

குதிரைகள் ஏன் நின்றுகொண்டே தூங்குகின்றன, டிங்கு? - ஏ.ஏ. சாஹித்யா, 6-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் மேல்நிலைப் பள்ளி, சமயபுரம். குதிரைகள் நின்றுகொண்டே மட்டும் தூங்குவதாகப் பலரும் நினைக்கிறார்கள். ஆனால், அது தவறு. காடுகளில் வசித்தபோது குதிரைகளுக்கு வேட்டை விலங்குகளால் ஆபத்து இருந்துகொண்டே இருந்தது. அப்போது தரையில் உட்கார்ந்து தூங்கினால், ஆபத்து வரும்போது சட்டென்று எழுந்து ஓட இயலாது. மெதுவாகத்தான் எழுந்து நிற்க முடியும்.
அதனால் அவ்வபோது நின்றுகொண்டே சிறிது நேரம் தூங்க ஆரம்பித்தன. ஆழ்ந்த உறக்கம் தேவைப்படும் சூழலில் தரையில் அமர்ந்தும் குதிரைகள் உறங்குகின்றன. ஆனால், ஆபத்தைக் கண்காணிக்கும்படி அருகில் ஒரு குதிரையை விழித்திருக்க வைத்துவிட்டுத்தான் உறங்குகின்றன. ஆபத்து இல்லாத இடங்களில் அல்லது பண்ணைகளில் வளர்க்கப்படும் குதிரைகள் ஒரே நேரத்தில் தரையில் அமர்ந்து உறங்குவது உண்டு, சாஹித்யா.
வானம் ஏன் காலையும் மாலையும் சிவப்பு வண்ணத்தில் இருக்கிறது, டிங்கு? - ஜெ. முத்துச் செல்வம், 4-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர். சூரிய ஒளி ஏழு வண்ணங்களைக் கொண்டது. இவற்றில் சிவப்பு ஒளி அதிகபட்ச அலைநீளம் கொண்டது. சூரிய உதயம், சூரிய அஸ்தமனத்தின்போது கதிர்கள் வளிமண்டலத்தின் பெரும்பகுதிக்குப் பயணிக்க வேண்டும். ஏனெனில் அவை அடிவானத்திற்கு மிக அருகில் உள்ளன.
சிவப்பு ஒளியின் அலைநீளம் அதிகமாக இருக்கும் என்பதாலும் குறைவாகவே ஒளிச்சிதறல் நடைபெறுவதாலும் நம் கண்களுக்கு அது தெரிகிறது. மற்ற வண்ணங்கள் குறைந்த அலைநீலத்தைக் கொண்டிருப்பதாலும் அதிகமாக ஒளிச்சிதறல் நடைபெறுவதாலும் அவ்வளவாகத் தெரிவதில்லை, முத்துச் செல்வம்.