

உ
டலை வளைத்து, நெளிக்க முடிகிறது; கை, கால்களை அசைக்க முடிகிறது என்றால், அதற்கு ‘மூட்டுகள்’ இருப்பதுதான் காரணம். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எலும்புகள் இணையும் இடம்தான், மூட்டு. குறிப்பிட்ட எலும்புகளை இணைக்கக்கூடிய இடைப்பட்ட திசு எதுவோ, அதை வைத்து மூட்டுகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம். நார்த்திசு மூட்டு (Fibrous joint), குருத்தெலும்பு மூட்டு (Cartilaginous joint), நீர்உறை மூட்டு (Synovial joint).
எல்லா மூட்டுகளிலும் எல்லா அசைவுகளும் இருப்பதில்லை. சில மூட்டுகளில் அசைவே இருக்காது. உதாரணமாக, கபால மூட்டில் எந்த எலும்பையும் அசைக்க முடியாது. முகத்தில் உள்ள எலும்புகளில் கீழ்த்தாடையை மட்டும்தான் அசைக்க முடியும். உடலிலேயே அதிக அசைவு தருபவை கை, கால் மூட்டுகள்தான்.
சில மூட்டுகளில் அசைவு ஒரே அச்சில் இருக்கும். அதற்கு ‘ஓரச்சு மூட்டு’ என்று பெயர். உதாரணம், முழங்கை. சில மூட்டுகள் இரண்டு அச்சுகளில் இயங்கும். உதாரணம், மணிக்கட்டு. பல அச்சுகளில் இயங்கும் மூட்டுகளும் உண்டு. உதாரணம், தோள்கள்.
எலும்புகள் அசையும்போது ஒன்றுக்கொன்று உரசுவதும் இல்லை; வலி ஏற்படுவதும் இல்லை. ஏன்? இணையும் எலும்புகளின் முனைகள் சற்றுத் தள்ளி இருப்பது ஒரு காரணம். அதேநேரம் அவை விலகி விடாமல் இருக்கப் பிணையங்களால் பிணைக்கப்பட்டிருப்பதும், பாதுகாப்பான உறையால் மூடப்பட்டிருப்பதும் அடுத்த காரணங்கள். இன்னொரு முக்கியமான விஷயம், எலும்புகள் இணைகிற இடத்தில் குருத்தெலும்புதான் இருக்கும். அதிலுள்ள ஜெலாட்டின் மசகுபோல் இடையில் இருப்பதால், எலும்புகள் நேரடியாக உரசிக்கொள்ள வாய்ப்பில்லை.
எலும்புகள் உடலில் அமைந்துள்ள இடத்தை வைத்து, ‘அச்சுசார் எலும்புக்கூடு’ (Axial skeleton), ‘இணையுறுப்பு எலும்புக்கூடு’ (Appendicular skeleton) எனவும் வகைப்படுத்துகின்றனர். உடலின் மத்தியில் ஓர் அச்சுபோல் இருக்கிற தலை, கழுத்து, மார்பு, முதுகு எலும்புகள் இவை. இரண்டாம் வகையில் கை, கால், தோள்பட்டை, காரை எலும்புகள் (Clavicles), இடுப்பு எலும்புகள் அடங்கும்.
தலையில் மூளையை மூடியுள்ள கபாலத்தில் 8, முகத்தில் 14 என 22 எலும்புகள் உள்ளன. ஒவ்வொரு காதிலும் 3 எலும்புகள் உள்ளன. அடிப்பக்கக் கபாலத்தில் பல துளைகள் உள்ளன. அவற்றின் வழியாகவே ரத்தக்குழாய்கள் மூளைக்குச் சென்று திரும்புகின்றன; மூளையிலிருந்து நரம்புகள் வெளிவருகின்றன. அவற்றின் மத்தியில் இருக்கும் துளைதான், பெருந்துளை (Foramen magnum). அதன் வழியாக மூளையிலிருந்து 45 செ.மீ. நீளத்தில் ஒரு கேபிள்போல் கிளம்புகிறது தண்டுவடம் (Spinal cord). இதில் மத்திய நரம்புகள் இணைந்துள்ளன.
இது முதுகுத்தண்டுக் குழல் (Vertebral canal) வழியாக உடலுக்கு வருகிறது. ஒவ்வொரு விநாடியும் உடலின் நடவடிக்கைகளையும், தினசரி லட்சக்கணக்கான தகவல்களையும் மூளைக்கு அனுப்புவதும் பெறுவதும் தண்டுவடம்தான். முதுகுத்தண்டின் (Vertebral column) மேல்முனையில் கபாலம் அமர்ந்துள்ளது. முக எலும்புகள் பார்வை, செவிப்புலன், செரிமானம் மற்றும் சுவாச மண்டலத்துக்கு வாசல் அமைக்கின்றன.
கழுத்தில் நாக்கைத் தாங்கும் நாவடி எலும்பு (Hyoid bone) உள்ளது. உடலில் எந்த ஓர் எலும்புடனும் இணையாத எலும்பு இது ஒன்றே. குரல்வளையில் (Larynx) 9 குருத்தெலும்புகள் உள்ளன.
இயற்கையிலேயே உடலின் அச்சாக அமைந்திருக்கும் முதுகுத்தண்டில் 24 முள்ளெலும்புகள் (Vertebrae) உள்ளன. அவை: கழுத்தில் 7, மார்பில் 12, முதுகில் 5. தவிர, திரிகம் (Sacrum) 1, வால் எலும்பு (Coccyx) 1. முதுகுத்தண்டானது தண்டுவடத்தைப் பாதுகாக்கிறது; விலா எலும்புகளுக்கும் முதுகுத் தசைகளுக்கும் பின்புற இணைப்பிடங்களாகச் செயல்படுகிறது. ‘அட்லஸ்’ எனும் முதல் முள்ளெலும்பு கபாலத்தைத் தாங்குவது மட்டுமில்லாமல், ஓர் அச்சுபோல் இயங்குவதால், முதுகுத்தண்டில் அதிகபட்ச அசைவையும் தருகிறது. அதனால்தான் நம்மால் தலையை இரண்டு பக்கமும் திருப்ப முடிகிறது.
இதயத்துக்கும் நுரையீரல்களுக்கும் பாதுகாப்பு தருகிற மார்புக்கூட்டில் மொத்தம் 12 ஜோடி விலா எலும்புகளும் ஒரு நடு நெஞ்செலும்பும் (Sternum) உள்ளன. இவற்றில் முதல் 7 எலும்புகள் மார்ப்புக் கூட்டின் முன்புறத்தில் நடு நெஞ்செலும்புடனும் பின்புறத்தில் முதுகுத்தண்டுடனும் இணைந்துள்ளன. இவை ‘மெய் விலா எலும்புகள்’ (True ribs). 8, 9, 10-வது விலா எலும்புகள் இரண்டு பக்கமும் 7-வது விலா எலும்புடன் இணைகின்றன.
இதனால் இவை ‘பொய் விலா எலும்புகள்’ (False ribs). கடைசி 2 ஜோடி விலா எலும்புகள் முதுதுகுத்தண்டில் மட்டும் இணைந்துள்ளன. முன்பக்கத்தில் தொங்குகின்றன. ஆகவே, அவை ‘தொங்கு விலா எலும்புகள்’ (Floating ribs). இவை தவிர, தோள்பட்டை எலும்பும் காரை எலும்பும் தலா ஒரு ஜோடி உள்ளது. இவை கை எலும்பை மார்புக்கூட்டுடன் இணைக்கின்றன. மார்புக்கூடு இருப்பதால்தான் நம்மால் சுவாசிக்க முடிகிறது.
ஒவ்வொரு கையிலும் 30 எலும்புகள் உள்ளன. மேல் கையில் 1, முன்கையில் 2, மணிக்கட்டில் 8, உள்ளங்கையில் 5, விரல்களில் 14. ஒவ்வொரு காலிலும் 30 எலும்புகள் உள்ளன. தொடையில் 1, காலில் 2, முழங்கால் சில்லு 1, கணுக்காலில் 7, பாதத்தில் 5, விரல்களில் 14. பாத எலும்புகள் வளைந்திருப்பது ஒரு சிறப்புத் தன்மை. இந்த அமைப்பால்தான் நம்மால் வேகமாக நடக்கவும் ஓடவும் முடிகிறது. தட்டைப்பாதம் உள்ளவர்களால் மற்றவர்களைப்போல் வேகமாக ஓட முடியாது.
குழிபோல் அமைந்திருக்கும் இடுப்பெலும்பில் 2 எலும்புகள் உள்ளன. இதில் பக்கத்துக்கு ஒன்றாகத் தொடை எலும்புகள் இணைகின்றன. பின்புறத்தில் முதுகுத்தண்டுடன் இது இணைந்துள்ளது. இடுப்பெலும்பு இயற்கையிலேயே ஆண்களுக்கு ஆழமாகவும் குறுகலாகவும் இருக்கிறது. மாறாக, இது பெண்களுக்குப் பெரிதாகவும் அகலமாகவும் இருக்கிறது. இந்த அமைப்பு இவர்களுக்குக் குழந்தைப் பிறப்புக்கு உதவுகிறது.
பறவைகளின் எலும்புக்கூடு மனிதரின் எலும்புக்கூட்டோடு பல வழிகளில் ஒத்துப் போகிறது. ஆனால், அவை பறப்பதற்கு உதவும் விதத்தில், எலும்புகளின் எடை குறைவாக இருக்கின்றன.
முதுகெலும்புள்ள விலங்குகளைப் பொறுத்த அளவில் வால் ஒன்றைத் தவிர, மற்ற எலும்புகள் பெரும்பாலும் மனிதரோடு ஒத்துப் போகின்றன. நடப்பதில் மட்டும் சில வித்தியாசங்கள். உதாரணமாக, மனிதர்கள் பாதங்களில் நடக்கிறார்கள். நாயும் பூனையும் விரல்களில் நடக்கின்றன. குதிரையும் பன்றியும் விரல்நகங்களில் நடக்கின்றன.
(இன்னும் அறிவோம்)
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்
தொடர்புக்கு: gganesan95@gmail.com