வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா? | டிங்குவிடம் கேளுங்கள்

வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா? | டிங்குவிடம் கேளுங்கள்
Updated on
2 min read

வேற்றுகிரகவாசிகள் உண்மையிலேயே பூமியில் இருக்கிறார்களா, டிங்கு? - அ. அருணகிரி ஆதித்யன், 2-ம் வகுப்பு, லட்சுமி மில்ஸ் மெட்ரிக். பள்ளி, கோவில்பட்டி.

பல ஆண்டுகளாகப் பறக்கும் தட்டில் வேற்றுகிரகவாசிகள் வருகிறார்கள்; போகிறார்கள். ஆள்களைத் தூக்கிச் சென்றுவிட்டு, மீண்டும் கொண்டுவந்து விட்டுவிடுகிறார்கள் என்று எல்லாம் சொல்லி, அவற்றுக்கு ஆதாரமாகக் காணொளிகளையும் காட்டுகிறார்கள். ஆனால், இந்த ஆதாரங்களை எல்லாம் விஞ்ஞானிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதி நவீன ஜேம்ஸ் வெப் தொலைநோக்கிகூட இதுவரை வேற்றுகிரகவாசிகள் இருப்பதாகக் கண்டறியவில்லை.

உயிர்கள் வாழக்கூடிய சில கோள்கள் கண்டறியப்பட்டாலும் அவற்றில் மனிதர்களோ மனிதர்களைப் போன்றவர்களோ இருப்பதாகக் கண்டறியப்படவில்லை. அதனால் வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்கள் என்பதிலோ அவர்கள் அடிக்கடி பூமிக்கு வந்து செல்கிறார்கள் என்பதிலோ உண்மை இல்லை. அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படாதவரை எதையும் உண்மை என்று ஏற்றுக்கொள்ள இயலாது. ஆனால், விஞ்ஞானிகள் வேற்றுக் கோள்களில் உயிர்கள் வாழ்கின்றனவா என்று தேடிக்கொண்டுதான் இருக்கிறார்கள், அருணகிரி ஆதித்யன்.

விண்வெளியில் பென்சிலைப் பயன்படுத்தக் கூடாது என்று சொல்கிறார்களே, உண்மையா டிங்கு? - ஐ. வெண்பா, 8-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் மேல்நிலைப் பள்ளி, சமயபுரம்.

விண்வெளியில் ஈர்ப்பு சக்தி இருக்காது. எந்தப் பொருளும் மிதந்துகொண்டுதான் இருக்கும். பென்சிலில் உள்ள கிராஃபைட் எளிதில் உடைந்துவிடக் கூடியது. அது உடைந்து மிதந்து கொண்டிருந்தால், அதன் மூலம் ஆபத்து ஏற்படலாம் என்பதால் பென்சிலைப் பயன்படுத்தக் கூடாது என்கிறார்கள். முதன் முதலில் விண்வெளிக்குச் சென்றதிலிருந்து இன்றுவரை விண்வெளிக்கு எனத் தயாரிக்கப்பட்ட பேனாவைப் பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள், வெண்பா.

கோயில்களில் சில அறைகள் மட்டும் பூட்டி இருக்கின்றனவே, ஏன் டிங்கு? - ர. தக்‌ஷணா, 6-ம் வகுப்பு, செண்பகம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, ஜமீன் ஊத்துக்குளி.

சாமிக்குச் செலுத்தும் ஆடைகள், ஆபரணங்கள், அவர்களை அழைத்துச் செல்லும் வாகனங்கள், பூஜைப் பொருள்கள் போன்றவற்றை வைத்திருக்கும் அறைகள் தேவையான போது திறக்கப்படும். மற்ற நேரம் பூட்டி வைக்க ப்பட்டிருக்கும். இவை தவிர, செப்புச் சிலைகளுக்குப் பூஜை முடிந்த உடன், பாதுகாப்புக் கருதி அந்த அறையைப் பூட்டி வைத்திருப்பார்கள், தக்‌ஷணா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in