Last Updated : 30 May, 2018 10:58 AM

 

Published : 30 May 2018 10:58 AM
Last Updated : 30 May 2018 10:58 AM

கண்டுபிடிப்புகளின் கதை: குடை குடையாம் காரணமாம்

 

ழையில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்கே இன்று பெரும்பாலும் குடையைப் பயன்படுத்துகிறோம். ஆரம்பக் காலத்தில் வெயிலில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்கே குடை பயன்படுத்தப்பட்டது. அப்போது இந்தச் சிறு குடையின் பெயர் Parasol. மழைக்குப் பயன்படுத்தப்படும் இன்றைய குடை Umbrella.

நான்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சீனாவில் குடை போன்ற ஒரு பொருளைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். பனை ஓலையில் குச்சியைச் செருகி உருவாக்கப்பட்ட இந்தக் குடை வெயிலில் இருந்து காப்பாற்றியது. 3,500 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்து நாட்டில் அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், செல்வந்தர்கள், மதகுருமார்கள் மட்டும் வெயிலுக்குக் குடைப் பிடிக்க ஆரம்பித்தனர்.

எகிப்து நாட்டின் பழங்கால ஓவியங்களில் குடை பிடித்ததற்கான ஆதாரங்கள் அதிகம் இருக்கின்றன. சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு எகிப்துக்கு அருகில் இருந்த நாடுகளில் மன்னர்கள் குடை பிடித்துவந்தனர். பாலைவன நாடுகள் என்பதால் அவர்களுக்கு மழையிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்குக் குடை வேண்டும் என்ற அவசியம் ஏற்படவில்லை.

கி.மு. 11-ம் நூற்றாண்டில் சீனாவில் மழையிலும் பயன்படுத்தக் கூடிய, தண்ணீர்ப் புகாத குடைகள் உருவாக்கப்பட்டன. பட்டுத்துணியால் செய்யப்பட்ட இந்தக் குடைகளையும் மன்னர்களும் செல்வந்தர்களும்தான் பயன்படுத்தினர். செல்வமும் செல்வாக்கும் மிக்கவர்கள் பல அடுக்குத் துணிகளால் ஆன ஆடம்பரக் குடைகளைப் பயன்படுத்தினர். இது ஆசிய நாடுகளுக்குப் பரவியது. பர்மாவில் 24 அடுக்குகளைக் கொண்ட பிரம்மாண்டக் குடை உருவாக்கப்பட்டது.

கிரேக்கர்களும் ரோமானியர்களும் குடையை ஆடம்பரப் பொருளாக நினைத்தனர். வசதியான பெண்கள் மட்டுமே குடைகளைப் பயன்படுத்தினர். மடக்கி, விரிக்கக்கூடிய இந்தக் குடைகளைப் பெண்கள் பிடிக்க மாட்டார்கள். பணியாளர்கள்தான் பிடித்துக்கொண்டு வருவார்கள். குதிரை வண்டிகளில் பெரிய குடைகளை விரித்து, வெயில் படாமல் பயணத்தை மேற்கொண்டார்கள்.

5-ம் நூற்றாண்டில் ரோமானியர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு, ஐரோப்பாவில் குடை காணாமல் போனது. 16, 17-ம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட மறுமலர்ச்சியின் காரணமாகக் காணாமல் போன குடைகள் மீண்டும் வந்தன. பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்தில் மன்னர்களும் செல்வந்தர்களும் குடைகளைப் பயன்படுத்தினார்கள். விலை உயர்ந்த பட்டுத்துணியால் செய்யப்பட்டாலும் இந்தக் குடைகள் நீண்ட காலம் உழைக்கவில்லை. அதனால் குடையில் மேலும் சில முன்னேற்றங்களைக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

18-ம் நூற்றாண்டில் ஐரோப்பா, வட அமெரிக்கா முழுவதும் குடைகள் பரவின. அப்போதும் பெண்களே குடைகளைப் பயன்படுத்தினர். இங்கிலாந்து மாக்தலின் மருத்துவமனையின் நிறுவனர் ஜோனாஸ் ஹான்வே, வெயிலிலும் மழையிலும் குடையைப் பயன்படுத்த ஆரம்பித்தார். ஓர் ஆண் குடை பிடிப்பதை எல்லோரும் ஆச்சரியமாகப் பார்த்தனர். பிறகு இங்கிலாந்தில் ஆண்களும் குடைகளை ஏற்றுக்கொண்டனர். குடைகளிலும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, முன்னேற்றங்களைக் கொண்டு வந்தனர். சாதாரணமானவர்களும் பயன்படுத்தும் வகையில் குறைந்த விலையில் குடைகள் விற்பனைக்கு வந்தன.

பெரிய குடைகளைக் கொண்டு செல்வது சிரமமாக இருந்ததால், 1928-ம் ஆண்டு பாக்கெட் குடைகள் அறிமுகமாயின. 1969-ம் ஆண்டு பிராட்ஃபோர்ட் இ பிலிப்ஸ் நவீன மடக்குக் குடைகளை அறிமுகம் செய்தார்.

இன்றும்கூட கோயில்கள், தேவாலயங்களில் குடைகள் பயன்படுத்தப்படுகின்றன. கடற்கரைகளில் குடையின் கீழ் அமர்ந்து ஓய்வெடுக்கிறார்கள். பழச்சாறுகளில் சிறிய காகிதக் குடைகளை அழகுக்காக வைக்கிறார்கள். பெரிய குடைகளுக்கு அடியில் சாலையோரக் கடைகளைப் பார்க்க முடிகிறது. பெரும்பாலான வீடுகளில் குடைகள் இருக்கின்றன. அதிக அளவில் குடைகளை உற்பத்தி செய்யும் நாடு எது தெரியுமா? குடையைக் கண்டுபிடித்த சீனாதான். ஆயிரக்கணக்கான குடை நிறுவனங்கள் இங்கே இருக்கின்றன.

(கண்டுப்பிடிப்போம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x