

பள்ளிக் குழந்தைகளின் வாசிப்பை மேம்படுத்துவதற்காகத் தமிழ்நாடு அரசு வாசிப்பு இயக்கம் என்கிற பெயரில் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. இதற்காக உருவாக்கப்பட்ட நூல்கள் அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு வாசிக்கக் கொடுக்கப்படுகின்றன.
அதேநேரம் அரசுப் பள்ளிக்கு வெளியே உள்ள குழந்தைகளுக்கும் இதுபோன்ற எளிய மொழியில் அமைந்த நூல்கள் தேவை. அந்த வகையில் பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கம் சிறார் வாசிப்புக்கான நூல்களை பாரதி புத்தகாலயத்துடன் இணைந்து வெளியிட்டுவருகிறது. முதல் கட்டமாக 5 குறுநூல்கள் வெளியாகியிருந்தன. தற்போது அடுத்த வரிசை நூல்கள் வெளியாகியுள்ளன.
இன்றைய குழந்தைகள் தாய்மொழியில் வாசிக்க வைக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. அதற்கு எளிய மொழிநடை, சிறு சிறு வாக்கியங்கள், படங்கள் ஆகியவை தேவை. பொதுவாகவே வாசிப்பு குறைந்துவரும் இந்தக் காலத்தில் இதன் முக்கியத்துவத்தைப் பெற்றோரும் ஆசிரியர்களும் புரிந்துகொள்ள வேண்டும்.
ஈரோடு சர்மிளா எழுதிய ‘ஆந்தையும் மரங்கொத்தியும்', லைலா தேவி எழுதிய ‘நரி என் குழந்தை', ஞா.கலையரசி எழுதிய ‘பறக்கும் பூநாய்', ச. முத்துக்குமாரி எழுதிய ‘நிலாவின் பொம்மை', சக.முத்துக்கண்ணன் எழுதிய ‘ஊசி' ஆகியவை இந்த வரிசையில் இடம்பெற்றுள்ளன. இந்த நூல்களைக் கையில் எடுத்தால் குழந்தைகள் அஞ்சாமல் ஒரு கதையை வாசித்து முடித்துவிடுவார்கள். அந்த அளவுக்குச் சிறிய வாக்கியங்கள், எளிய மொழிநடை, படங்கள் தரப்பட்டுள்ளன.
சிறார் வாசிப்பு நூல் வரிசை,
புக்ஸ் ஃபார் சில்ரன்,
விலை: தலா ரூ. 20,
தொடர்புக்கு: 044-24332924
- அன்பு