்கியமானவர் குருங்குளம் முத்துராஜா. குழந்தைகள் மகிழ்ச்சியுடன் பாடுவதற்கு ஏற்ற வகையில், இவருடைய பாடல்கள் எளிமையாக இருக்கும் அதேநேரம், அவர்களுக்கே உரிய அளவுக்கு சில கருத்துகளும் இடம்பெற்றுள்ளன. தமிழை அச்சுறுத்தாமல் சொல்லித் தர இந்தப் பாடல்கள் கைகொடுக்கும்.
கொம்பன் - சிறார் யானைக் கதைகள்,
தொகுப்பு: உமையவன்,
பயில் பதிப்பகம், தொடர்புக்கு: 72000 50073
சமகாலத் தமிழ்ச் சிறார் எழுத்தாளர்கள் 21 பேர் யானையை மையப்படுத்தி எழுதிய சிறார் கதைகளின் தொகுப்பு. இதுபோல் குறிப்பிட்ட தலைப்பின்கீழ் கதைகளைத் தொகுப்பது நல்ல முயற்சி. கதைகளுக்கு இணையாக, புதிதாக வரையப்பட்ட ஓவியங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம்.
அபூவின் செல்லக்குட்டி,
யெஸ். பாலபாரதி,
புக்ஸ் ஃபார் சில்ரன், தொடர்புக்கு: 044 24356935
ஒரு சிறுவனுக்கு டைனசோர் முட்டை கிடைக்கிறது. அதிலிருந்து ஒரு டைனசோர் குட்டி வெளியே வருகிறது. அந்த டைனசோரும் சிறுவனின் நண்பர்களும் என்ன செய்கிறார்கள் என்கிற மிகைபுனைவு சம்பவங்களின் தொகுப்பே கதை. குழந்தைகளுக்குப் பிடித்த இந்த வகைக் கதை, எல்லை மீறிய புனைவாக இல்லாமல் கவனத்துடன் சொல்லப்பட்டுள்ளது.
ஜாதவின் மொலாய் காடு,
சாலை செல்வம்,
இயல் வாகை, தொடர்புக்கு: 9942118080
இந்தியாவில் தனிமனிதராக ஒரு காட்டை உருவாக்கியவர் ஜாதவ் பயேங். அந்தக் காட்டை அவர் எப்படி உருவாக்கினார் என்பதை எளிமையான ஒரு கதையாக, எஸ்.மதனின் வண்ண ஓவியங்களுடன் இந்த நூல் விவரிக்கிறது. வண்ண ஓவியங்கள் கதையை இன்னும் நெருக்கமாக உணரவைக்கின்றன.
வானியல் பாலபாடம்,
சி.ராமலிங்கம்;
வானவியல்:வினாக்களும் விடைகளும்,
சோ.மோகனா,
அறிவியல் வெளியீடு, தொடர்புக்கு: 94880 54683
வானம் என்பது நாம் நாள்தோறும் பார்க்கும் பிரம்மாண்டம். அதன் ஒவ்வோர் அம்சமும் அறிவியல் நிறைந்தது. அதைக் குறித்து வெறுமனே ஆச்சரியப்படுவது மட்டுமல்லாமல், வானியலின் அடிப்படைகளை எளிமையாகப் புரிந்துகொள்வதற்கு இந்த இரண்டு நூல்களும் உதவும். கேள்வி-பதில் வடிவத்தில் இந்த நூல்கள் அமைந்துள்ளன.
பால சாகித்திய புரஸ்கார் விருது வென்ற படைப்புகள், 2010-2024,
ஞா.கலையரசி,
புக்ஸ் ஃபார் சில்ரன், தொடர்புக்கு: 044 24332424
கடந்த 15 ஆண்டுகளாக பால சாகித்ய விருது வழங்கப் பட்டுவருகிறது. அந்த விருதைப் பெற்ற தமிழ் நூல்கள் குறித்து அறிமுகப்படுத்துகிறது இந்த நூல். இந்த நூலை வாசிப்பதன் மூலம் அந்த நூல்களின் தரத்தையும் முக்கியத்துவத்தையும் ஒருசேரப் புரிந்துகொள்ள முடிகிறது.
ஸ்டீவன் ஹாக்கிங்,
கமலாலயன்,
ஓங்கில் கூட்டம் வெளியீடு,
தொடர்புக்கு: 044 24332924
வரலாற்றில் பெரும் தாக்கம் செலுத்திய அறிவியலாளர்களுள் ஒருவர் நம் காலத்தில் வாழ்ந்து மறைந்த ஸ்டீவன் ஹாக்கிங். பதின்வயது வாசகர்களுக்கு அவரை அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் சுவாரசியமாகவும் எளிய முறையிலும் எழுதப்பட்டிருக்கிறது இந்த நூல்.
‘நோ' சொல்லுங்க,
சக.முத்துக்கண்ணன், ச.முத்துக்குமாரி,
மேஜிக் லேம்ப் வெளியீடு,
தொடர்புக்கு: 99425 11302
ஒவ்வொரு மனிதரும் சிந்திக்கத் தெரிந்தவரே. அப்படி இருக்கும்போது காரண, காரியத்தைத் தெரிந்துகொண்டே எதையும் புரிந்துகொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் வேண்டும். அப்படி இல்லாத நிலையில் எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு செய்யக் கூடாது, 'நோ' சொல்ல வேண்டும் என்கிறது இந்தப் புத்தகம்.
நவீனத் தமிழ்ச் சிறார் இலக்கியம்: நோக்கமும் அதன் பாதையும்,
தொகுப்பு: ‘பஞ்சு மிட்டாய்' பிரபு,
புக்ஸ் ஃபார் சில்ரன், தொடர்புக்கு: 044 24332924
தமிழ்ச் சிறார் இலக்கியம் நவீனமடைந்து வருகிறது. இந்தப் பின்னணியில் தமிழ்ச் சிறார் இலக்கியத்தின் வரலாறு, முக்கியப் பங்களிப்பாளர்கள், தற்காலப் போக்குகள் குறித்து ஆழமான கட்டுரைகளுடன் இந்த நூல் தொகுக்கப்பட்டுள்ளது. தற்போது இயங்கிவரும் சிறார் இலக்கிய எழுத்தாளர்களில் முக்கியமானவர்கள் இதற்குப் பங்களித்திருக்கிறார்கள்.