கதை: ஓய்வெடுக்க வந்த சந்திரன்

கதை: ஓய்வெடுக்க வந்த சந்திரன்
Updated on
1 min read

அடர்ந்த காட்டில் செங்கால் நாரை பறந்துகொண்டிருந்தது. திடீரென்று வெளிச்சம் தோன்றவே, தரை இறங்கியது.

கிணற்றில் பெரிய அப்பளம் அளவுக்குச் சந்திரன் மிதந்துகொண்டிருந்தது.

”அடடா! என்ன வெளிச்சம்! இதை உயரமான மரத்தில் வைத்தால், இரவில் கூட வெளிச்சம் தெரியுமே!” என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டது.

உடனே கிணற்றுக்குள் சென்று, சந்திரனைத் தூக்கிச் சென்று உயரமான மரக்கிளையில் வைத்தது. காட்டில் பகல்போல் வெளிச்சம் பரவியது. விலங்குகளும் பறவைகளும் அதிசயமாகப் பார்த்தன. கூடிக் கூடிப் பேசின.

“சிறுத்தையே, உன்னால் மரம் ஏற முடியும். அந்தச் சந்திரனை எடுத்து வா” என்றது குரங்கு.

சிறுத்தை வேகமாக மரத்தில் ஏறி, சந்திரனை வாயில் கவ்வியது. கீழே வருவதற்குள் தந்தத்தால் குத்தி சந்திரனைத் தூக்கிக் கொண்டு தன் இருப்பிடம் சென்றது யானை.

யானை சாப்பிடப் போன நேரத்தில், சந்திரனை எடுத்துக்கொண்டு தன் குகைக்கு வந்து சேர்ந்தது புலி. வெளிச்சம் வெளியே தெரியாமல் இருப்பதற்காக வாயிலை ஒரு பாறையால் அடைத்தும் வைத்தது.

சந்திரனைக் காணாமல் தேடிக் கொண்டு வந்த யானை, புலிக் குகையில் வெளிச்சம் கசிவதைக் கண்டது. உடனே பாறையைத் தள்ளி, சந்திரனை எடுத்து வாழை இலைகளால் மூடி வைத்தது.

சந்திரன் எங்கு இருந்தாலும் வெளிச்சம் வந்தது. அந்த வழியே பறந்து வந்த செங்கால் நாரை, சந்திரனைக் கண்டதும் தூக்கிச் சென்றது. மீண்டும் தான் எடுத்த கிணற்றுக்குள்ளேயே போட்டுவிட்டது.

காட்டில் வசிக்கும் நீலன் அதிகாலையில் தேன் எடுப்பதற்காக வந்தான். கிணற்றில் சந்திரனைக் கண்டான்.

‘அடடா! குளிர்ச்சிக்காகச் சந்திரன் கிணற்றுக்கு வந்திருக்கிறதா! இன்னும் சற்று நேரத்தில் விடிய வேண்டும். சந்திரன் இருந்தால் சூரியன் வராது’ என்று சொல்லிக்கொண்டே, அகலமான தேக்கு இலைகளைப் பறித்தான். சந்திரனை அதில் வைத்து தூக்கினான். பிறகு மேற்குத் தொடர்ச்சி மலையின் உச்சிக்குச் சென்றான். இலைகளுக்குள் இருந்த சந்திரனை எடுத்து, வானை நோக்கி வீசினான். சந்திரன் மேற்கில் மறையவும் சூடியன் பளீர் என்று உதித்தது.

ஓவியம்: தமிழ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in