

நெருப்பு மேல் நோக்கி எரிவது ஏன்? - ஆர். நிவேதா, 6-ம் வகுப்பு, ஆர்கா கிரீன் பள்ளி, அண்டூர், குமரி.
நெருப்பு என்பது ஒரு வேதிச் செயல்பாடு. வெப்பம், எரிபொருள், ஆக்சிஜன் மூன்றும் இருந்தால்தான் நெருப்பு உண்டாகும். நெருப்பிலிருந்து வெளிவரும் வெப்ப ஆற்றல், சுற்றியுள்ள காற்றைச் சூடேற்றுகிறது. அப்போது காற்றைவிட, வெப்பக்காற்றின் எடை குறைவாக இருக்கிறது.
அதனால் பூமியின் ஈர்ப்பு விசையைத் தாண்டி, எடை குறைவான வெப்பக்காற்று மேல் நோக்கிச் செல்கிறது. விளக்கு, மெழுகுவர்த்தி, அடுப்பு என எதில் உருவாகும் நெருப்பும் மேல்நோக்கியே எரிகிறது. மெழுகுவர்த்தியைத் திருப்பிப் பிடித்தால்கூட, நெருப்பு மேல்நோக்கிதான் எரியும், நிவேதா.
உயிரோடு இருக்கும்போது தண்ணீரில் மூழ்கும் உடல், இறந்த பிறகு மிதப்பது ஏன், டிங்கு? - வி. நரேஷ், 8-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, கோவை.
நல்ல கேள்வி, நரேஷ். உயிரோடு இருக்கும் போது தண்ணீரின் அடர்த்தியைவிட உடலின் அடர்த்தி அதிகமாக இருக்கிறது. அதனால் உடல் மூழ்கிவிடுகிறது. அடியில் சென்ற உடலின் நுரையீரலுக்குள் தண்ணீர் அதிகமாகச் சென்றுவிடுவதால் மரணம் ஏற்படுகிறது. இரண்டு, மூன்று நாள்களில் உடல் அழுக ஆரம்பிக்கும்.
உடலின் மேல் பகுதியிலும் உள்பகுதியிலும் பெருகும் பாக்டீரியாக்கள் சர்க்கரையையும் புரதத்தையும் எடுத்துக்கொள்ள ஆரம்பிக்கின்றன. இதனால் உடலில் இருந்து மீத்தேன், அமோனியா, கார்பன் டை ஆக்ஸைடு, ஹைட்ரஜன் வாயுக்கள் வெளியேறுகின்றன.
உடல் அழுகி, வீங்க ஆரம்பிக்கும். உடலிலிருந்து புதிய வாயுக்கள் உருவாகி, உடலை மேல்நோக்கித் தள்ளும். இப்போது உடலின் அடர்த்தி தண்ணீரின் அடர்த்தியைவிடக் குறைவாக இருப்பதால், மேலே வந்து மிதக்கிறது. தலைப்பகுதி தண்ணீருக்குள்தான் இருக்கும். தலையின் எடையைவிட, குறைவான அளவு தண்ணீரை வெளியேற்றுவதால் தலை தண்ணீருக்குள் இருக்கிறது.