மேரி கியூரி | விஞ்ஞானிகள் - 7

மேரி கியூரி | விஞ்ஞானிகள் - 7
Updated on
2 min read

நோபல் வரலாற்றில் நோபல் பரிசு வென்ற முதல் பெண். இரண்டு நோபல் பரிசுகளை வென்ற முதல் பெண். இரண்டு அறிவியல் துறைகளில் நோபல் பரிசு வென்ற முதல் பெண் ஆகிய சிறப்புகளைப் பெற்றவர் மேரி கியூரி.

1867, நவம்பர் 7 அன்று போலந்தில் பிறந்தார் மரியா சலோமியா ஸ்க்ளோடோவ்ஸ்கா. செல்லப் பெயர் மேரி. சின்ன வயதிலேயே அம்மாவை இழந்தார். ஆசிரியரான தந்தை, தம் குழந்தைகளுக்குப் பாடங்களைத் தாண்டியும் அறிவைப் புகட்டி வந்தார். தங்கப் பதக்கத்துடன் பள்ளிப் படிப்பை முடித்து வெளியே வந்தார் மேரி.

அந்தக் கால போலந்தில் பெண்கள் உயர்கல்வி கற்பதற்கு ஏற்ற வசதிகள் செய்யப்படவில்லை. அதனால் வெளிநாடு சென்று படிக்க நினைத்தனர் மேரியும் அவருடைய அக்கா புரோனிஸ்லாவாவும் (புரோன்யா). மேரியின் தந்தைக்குப் பணம் கொடுக்கும் அளவுக்கு வசதி இல்லை. மேரியும் புரோன்யாவும் ஓர் ஒப்பந்தம் போட்டுக்கொண்டுனர். புரோன்யா படிப்பு முடியும் வரை மேரி வேலை பார்த்துப் பணம் அனுப்ப வேண்டும். படித்து முடித்தவுடன் புரோன்யா மேரி படிக்க உதவ வேண்டும்.

வீடுகளில் பாடம் சொல்லிக் கொடுத்து அக்காவுக்குப் பணம் அனுப்பினார் மேரி. புரோன்யா மருத்துவரானதும் மேரி பாரிஸுக்குச் சென்றார். அங்கு அவருக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைக்கவில்லை. சோர்போன் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் படிப்பில் சேர்ந்தார்.

மேரி தனி வீடு எடுத்துத் தங்கினார். கையிலிருந்த பணத்தில் புத்தகங்களை வாங்கிக் குவித்தார். சரியான உணவின்றி, குளிருக்கு ஏற்ற கம்பளி இன்றி அடிக்கடி மயங்கி விழுவார். ஆனால் படிப்பதில் உறுதியாக இருந்தார். அடுத்தடுத்த ஆண்டுகளில் கணித அறிவியலிலும் பட்டம் பெற்றார் மேரி.

அறிவியலாளர் பியரி கியூரியின் அறிமுகம் கிடைத்தது. அவருடைய ஆய்வகத்தைச் சில காலம் பயன்படுத்திக்கொண்டார் மேரி. சில ஆண்டுகளில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். வேலை பார்த்துக்கொண்டு தங்கள் ஆய்வகப் பணியைத் தொடர்ந்தார்கள். மேரி தன் முனைவர் பட்ட ஆய்வுக்காக யுரேனியத்தை எடுத்துக்கொண்டார். மேரியும் பியரியும் ஒரு தனிமத்தைக் கண்டறிந்தனர். போலந்தின் நினைவாக ’பொலேனியம்’ என்று பெயர் வைத்தார் மேரி. இந்தக் கண்டுபிடிப்புக்காக 1903ஆம் ஆண்டு மேரி, பியரி, ஹென்றி பெக்குரேல் ஆகிய மூவருக்கும் இயற்பியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட்டது.

சாலையில் ஏற்பட்ட விபத்தில் பியரி மறைந்தார். ஆய்வகப் பணிகள் பாதியில் நின்றன. இரண்டு பெண் குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு மேரியை இயங்க வைத்தது. அறிவியல் பீடத்தில் இயற்பியல் பேராசிரியராக, முதல் பெண்ணாகப் பதவி ஏற்றார் மேரி. தன் ஆராய்ச்சியைத் தொடர்ந்து செய்ததன் பலனாக 1910இல் ரேடியத்தைக் கண்டறிந்தார் மேரிக்கு 1911இல் வேதியியலுக்கான நோபல் பரிசும் கிடைத்தது.

முதலாம் உலகப் போரில் குண்டுகளால் காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் மையங்களை உருவாக்கி, சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார் மேரி.

நீண்ட காலம் ரேடியம் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டதன் காரணமாக, ஏபிளாஸ்டிக் அனிமியா என்கிற நோயால் பாதிக்கப்பட்டு, 1934, ஜூலை 4 அன்று தன் 66வது வயதில் மறைந்தார் மேரி கியூரி.

கட்டுரையாளர், எழுத்தாளர்.

முந்தைய அத்தியாயம் > மார்கோனி | விஞ்ஞானிகள் - 6

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in