கதை: எங்கே சென்றது பசு?

கதை: எங்கே சென்றது பசு?
Updated on
2 min read

மணியனூர் அழகிய கிராமம். அங்கே வசிக்கும் தங்கமுத்து, ஊர்த் தலைவரிடம் ஒரு புகார் கொடுத்திருந்தார். ஊர்த் தலைவர் குற்றம் சாட்டப்பட்ட சின்னராசுவை அழைத்து வரச் சொன்னார்.

“தங்கமுத்து, உங்களோட புகாரை எல்லாருக்கும் சொல்லுங்க.”

“அனைவருக்கும் வணக்கம். நான் நேற்று என் பசு மாட்டை

மேய்ச்சலுக்காக ஆற்றங்கரைப் பக்கம் கொண்டு சென்றேன். வெயில் அதிகமாக இருந்ததால் ஒரு மர நிழலில் இளைப்பாறியபோது சற்றே கண்ணயர்ந்துவிட்டேன். விழித்துப் பார்த்தபோது என் பசுவைக் காணவில்லை. பதற்றத்துடன் ஒவ்வொரு தெருவாகத் தேடிக்கொண்டு சென்றேன். எங்கள் பக்கத்துத் தெருவில் இருக்கும் சின்னராசுவின் வீட்டில் பசு இருப்பதைப் பார்த்தேன். அவரிடம் சென்று கேட்டபோது, அதைச் சந்தையில் வாங்கியதாகச் சொல்லிவிட்டார். தாங்களே இதைத் தீர விசாரித்து, பசுவை என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று மூச்சு விடாமல் சொல்லி முடித்தார் தங்கமுத்து.

“நீங்க என்ன சொல்றீங்க சின்னராசு?” என்று கேட்டார் தலைவர்.

தங்கமுத்துவிடம் சொன்னதையே தலைவரிடமும் சின்னராசு சொன்னார். தலைவருக்கு என்ன தீர்ப்பு சொல்வது என்று குழப்பமாக இருந்தது. தங்கமுத்துவைப் பார்த்தார், அவர் பசுவைத் தொலைத்த வருத்தத்தில் இருந்தார். சின்னராசுவைப் பார்த்தார், அவர் மகிழ்ச்சியாக இருந்தார்.

“இன்று இரவு நீங்கள் இருவரும் என் வீட்டில் தங்குங்கள். பசுவும் என் வீட்டில் இருக்கட்டும். நாளை காலை தீர்ப்பை வழங்குகிறேன். உங்கள் இரண்டு பேருக்கும் சம்மதமா?” என்று கேட்டார் தலைவர்.

இரண்டு பேரும் சம்மதம் என்றனர். சின்னராசு பசுவைக் கொண்டுவந்து தலைவர் வீட்டில் கட்டி வைத்தார்.

பொழுது விடிந்தது.

தலைவர் தங்கமுத்துவையும் சின்னராசுவையும் பசு கட்டிவைத்திருந்த இடத்துக்கு அழைத்துச் சென்றார். ஆனால், அங்கே பசுவைக் காணவில்லை.

“தலைவரே என் பசுவைக் காணோமே?” என்று பதறினார் தங்கமுத்து.

“பதற வேண்டாம். சின்னராசு, உங்க வீட்டில் பசு இருக்கிறதா என்று பார்ப்போம், வாங்க ரெண்டு பேரும்” என்று நடந்தார் தலைவர்.

மூன்று பேரும் சின்னராசுவின் வீட்டுக்குள் நுழைந்தனர். அங்கு பசு இல்லை.

“தங்கமுத்து வீட்டுக்குப் போகலாம்” என்று இரண்டு பேரையும் அழைத்துச் சென்றார் தலைவர். அங்கே கொட்டிலில் புல்லைத் தின்று கொண்டு இருந்தது பசு.

“அடடா! பசு தன்னுடைய வழக்கமான இருப்பிடத்தைத் தேடி இங்கே வந்திருக்கிறது. மனிதர்கள் குணம் மாறலாம். ஆனால், பசுவின் குணம் மாறாது. தான் வாழ்ந்து, வளர்ந்த இடத்தை ஒருபோதும் மறக்காது. இந்த உண்மையைத் தெரிந்துகொள்ளவே நேற்று இரவு மாட்டுக்கு இரை போடாமல், கயிற்றை அவிழ்த்து விட்டு வைத்திருந்தேன். அது பசி தாங்காமல் இங்கே வந்திருக்கிறது. இப்போது பசு யாருக்குச் சொந்தம் என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை” என்று சின்னராசுவைப் பார்த்தார் தலைவர்.

“ஏதோ ஆசையில் இப்படிச் செய்துவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள் தலைவரே” என்றார் சின்னராசு.

“உங்களுக்கு அபராதம் உண்டு” என்றார் தலைவர்.

“சின்னராசு இனி இப்படிச் செய்ய மாட்டார். அதனால் அவருக்கு அபராதம் விதிக்க வேண்டாம்” என்றார் தங்கமுத்து.

உடனே தங்கமுத்துவுக்கு நன்றி சொன்னார் சின்னராசு.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in