

‘யார், தாரோவா? அவன் ஒரு காட்டுவாசியாச்சே. எப்படியோ தப்பித்தவறி மனிதனாகப் பிறந்துவிட்டான், பாவம்!’ இப்படித்தான் என்னை அறிந்தவர்கள் சொல்வார்கள். ஆம், ஓணானாகவோ தேரையாகவோ தும்பியாகவோ நத்தையாகவோ ஒரு காட்டில் பிறந்திருந்தால் நிச்சயம் மகிழ்ந்திருப்பேன். என்ன செய்ய, மனிதனாகப் பிறந்துவிட்டேன். ஆனால், மனிதர்களோடு வாழ மாட்டேன் என்று முடிவு செய்து, மூட்டை முடிச்சுகளோடு என் காட்டுக்கு வந்து சேர்ந்துவிட்டேன்.
இல்லை, உங்களோடு எனக்கு எந்தப் பகையும் இல்லை. நீங்கள் வாழும் உலகோடு என்னால் ஒத்துப்போக முடியவில்லை என்பதுதான் உண்மை. புலி, சிறுத்தை, பாம்பு எதற்கும் பயமில்லை எனக்கு. ஆனால், உங்கள் உலகை ஒரு கணம் நினைத்தாலே என் உடல் நடுங்க ஆரம்பித்துவிடும். கரடியின் மடியில் தலை வைத்து ஒரு முழு இரவு தூங்குவாயா அல்லது ஒரு நவீன நகரத்துக்குச் சென்று ஐந்து நிமிடங்கள் இருப்பாயா என்று கேட்டால் கரடியைத் தேடி ஓடுவேன். ஏன் என்றால் உங்கள் உலகில் எவ்வளவு மனிதர்கள் இருக்கிறார்களோ அதைவிட ஆயிரம் மடங்கு அதிகமாகப் பூதங்கள் இருக்கின்றன. நான் உங்கள் உலகைவிட்டு வெளியே வந்ததற்குக் காரணம் அந்தப் பூதம்தான்.
எப்போது, எங்கே தோன்றும் என்று தெரியாது. திடீரென்று பாய்ந்து வந்து தாக்கும். ஐயோ என்று அலறுவதற்குள் அள்ளி எடுத்து விழுங்கிவிடும். எல்லாப் பொருள்களுக் குள்ளும் எல்லா மனிதர்களுக்குள்ளும் எல்லா இடங்களிலும் அந்தப் பூதம் ஒளிந்து கொண்டிருக்கிறது. அதென்ன பூதம், நான் பார்த்ததில்லையே என்கிறீர்களா? பார்க்க முடியாது. கேட்கத்தான் முடியும் உங்கள் உலகின் பூதத்தை.
ஒரு சின்னஞ்சிறிய கடிகாரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அது என்ன செய்கிறது? மணி காட்டுகிறது என்பீர்கள். அதை மட்டுமா செய்கிறது? மணி காட்டுகிறேன் பேர்வழி என்று வாய் ஓயாமல் ‘டிக் டிக் டிக்’ என்று கத்திக்கொண்டே இருக்கிறது. நல்ல பிள்ளையாகக் காற்றை மட்டுமே வழங்கும் ஒரே ஒரு மின்விசிறியைக்கூட இதுவரை நான் கண்டதில்லை. ‘கர் கர் கர்’ என்று கத்திக்கொண்டேதான் சுற்றத் தெரியும் அதுக்கு. பாட்டு கேட்கலாம் என்று உங்கள் வானொலியைத் திருகினால் ஓவென்று கத்துகிறது. ‘ஊ’ என்று ஊளையிடுகிறது. அது பாட்டா அல்லது வானொலிக்குத் தொண்டை வலியா என்று இன்றுவரை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.
என்னென்னவோ வாகனங்களைத் தயாரித்து வைத்திருக்கிறீர்கள். மணிக்கு இவ்வளவு கிலோ மீட்டர் போகும், அவ்வளவு கிலோ மீட்டர் பறக்கும் என்று பெருமையோடு பேசுவீர்கள். சரி பார்ப்போம் என்று ஏறி உட்கார்ந்தால், தடதடதட என்று குலுங்குகிறது. சாலையில் செல்லும் கார், நீரில் மிதக்கும் கப்பல், வானில் பறக்கும் விமானம் என்று எல்லாமே அவற்றின் உருவத்துக்கு ஏற்றதுபோல் விதவிதமாகக் குலுங்கியபடி ஓலமிடுகின்றன. துவைப்பதற்கும் அரைப்பதற்கும் இயந்திரங்கள் கண்டுபிடித் திருக்கிறீர்கள், வாழ்த்துகள். ஆனால் ஏன் எல்லாமே குடுகுடுகுடு என்று கூக்குரல் இடுகின்றன? தையல் இயந்திரத்தைத் தொட்டால் தடதட என்று ஆடுகிறது. அவற்றின் வாயைத் தைப்பதற்கு வழி இல்லை உங்களிடம்.
வீட்டுக்குள் ஆயிரம் ஓசைகள். வெளியில் பத்தாயிரம் ஓசைகள். காலார ஐந்து நிமிடங்கள் நடக்க முடிகிறதா உங்கள் உலகில்? நிம்மதியாக ஒரு பூங்காவில் அமர்ந்திருக்க முடிகிறதா? அங்கே சிலர் கத்துவார்கள். இங்கே சிலர் தடதடவென்று ஓடுவார்கள். அங்கே குழந்தைகள் அழும். இங்கே யாராவது எதையாவது தொப்பென்று போடுவார்கள். பேசுகிறேன் என்றும் பாடுகிறேன் என்றும் சொல்லிக்கொண்டு ஒவ்வொருவரும் கத்திக்கொண்டிருப்பீர்கள். சத்தம் போடாமல் எதுவும் செய்ய முடியாது உங்களால். சத்தம் போடாத எதையும் கண்டுபிடிக்க முடியாது உங்களால். எங்கே சத்தம் அதிகரிக்கிறதோ அங்கே வளர்ச்சி அதிகரிக்கும் என்பதுதான் உங்கள் கணக்கு. கிராமத்தைவிட நகரம் அதிகம் சத்தமிடுகிறது. நகரத்தைக் காட்டிலும் பெருநகரம் மிக அதிக சத்தத்தை எழுப்புகிறது.
எங்கே சத்தம் இருக்கிறதோ அங்கே சண்டை இருக்கிறது, சச்சரவு இருக்கிறது, குழப்பம் இருக்கிறது. அதனால்தான் சத்தத்தைப் பூதம் என்கிறேன். பூதம் இருக்கும் இடம் எனக்கு வேண்டாம் என்கிறேன். உன் உலகில் மட்டும் அப்படியே அமைதி கொஞ்சிக்கொண்டிருக்கிறதா என்று நீங்கள் கேட்கலாம். ஆம், கொஞ்சிக்கொண்டுதான் இருக்கிறது. ஓர் ஓடையின் முன்பு அமர்ந்திருப்பேன். சலசலவென்று தண்ணீர் பாய்ந்து கொண்டிருக்கும். எங்கோ தொலைவில் ஒரு மயில் வாய் திறக்கும். அந்தக் குரலுக்கு இன்னொரு மயில் எங்கிருந்தோ விடை கொடுக்கும். கிளைகள் அசையும் ஒலியை நீங்கள் கேட்கலாம். ஓர் இலை இன்னொன்றோடு உரையாடுவதை நீங்கள் கேட்கலாம். காற்றின் ஒலியைக் கேட்கிறீர்களா? உஷ் உஷ் என்று உங்கள் தலைமுடியை அது கலைத்து விளையாடும். தேரைகளின் ஓசையை இரவெல்லாம் கேட்டிருக்கிறேன். சிள்வண்டுகள் கூட்டம் சேர்த்துக்கொண்டு பாடினால் கண்ணை மூடிக்கொண்டு கேட்கலாம். நடு இரவில் கரடி விழித்துக்கொண்டு உறுமும். ஒரு பாம்பு காய்ந்த சருகுகள்மீது ஊர்ந்து செல்லும். சட்டென்று பிடித்துக்கொண்டு பின்னி எடுக்கும் மழை. கிளை ஒன்று ஒடிந்து கீழே வரும்.
இவை அனைத்தும் காது கொடுத்துக் கேட்க வேண்டிய ஓசைகள். நான் கேட்டிருக்கிறேன், அதனால் சொல்கிறேன். இன்னும் இன்னும் பல ஓசைகளைக் கேட்டிருக்கிறேன். ஆனால், இவை என் காதுகளைப் பிளக்காது. என் தலையை உடைக்காது. மாறாக, என்னை வருடிக்கொடுக்கும். இயற்கையின் ஓசை ஒவ்வொன்றும் ஒருவித இசை. என் காட்டில் ஓசைகளே இல்லை. இசைதான் வாழ்கிறது. இசைதான் காட்டை இயக்குகிறது. அதுதான் என் காதுகளை நிறைக்கிறது. என் இதயத்துக்குள் இறங்கி அங்கேயே தங்குகிறது. ஓசை இல்லை என்பதால் என் காட்டில் சண்டைகள் இல்லை. போர் இல்லை. பொறாமை இல்லை. பணம் இல்லை. ஓசை இல்லை என்பதால் எங்கும் அன்பு நிறைந்திருக்கிறது. அழகு நிறைந்திருக்கிறது. அமைதி நிறைந்திருக்கிறது. இப்போது சொல்லுங்கள். என் காட்டைவிட்டுப் பூதங்கள் வாழும் உலகுக்கு நான் வருவேனா?
(இனிக்கும்)