தேன் மிட்டாய் - 12: அப்படி எல்லாம் மனம் புண்படக் கூடாது!

தேன் மிட்டாய் - 12: அப்படி எல்லாம் மனம் புண்படக் கூடாது!
Updated on
2 min read

நான் எவ்வளவுக்கு எவ்வளவு எழுத்தாளனோ அவ்வளவுக்கு அவ்வளவு கிண்டல்காரன். அவ்வளவுக்கு அவ்வளவு பிறர் மனங்களைப் புண்படுத்துபவன். நான்கு சொற்கள் எழுதினால் இரண்டு சொற்களில் கிண்டல் ஒளிந்துகொண்டிருக்கும். மற்ற இரண்டில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு அமர்ந்திருக்கும்.

நான் இரண்டு நிமிடங்கள் பேசினால் நான் பேசியதில் எது வேடிக்கை, எது நிஜம், எங்கே குத்துகிறேன், யாரைத் தாக்குகிறேன் என்பதைக் கண்டுபிடிக்க உங்களுக்குக் குறைந்தது ஒரு மணி நேரமாவது பிடிக்கும். நீங்கள் கண்டுபிடித்தது சரிதானா என்பதை உறுதிசெய்துகொள்ள இரண்டு முழு நாள்கள் தேவைப்படும். இதுதான் நான். இப்படி மட்டுமே இருக்க முடியும் என்னால்.

எனவே, ஹாஹா... ஆஸ்கர் வைல்டு எவ்வளவு வேடிக்கையாக எழுதியிருக்கிறான் பாருங்களேன் என்று நான் எழுதிய எதையாவது படித்துவிட்டு அவசரப்பட்டுச் சிரித்துவிடாதீர்கள். நீங்கள் நினைப்பதுபோல் யாரையோ அல்ல, அநேகமாக உங்களையும் சேர்த்தே அதில் கிண்டல் செய்திருப்பேன். வேறு யாரையோ அல்ல உங்களையும் சேர்த்தே செல்லமாக ஒரு குத்து குத்தியிருப்பேன்.

‘ஆ, என்னையுமா’ என்றால், ஆம் உங்களையும்தான். இவர் நண்பர், அவர் உறவினர், இவர் நல்லவர், அவர் வேண்டப்பட்டவர் என்றெல்லாம் நான் பேதம் பிரித்துப் பார்ப்பதில்லை. அவர் பெரிய எழுத்தாளர், இவர் உலகம் போற்றும் அறிவாளி என்றெல்லாம் பயப்படுவதும் இல்லை.

கடவுள் முதல் பூதம்வரை யாரையும் எதையும் விட்டு வைத்ததில்லை நான். நீ ஏன் இப்படிச் செய்ய வேண்டும்? நீ எழுதியதைப் படித்துவிட்டு அவர்கள் மனம் புண்பட்டால் என்னாகும் என்று நீங்கள் கேட்கலாம். எடுத்துக்காட்டோடு சொன்னால் புரியும்.

இளம் வாசகர்களுக்கு என்று சொன்ன மறுகணமே, இருப்பதிலேயே பெரிய மலையின்மீது ஏறி உட்கார்ந்துகொண்டு, ‘பிள்ளைகளே ஒழுங்காகப் படியுங்கள், உண்மையை மட்டுமே பேசுங்கள், பெரியவர்கள் சொல்பேச்சு கேட்டு நடந்துகொள்ளுங்கள், தினமும் பல் துலக்குங்கள்’ என்று தொடங்கிப் பல எழுத்தாளர்கள் யேசு நாதர் போல் மாறிவிடும் அற்புதத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

போகட்டும் என்று கடந்தும் போயிருப்பீர்கள். என்னால் அப்படி இருக்க முடியாது. அதனால், இரண்டு வரி எழுதினேன். ‘நான் உங்களுக்குச் சொல்ல விரும்பும் அறிவுரை ஒன்றுதான். உங்களுக்கு யார் எந்த அறிவுரையை வழங்கினாலும் அதை அப்படியே பிரித்துப் பார்க்காமல் இன்னொருவருக்கு வழங்கிவிடுங்கள். நான் அதைத்தான் செய்கிறேன்.

நல்ல பலன் கிடைக்கிறது.’ இதைப் படித்துவிட்டு ‘ஈ’ என்று சிரித்த பல இளம் வாசக எழுத்தாளர்களை எனக்குத் தெரியும். நான் அவர்களைத்தான் சொல்கிறேன் என்பதை அவர்கள் விரைவில் கண்டுபிடித்தால் அவர்களுக்கும் நல்லது, இளம் வாசகர்களுக்கும் நல்லது.

இன்னொருமுறை இப்படி எழுதினேன். ‘நிறைய நல்லது செய்யுங்கள், தாராளமாக நல்லது செய்யுங்கள், தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என்று எல்லாருக்கும் வாரி வழங்குங்கள். உங்கள் நல்ல செயல்களுக்கு ஏற்ப நிச்சயம் உங்களுக்கு நல்ல தண்டனை கிடைக்கும். என்னை நம்புங்கள்.’ மலை மேலே உட்கார்ந்துகொண்டால், ‘நல்லது செய்யுங்கள்’ என்று மட்டுமே அறிவுரை வழங்க முடியும். கீழே இறங்கி வந்தால்தான் நல்லது செய்வது எவ்வளவு கடினமானது என்பது புரியும்.

இதைப் பாருங்கள். ‘சிலர் எங்கே சென்றாலும் அந்த இடம் மகிழ்ச்சியால் நிரம்பிவிடும். இன்னும் சிலர் எங்கிருந்து கிளம்பினாலும் அவர் கிளம்பிய இடத்தில் மகிழ்ச்சி நிரம்பிவிடும்.’ அல்லது இதைப் பாருங்கள். ‘ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் இரண்டு விதமான துயரங்களை எதிர்கொள்கிறார்கள். விரும்பியது கிடைக்காமல் போவது. விரும்பியது உடனே கிடைத்துவிடுவது.’

இளம் வாசகர்களுக்கு ஏதாவது பொன்மொழி சொல்லுங்கள் என்று கேட்டதும் இதோ என்று பாய்ந்துவந்து நான் சொன்னது இது. ‘நீங்கள் எப்போதும் நீங்களாகவே இருங்கள். மற்றவர்களைப் போல் இருக்க மற்றவர்கள் இருக்கிறார்கள். உங்களைப் போல் இருக்க உங்களால் மட்டுமே முடியும்.’

ஒருவேளை இவன் என்னைச் சொல்கிறானோ என்று யாருக்குத் தோன்றுகிறதோ அவர்களுக்காகவே எழுதுகிறேன். என்ன துணிச்சல் இருந்தால் இவன் இப்படிச் சொல்லலாம் என்று யார் என் எழுத்தைப் படித்துவிட்டுக் கோபப்படுகிறார்களோ அவர்களே என் வாசகர்கள்.

என் வாசகர்களுக்கு நான் செய்யும் மிகப் பெரிய உதவி, அவர்கள் மனதைப் புண்படுத்துவதுதான். நேரடியாகத் தாக்கினால் அதிகம் வலிக்கும். உண்மை கசக்கும். எனவே வேடிக்கை எனும் இனிப்புக்குள் கசப்பு மாத்திரையை மறைத்து வைத்து வழங்கிக்கொண்டிருக்கிறேன். ஓர் எழுத்தாளனாக அது என் கடமை என்று நம்புகிறேன்.

நல்ல எழுத்து கிடைக்க வேண்டும் என்பதற்காகவே எழுத்தாளர்களைக் கிண்டல் செய்கிறேன். நல்ல கல்வி வேண்டும் என்பதால் ஆசிரியர்களைக் கிண்டல் செய்கிறேன். நல்ல சமூகம் வேண்டும் என்பதால் மனிதர்களைக் கிண்டல் செய்கிறேன். நானும் சமூகத்தின் ஒரு பகுதி என்பதால் மற்றவர்களுக்கு அளிக்கும் அதே மாத்திரையை நானும் எடுத்துக்கொள்கிறேன். நமக்குள் வளர்ந்திருக்கும் வெறுப்பும் கசப்பும் கசடும் தீங்கும் விலகும்வரை நான் எழுதுவேன். அதாவது கிண்டல் செய்வேன். அதாவது சிலருடைய மனங்களைப் புண்படுத்துவேன். கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள். எனக்காக அல்ல, உங்களுக்காக. நமக்காக.

(இனிக்கும்)

- marudhan@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in