

டார்க் டூரிசம் என்றால் என்ன, டிங்கு? - ஜி. இனியா, 8-ம் வகுப்பு, தி விஜய் மில்லினியம் மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி.
இறப்பு, துன்பம் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்குச் சென்று பார்வையிடுவதைத்தான் டார்க் டூரிசம், பிளாக் டூரிசம் என்று அழைக்கிறார்கள். ஜலியான் வாலாபாக் நினைவிடம், போபால் அருங்காட்சியகம், சென்னையில் உள்ள போர்வீரர்களின் கல்லறை, அந்தமான் சிறைச்சாலை, ஜெர்மனியில் உள்ள ஹிட்லர் வதைமுகாம், ஹிரோஷிமா அமைதிப் பூங்கா போன்றவை எல்லாம் டார்க் டூரிசத்தில் வருகின்றன, இனியா.
சூடான உணவை வாயில் வைக்கும்போது சுடுகிறது. விழுங்கிய பிறகு ஏன் சுடுவதில்லை, டிங்கு? - – கு.சி. திலேஷ் கார்த்திக், 5-ம் வகுப்பு, ஸ்ரீ சைதன்யா தொழில்நுட்பப் பள்ளி, கரூர்.
சூடான உணவை வாயில் வைக்கும்போது சுடுகிறது. ஆனால், அந்த உணவை விழுங்குவதற்குள் நம் வாயில் இருக்கும் உமிழ்நீரால் உணவின் சூடு குறைந்துவிடுகிறது. எனவே, விழுங்கும்போது உணவு சூடாக இருப்பதில்லை, திலேஷ் கார்த்திக்.
ஒரு நாள் என்பது 25 மணி நேரமாக மாறுமா, டிங்கு? பி. முகமது உமர், 8-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் மேல்நிலைப் பள்ளி, சமயபுரம்.
பூமியின் ஒருநாள் என்பது எப்போதும் ஒரே மாதிரியாக இருந்தது இல்லை. 140 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் ஒருநாள் என்பது 18 மணி நேரமாகத்தான் இருந்திருக்கிறது. அப்போது பூமிக்கு அருகில் நிலா இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக பூமியைவிட்டு நிலா நகர்ந்துகொண்டே இருக்கிறது.
அதனால் பூமியின் வேகம் குறைந்துகொண்டே இருக்கிறது. ஆண்டுக்கு 3.8 செ.மீ. தொலைவுக்குப் பூமியை விட்டு நிலா விலகிச் சென்றுகொண்டே இருந்தால், 20 கோடி ஆண்டுகளில் பூமியின் ஒருநாள் என்பது 25 மணி நேரமாக மாறியிருக்கும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள், முகமது உமர்.