நாய்கள் வாகனங்களைத் துரத்துவது ஏன்? | டிங்குவிடம் கேளுங்கள்

- எம். ராஜபாரதி, 9-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, தருமபுரி.
- எம். ராஜபாரதி, 9-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, தருமபுரி.
Updated on
2 min read

பூமி சுற்றுவதை ஏன் நம்மால் உணர முடியவில்லை, டிங்கு? - அ. ஹரிசங்கர், 4-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி,போடிநாயக்கனூர், தேனி.

பூமி சுற்றும்போது பூமியோடு சேர்ந்து காடு, மலை, கடல், வளிமண்டலத்தோடு நாமும் சுற்றிக்கொண்டிருக்கிறோம். பூமி ஒரே வேகத்தில் சுற்றிக்கொண்டிருக்கிறது. இந்த வேகம் குறையும்போதோ அதிகமாகும்போதோதான் நம்மால் உணர முடியும். இல்லையென்றால் நம்மால் பூமி சுற்றுவதை உணர முடியாது, அதன் வேகத்தில் எந்த மாற்றமும் இல்லை. எனவே அதை உணர முடியவில்லை ஹரிசங்கர்.

எலுமிச்சை ஏன் இவ்வளவு புளிப்பாக இருக்கிறது, டிங்கு? - அ. யாழினி, 6-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, மேலூர்.

பழங்களில் சிட்ரிக் அமிலம் இருக்கும். அதுதான் பழத்துக்குப் புளிப்புச் சுவையைத் தருகிறது. அந்த சிட்ரிக் அமிலம் எலுமிச்சையில் அதிக அளவில் இருப்பதால், மற்ற பழங்களைப் போல் நம்மால் அதை நேரடியாகச் சாப்பிட முடியாது. அதாவது சிட்ரிக் அமிலம் 5-6 சதவீதமாகவும் ஹைட்ரஜனின் அளவு 2.2 சதவீதமாகவும் இருப்பதால் எலுமிச்சைக்குப் புளிப்புச் சுவை அதிகமாக இருக்கிறது, யாழினி.

வாகனங்களில் செல்லும்போது நாய் துரத்துகிறதே ஏன், டிங்கு? - எம். ராஜபாரதி, 9-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, தருமபுரி.

இன்று வீட்டு விலங்குகளாக இருக்கும் நாய்கள், ஒரு காலத்தில் காட்டு விலங்குகளாக இருந்தவை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதர்களுடன் வளர்ந்து வந்தாலும் அவற்றின் சில இயல்புகள் இன்னும் மாறவில்லை. அக்கம் பக்கம் பார்த்து வேகமாகச் சாப்பிடுவது, மரத்தடியில் சிறுநீர் கழிப்பது, தன்னைவிட வேகமாகச் செல்லும் ஒரு விலங்கைத் துரத்துவது போன்றவற்றை இன்றும் நாய்கள் கடைப்பிடித்து வருகின்றன.

நாய்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் புதிய நபர்கள் வாகனங்களில் வந்தால், எச்சரிக்கையுடன் இருப்பதற்காகத் துரத்துகின்றன. சில நேரத்தில் பொழுதுபோக்குக்காகத் துரத்துவதும் உண்டு. மனம் அமைதி இல்லாமல் பதற்றமான சூழ்நிலையிலும் வாகனங்களைத் துரத்திச் செல்வது உண்டு.

காட்டில் இரையைத் துரத்திச் செல்வது போல் நாட்டுக்குள் துரத்திச் செல்லும் அவசியம் நாய்களுக்கு இல்லை. ஆனால், துரத்துதல் என்கிற அந்தப் பண்பை இப்படிப் பயன்படுத்திக்கொள்கின்றன. பெரும்பாலும் நாய்கள் நம்மைப் பயமுறுத்துவதற்காகத் துரத்துவதில்லை. விளையாட்டுக்காகத்தான் சற்று தொலைவுக்குத் துரத்தி வருகின்றன, ராஜபாரதி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in