

அன்று பள்ளியிலிருந்து வீடு திரும்பிய வேணி, “நயனி... நயனி... நீ எங்கதான் இருக்கே?” என்று கேட்டபடியே வந்தாள்.
நயனியிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை.
அம்மாவிடம் சென்றாள். “அம்மா, எங்கள் வகுப்பில் நயனிக்கு மூளை கிடையாதுன்னு சொல்றாங்கம்மா.”
“அதைவிடு, முதல்ல நீ இந்தப் பாலைக் குடி. பிறகு பேசலாம்” என்றார் அம்மா.
அம்மாவின் கையிலிருந்த டம்ளரை வாங்கிய வேணி, தீவிர யோசனையில் ஆழ்ந்தாள்.
நயனி ஒரு குட்டி ரோபாட் கரடி. வேணிக்காக அவள் அப்பா ஓராண்டு செலவிட்டு, கரடி ரோபாட்டை உருவாக்கிக் கொடுத்திருந்தார்.
வேணியும் நயனியும் இணைபிரியா நண்பர்கள் ஆனார்கள். தினமும் மாலை நயனியும் வேணியும் சேர்ந்து விளையாடுவார்கள். வேணிக்குத் தேவையான உதவிகள் அனைத்தையும் நயனி செய்து தரும்.
இரவு ஒன்பது மணிக்கு நயனியின் இயக்கம் நின்றுபோகும். உறக்க நிலைக்குச் சென்றுவிடும். அதற்கு முன்னால், வேணியிடம் இரவு வணக்கம் சொல்வதோடு, ஒரு முத்தம் தந்து விடைபெறும். மறுநாள் காலை ஐந்து மணிவரை யாராலும் அதை எழுப்பவே முடியாது.
வேணிக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் வகையில் நயனியை வடிவமைத்திருந்தார் அவள் அப்பா. ஓர் ஆசிரியர் போல வேணிக்குப் படிக்கும் நேரத்தை நினைவூட்டும். சந்தேகங்களைத் தீர்த்து வைக்கும். எழுத வேண்டிய பாடங்களை எழுத வைக்கும். சத்தமாக நயனி படிக்க வைக்கும்.
பள்ளியில் இருந்து வந்தவுடன் கொஞ்ச நேரம் வேணி தோட்டத்தில் பொழுதைக் கழிப்பாள். அங்குள்ள கனகாம்பரம், சாமந்தி, ரோஜா செடிகளில் மலர்ந்துள்ள பூக்களைச் சேகரிப்பாள். பிறகு செடியிலிருந்து உதிர்ந்த இலைகளை அகற்றுதல், தண்ணீர் ஊற்றுதல் போன்ற வேலைகளைச் செய்வாள். அவளுக்கு நயனி எல்லா உதவிகளையும் செய்து தரும்.
‘ஓ, இப்படியொரு ரோபாட் நம்மிடம் இருந்தால் எப்படி இருக்கும்?’ என்று பலரையும் வியப்பில் ஆழ்த்தியது நயனி.
நயனிக்குத் தமிழும் ஆங்கிலமும் தெரிந்திருந்தது. இல்லை... ரோபாட்டின் மூளையில் பதிவு செய்திருந்தார் வேணியின் அப்பா. ஒரு பொத்தானை அழுத்தி வேணி பேசியதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கச் சொன்னால் கண்ணிமைக்கும் நேரத்தில் சரியாகச் சொல்லி, அருகில் உள்ளவர்களைத் திகைப்பில் ஆழ்த்தும்.
பால் குடித்து முடித்த மகளை அழைத்தார் அம்மா.
“உண்மை என்னன்னா, நயனியைச் செயற்கை நுண்ணறிவோடுதான் அப்பா உருவாக்கி இருக்கார். அது, மனித மூளைக்கு இணையாகச் செயல்படுது. ஆனால், மனிதனை விஞ்சிவிடாது” என்றார் அம்மா.
“ரோபாட்கள் பணக்காரர் வீட்டுச் செல்லப் பிராணிகளாம். ஏழைகளுக்கு உதவாதாம். அது உண்மையாம்மா?”
“ஆமாம். ஏழை, எளிய மக்கள் ரோபாட்களை விலை கொடுத்து வாங்க முடியாதுதான். ஆனால், அவற்றால் எளியோருக்கும் உதவ முடியும்.”
“எப்படிம்மா?”
“இப்போதெல்லாம் சாக்கடைகளைச் சுத்தம் செய்ய இந்த ரோபாட்களைப் பயன்படுத்துறாங்க வேணி. மனிதக் கழிவை மனுசங்களே அள்ளும் நிலை இனி இருக்காது. ரோபாட்களே செஞ்சிடும். அது, மக்களுக்குக் கெடச்ச மிகப்பெரிய உதவிதானே? அது மட்டுமல்ல, மனிதர்கள் ஈடுபடும் ஆபத்தான வேலைகளையும் அவர்களுக்குப் பதில் ரோபாட்கள் செய்கின்றன. இதனால் மனித உயிர்கள் காப்பாற்றப்படுது.”
“ஓ, நாளைக்கே நான் இதையெல்லாம் என் நண்பர்களிடம் சொல்றேம்மா.”
பக்கத்து அறையிலிருந்து அந்த உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த நயனி கதவைத் திறந்து உள்ளே வந்தது. ஆனால், எதிர்பாராமல் கீழே விழுந்தது. கண்களை மூடிக்கொண்டது.
வேணியின் முகத்தில் பயம் தெரிந்தது. எவ்வளவோ முயற்சி செய்தும் நயனி பேசவில்லை.
வேணிக்கு அழுகை வந்தது.
வீட்டுக்குள் நுழைந்த அண்ணன், “அழாதே வேணி” என்று ஆறுதல் சொல்லிவிட்டு, நயனியை மீண்டும் செயல்பட வைக்கப் பல முயற்சிகளைச் செய்தான். அரை மணி நேரத்துக்குப் பிறகு நயனி மீண்டும் செயல்பட ஆரம்பித்தது.
“வேணிக்கு ஒரு நல்ல பரிசு கொடு நயனி” என்று அண்ணன் கட்டளை இட்டதும், சில நிமிடங்களில் வேணியை வரைந்து கொடுத்துவிட்டது நயனி.
“நீ என்னோட பெஸ்ட் பிரண்ட்” என்று நயனியைக் கட்டிக்கொண்டாள் வேணி.
ஓவியம் விளக்கொளியில் ஜொலித்துக் கொண்டிருந்தது. ஒன்பது மணி என்று கடிகாரம் அறிவிக்கவும் ஓய்வெடுக்கச் சென்றுவிட்டது நயனி.