

பூமி அழிவதற்கு வாய்ப்பு உள்ளதா, டிங்கு? - விடிஷா, 5-ம் வகுப்பு, ஆக்ஸாலிஸ் சர்வதேசப் பள்ளி, கள்ளக்குறிச்சி.
பூமியின் வயது சுமார் 450 கோடி ஆண்டுகள். இன்னும் 500 கோடி ஆண்டுகள் வரை பூமி இருக்கும். ஆனால், பூமியில் வாழும் உயிரினங்கள் ஏதாவது சிறுகோள் மோதி அழியலாம். சுற்றுச்சூழல் மாசு காரணமாக வாழத் தகுதியற்ற கோளாக பூமி மாறலாம். 500 கோடி ஆண்டுகளுக்குப் பின் பூமி சூரியனால் விழுங்கப்படுவதற்கு முன்பே, வெப்பம் அதிகரித்து பூமியின் நீர்நிலைகள் வற்றிவிடலாம். அதாவது பூமி அழிவதற்கு முன்பே உயிரினங்கள் அழியலாம். ஆனால், இவை எல்லாம் உடனே நடக்காது என்பதால் நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை, விடிஷா.
பாலைவனத்தில் பகலில் வெப்பம் அதிகமாகவும் இரவில் குளிர் அதிகமாகவும் இருப்பது ஏன், டிங்கு? - ம. சஞ்சித்ராஜ், 5-ம் வகுப்பு, வி.எம்.ஜே. மேல்நிலைப் பள்ளி, மதுரை.
பாலைவனப் பகுதியில் வீசும் காற்றில் ஈரப்பதம் இல்லாமல் வறண்டு காணப்படும். சூரியனின் வெப்பத்தைத்தையும் கதிர்வீச்சையும் தடுத்து நிறுத்துவதற்கு மேகங்களும் இருப்பதில்லை. எனவே வெப்பம் நேரடியாகப் பாலைவன மணலில் விழுகிறது. மணல் சூடாகச் சூடாக வெப்பமும் அதிகரிக்கிறது. வெப்பத்தைப் போலவே குளிரும் பாலைவனத்தை நேரடியாகத் தாக்குகிறது. சூரியன் மறைந்ததும் மணல் வேகமாக வெப்பத்தை வெளியேற்றிவிடுகிறது. அதனால், பாலைவனங்களில் பகலில் வெப்பம் அதிகமாகவும் இரவில் குளிர் அதிகமாகவும் காணப்படுகிறது, சஞ்சித்ராஜ்.
பெட்ரோல் பங்க்குகளில் ஏன் மொபைல் போனைப் பயன்படுத்தக் கூடாது என்கிறார்கள், டிங்கு? - ஜி. இனியா, 8-ம் வகுப்பு, தி விஜய் மில்லினியம் மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி.
கைபேசிகள், வயர்லெஸ் கருவிகள் போன்றவை மின்காந்த அலைகளைக் கடத்துகின்றன, பெறுகின்றன. இந்த மின்காந்த அலைகள் மின்னோட்டத்தைத் தூண்டி, மின் தீப்பொறியை உருவாக்கலாம் என்பதால், எரிபொருள் நிறைந்திருக்கும் பெட்ரோல் நிலையத்தில் கைபேசியைப் பயன்படுத்த வேண்டாம் என்று சொல்கிறார்கள். பெட்ரோல் நிலையத்தில் கைபேசிகளைப் பயன்படுத்துவதன் மூலம் விபத்து நிகழ்ந்ததில்லை என்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதைச் சொல்கிறார்கள். அதனால், பெட்ரோல் நிலையத்தில் இருக்கும் சில நிமிடங்கள் கைபேசியைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லதுதானே, இனியா.