டிங்குவிடம் கேளுங்கள்: மயங்கியவர் முகத்தில் தண்ணீர் தெளிப்பது ஏன்?
ஒரு பொருள் காணாவிட்டால், அங்கே இருப்பவர்களில் யார் வசதி குறைவானவரோ அவர்தான் எடுத்திருப்பார் என்கிற மோசமான முடிவுக்கு ஏன் வருகிறார்கள், டிங்கு?
- ஜி. செந்தில் குமார், 9-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, மதுரை.
ஒரு பொருளை வாங்கும் வசதி இல்லாதவர்கள் அடுத்தவர் பொருளை எடுத்துவிடுவார்கள் என்கிற எண்ணம் நீங்கள் சொல்வதுபோல் மிக மிக மோசமானது. வசதியை வைத்து ஒருவரைச் சந்தேகப்பட்டு, ஒரு முடிவுக்கு வந்துவிடக் கூடாது. அப்படி ஒரு முடிவுக்கு வந்தால், அவர்கள் அறியாமையில் இருக்கிறார்கள் என்று அர்த்தம். அதே நேரம் எல்லாரும் இப்படி நினைக்க மாட்டார்கள் என்பதையும் நாம் கவனத்தில்கொள்ள வேண்டும். ஒருவரை இப்படிச் சந்தேகப்பட்டால், அதன் மூலம் அவருக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. சந்தேகப்பட்டவர்தான், உண்மை தெரிந்து இப்படித் தவறு செய்துவிட்டோமே என்று வருத்தப்பட நேரிடும். நேர்மை என்பது வசதி தொடர்பானது அல்ல, செந்தில் குமார்.
ஒருவருக்கு மயக்கம் ஏற்படும்போது அவர்கள் முகத்தில் தண்ணீர் தெளிப்பது ஏன், டிங்கு?
- எஸ்.ஜெ. கவின், 9-ம் வகுப்பு, கிறைஸ்ட் தி கிங் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கும்பகோணம்.
காலையில் சாப்பிடாதது, வெயிலில் அதிக நேரம் நிற்பது, பயத்தில் இருப்பது போன்ற காரணங்களால் மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் சில நொடிகள் தடைபடுகிறது. அப்போது மயக்கம் ஏற்படுகிறது. இப்படி மயக்கம் அடைந்தவர் முகத்தில் தண்ணீரைத் தெளிக்கும்போது, முகத்தில் உள்ள நரம்புகள் தூண்டப்படும். மூளை நரம்புகளும் வேகமாக வேலை செய்யும். இதனால் மயங்கியவர் சட்டென்று எழுந்துவிடுவார். மேலே சொன்ன காரணங்களால் ஏற்படும் மயக்கத்தைக் ‘குறு மயக்கம்’ என்கிறார்கள். தண்ணீர் தெளித்தும் மயக்கத்திலிருந்து எழாவிட்டால், அவர்களுக்கு நோய் காரணமாக ஏற்பட்ட ‘நெடு மயக்க’மாக இருக்கலாம். அதனால் உடனே மருத்துவரிடம் அவரை அழைத்துச் சென்றுவிட வேண்டும், கவின்.
