

ஒரு கட்டிடத்துக்கு கான்கிரீட் தூண்களும் சுவர்களும் உள்ளதுபோல், உடலுக்குள் எலும்புகள் உள்ளன. இவை பார்ப்பதற்குத் தனித்தனி எலும்பாகத் தெரிந்தாலும், தனி ஓர் எலும்பால் இயங்க முடியாது. அருகிலுள்ள தசைகள், தசைநாண்கள், பிணையங்கள் (Ligaments) ஆகியவற்றுடன் இணைந்து இயங்கும் ஒரு கட்டமைப்பு இது. அதனால்தான், இதை ‘எலும்புக் கூடு’ (Skeleton) என அழைக்கிறோம். உடலுக்கு ஆதாரம் தரும் சட்டகம் என்றும் இதைக் கூறலாம். மூளை, இதயம், நுரையீரல், கண், காது, முதுகுத் தண்டுவடம் போன்ற முக்கிய உள்ளுறுப்புகளைப் பாதுகாக்கும் பெட்டகமாகவும் இது திகழ்கிறது.
உடலுக்கு உருவம் கொடுப்பதும் வலுவைத் தருவதும் எலும்புகளே. எலும்புகளுக்கு உடலைத் தாங்கும் உறுதி இருப்பதால்தான் நம்மால் நிற்க முடிகிறது. அதேபோல் ஓடியாடி விளையாடவும், குனிந்து நிமிர்ந்து, வளைந்து நெளிந்து செல்லவும், நடனம் ஆடவும் முடிகிறது என்றால், அதற்கு எலும்புகள் தரும் அசைவுகள்தான் காரணம். ரத்த அணுக்களை உற்பத்தி செய்வதும், கொழுப்பு, கால்சியம், பாஸ்பேட் சத்துகளைச் சேமிப்பதும், காது கேட்க உதவுவதும் எலும்புகளே.
முதுகெலும்பு உள்ள விலங்கினங்களில் எலும்பு என்பது கடினமான, விறைப்பான ஓர் இணைப்புத் திசு (Connective tissue). 20 வயதுக்கு மேற்பட்டவர்களின் உடலில் மொத்தம் 206 எலும்புகள் இருக்கின்றன. ஆனால், குழந்தைகளுக்கு இந்த எண்ணிக்கை அதிகம். ஏனெனில், அவர்களுக்குச் சில எலும்புகள் தனித்தனியாக இருக்கும். இவை பின்னர் வளர்ந்து ஒன்றுகூடி ஒரே எலும்பாக ஆகிவிடும். உதாரணம் மண்டை ஓடு. உடலிலேயே மிகப் பெரிய எலும்பு, தொடை எலும்பு (Femur). மிகச் சிறியது, அங்கவடி (Stapes).
உடலில் எலும்புகள் இருக்கும் இடம், அங்குள்ள அசைவுகள், தேவைகள், வலு ஆகியவற்றைப் பொறுத்து எலும்பு ஒவ்வொன்றும் ஒவ்வொரு வடிவத்திலும் அளவிலும் உள்ளது. அதைவைத்து, எலும்புகளைக் குட்டை எலும்புகள் (Short bones), நெட்டை எலும்புகள் (Long bones), தட்டை எலும்புகள் (Flat bones), ஒழுங்கில்லாத எலும்புகள் (Irregular bones), நாண் உள்எலும்புகள் (Sesamoid bones) என வகைப்படுத்தி உள்ளனர். மணிக்கட்டு எலும்புகள் குட்டையாகவும், கை, கால் எலும்புகள் நீண்டதாகவும், நெஞ்செலும்பு (Sternum) தட்டையாகவும், முதுகெலும்பு சீரில்லாமலும் இருப்பதைக் காணலாம். முழங்கால் மூட்டுச்சில்லு எலும்பு (Kneecap) நாண் உள்எலும்புகளில் மிகப் பெரிது.
என்றாலும் நெஞ்செலும்பு, இடுப்பெலும்பு, தொடை எலும்பு போன்ற பெரிய எலும்புகள் ஒரு பொதுவான அமைப்பைப் பெற்றுள்ளன. அவை முனைப் பகுதி (Epiphysis), இணைப் பகுதி (Metaphysis), இடைப் பகுதி (Diaphysis). முனைப் பகுதியை ‘பெரியாஸ்டியம்’ (Periosteum) எனும் எலும்புச் சவ்வு போர்த்தியிருக்கிறது. இதுதான் எலும்பின் கடினமான வெளிப் பகுதி. இதில் ரத்தக்குழாய்களும் நரம்புகளும் உள்ளன. ‘எண்டாஸ்டியம்’ (Endosteum) எனும் உள் அடுக்கில் எலும்பு செல்கள் உள்ளன. விதிவிலக்காக, எலும்புகள் தொடும் இடத்தில் மட்டும் இந்தச் சவ்வுகள் இல்லை.
எலும்பு செல்களுக்கு ஒரு தனித்தன்மை உண்டு. மற்ற செல்களைப்போன்று செல் பிரிதல் முறையில் இவை வளர்ச்சி பெறுவதில்லை. பதிலாக, செல்களைப் புதுப்பிக்கும் முறையில் வளர்கின்றன. உதாரணமாக, குருத்தெலும்பு செல்கள் புதுப்பிக்கப்படும்போது, பழைய குருத்தெலும்பு செல்களுக்குப் பதிலாக, முழு எலும்பு செல்கள் உருவாகின்றன. இதனால் எலும்பு நீட்சி அடைகிறது.
எலும்புச் சவ்வுக்குக் கீழே எலும்பின் இரு முனைகளிலும் குருத்தெலும்பு (Cartilage) உள்ளது. அருகிலுள்ள எலும்போடு இணைகிற இணைப் பகுதி இது. மசகுத் தன்மை கொண்ட கொலாஜன் எனும் புரதம் இதில் இருக்கிறது. கொலாஜன் குருத்தெலும்புகளுக்கு வழுவழுப்புத் தன்மையைத் தருவதால், மூட்டுகள் உரசிக்கொள்ளும்போது நமக்கு வலி ஏற்படுவதில்லை.
ஓர் எலும்பானது வெளியிலிருந்து பார்ப்பதற்கு இரும்புக்கம்பி போன்று கடினப் பொருளாகத் தெரிந்தாலும், அதனுள்ளே ஒரு குழல் போன்ற பகுதியும் (Medullary cavity) உள்ளது. இதுதான் இடைப் பகுதி. இதில் ‘எலும்பு மஜ்ஜை’ (Bone marrow) உள்ளது. இது ஒரு திசுக்கூழ். ஆரோக்கியமாக உள்ள ஒருவரின் எலும்பு மஜ்ஜையைச் சில புற்றுநோய் சிகிச்சைகளுக்குப் பயன்படுத்த முடியும். அதுபோல், சில புற்றுநோய்களைக் கண்டறிய எலும்பு மஜ்ஜையைப் பரிசோதிப்பதும் உண்டு.
எலும்பு மஜ்ஜையில் ‘சிவப்பு மஜ்ஜை’, ‘மஞ்சள் மஜ்ஜை’ என இருவகை உண்டு. சிவப்பு மஜ்ஜை ரத்தச் சிவப்பணுக்கள், வெள்ளணுக்கள், தட்டணுக்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்கிறது. மஞ்சள் மஜ்ஜை கொழுப்பைத் தன்னிடம் சேமிக்கிறது. பிறந்த குழந்தைகளுக்குச் சிவப்பு மஜ்ஜை மட்டுமே இருக்கும். குழந்தை வளர வளர அதன் உடலில் கொழுப்பு சேரும்போது மஞ்சள் மஜ்ஜையும் உற்பத்தியாகிவிடும்.
எலும்பு மஜ்ஜையில் ஸ்டெம் செல்கள் (Stem cells) இருக்கின்றன. இவைதான் உடல் செல்கள் அனைத்துக்கும் ஆதார செல்கள். இவை வளரும்போது பல்வேறு திசு செல்களாகப் பிரிகின்றன. மேலும், உடல் செல்களுக்குத் தேவையான கால்சியம், பாஸ்பேட், கார்பனேட் ஆகிய தாதுக்களும் எலும்புத் திசுவில் உள்ளன.
தாயின் வயிற்றில் இருக்கும் கருவில் தொடங்கி 18-லிருந்து 25 வயதுவரை எலும்புகளின் வளர்ச்சி இருக்கிறது. அதன் பின்னர் வளர்ச்சி நின்றுவிடுகிறது. எலும்பின் வளர்ச்சிக்கு உணவுச் சத்துகளும், ஹார்மோன்கள், வைட்டமின்-டி, கால்சியம் ஆகியவையும் தேவை. வைட்டமின்-டியும் கால்சியமும் குழந்தைகளுக்குக் குறைந்தால், ‘ரிக்கெட்ஸ்’ நோயும், பெரியவர்களுக்குக் குறைந்தால், ‘ஆஸ்டியோமலேசியா’ நோயும் வருகிறது. இறந்தவரின் எலும்பைப் பார்த்து அவர் ஆணா, பெண்ணா, அவரது வயது, உயரம் ஆகிய விவரங்களைக் கூறிவிட முடியும். புலன் விசாரணைக்கு இது பேருதவியாக இருக்கிறது.
வம்சாவளியில் பெறப்படும் மரபணுக்கள் எலும்பின் வளர்ச்சியைத் தீர்மானிக்கின்றன. அதனால்தான் குடும்பத்தில் பெற்றோர் மாதிரியே குழந்தைகளும் குட்டையாகவோ, நெட்டையாகவோ இருக்கின்றனர்.
உடலை வளைத்து, நெளித்து அசைக்கிறீர்கள். அது எப்படி முடிகிறது? அடுத்த வாரம் பார்க்கலாம்.
(இன்னும் அறிவோம்)
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.
தொடர்புக்கு: gganesan95@gmail.com