

எங்கள் வீட்டில் மற்றவர்களை விட நான் சற்று உயரம் குறைவாக இருக்கிறேன். என்னைக் ‘குள்ளக் கத்தரிக்காய்’ என்று அழைப்பதால், என்னை அறியாமல் தாழ்வு மனப்பான்மை வந்துவிட்டது. குதிகால் செருப்பு அணியலாமா, இந்த உடை சரி வருமா என்று எப்போதும் உயரத்தைப் பற்றியே யோசித்துக்கொண்டிருக்கிறேன். இதிலிருந்து வெளிவர நான் என்ன செய்ய வேண்டும், டிங்கு?
–ஆர். கே. அபிராமி, கமுதி.
உயரம், நிறம், துருத்திய பல், மாறு கண் என்று இயற்கையாக அமைந்த உடல் அமைப்பை வைத்துக் கிண்டல் செய்வது நம் வீடுகளில் சர்வ சாதாரணமானது. வீட்டில் உள்ளவர்களும் காயப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இதைச் சொல்வதில்லை. காலப்போக்கில் சம்பந்தப்பட்டவரை இது காயப்படுத்தும் என்றும் நினைப்பதில்லை. வீட்டில் உள்ளவர்களிடம் உயரத்தை வைத்து, கிண்டல் செய்வது எனக்குப் பிடிக்கவில்லை அல்லது என்னை வருத்தமடையச் செய்கிறது என்று அமைதியாகச் சொல்லிவிடுங்கள். வீட்டில் உள்ளவர்கள் உங்களைப் புரிந்துகொள்வார்கள்.
இன்னொரு முறை உங்களை அப்படி அழைக்க மாட்டார்கள். நீங்களும் உயரம் குறித்தெல்லாம் கவலைப்பட்டுக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. நிறம், உயரம், அழகு போன்றவற்றில் என்ன இருக்கிறது? நீங்கள் யார் என்பதை இவை எல்லாம் தீர்மானிக்கப் போவதில்லை. உங்களின் எண்ணம், செயல் போன்றவைதான் நீங்கள் யார் என்பதைத் தீர்மானிக்கும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள், அபிராமி.
– வி. திவ்யதர்ஷினி, 4-ம் வகுப்பு, போடிநாயக்கனூர், தேனி.
தவளைகள் நீரிலும் நிலத்திலும் வாழக்கூடியவை. இடம்பெயர்வதற்காகத் தாவுகின்றன, நடக்கின்றன, ஓடுகின்றன, நீந்துகின்றன, மரம் ஏறுகின்றன. இந்த இயக்கங்களுக்கு எல்லாம் தவளையின் உறுதியான பின்னங்கால்கள்தான் துணைபுரிகின்றன. குறிப்பாக நீர்நிலைகளில் திசை மாற்றுவதற்குப் முன்னங்கால்கள் பயன்படுகின்றன.
தண்ணீரை உந்தி, முன்னோக்கிச் செல்வதற்கு நீண்ட பின்னங்கால்கள்தான் உதவிபுரிகின்றன. வேகமாக நீந்துவதற்கும் எதிரிகளிடமிருந்து சட்டென்று தப்பிப்பதற்கும் காரணம் நீண்ட பின்னங்கால்களே. தவளையின் வெற்றிகரமான வாழ்க்கைக்கு நீண்ட பின்னங்கால்களே காரணம், திவ்யதர்ஷினி.
பேய் இல்லை என்று சொன்ன டிங்கு, கடவுள் இருக்கிறாரா என்ற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லாமல் இருப்பது ஏன்? உனக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறதா?
– எஸ். முத்து சுப்பிரமணியன், 8-ம் வகுப்பு, ரோஸ்மேரி மெட்ரிக் பள்ளி, பாளையங்கோட்டை; ஹ. நேஹா, 7-ம் வகுப்பு, எஸ்.ஜே.எஸ்.வி. சிபிஎஸ்இ பள்ளி, கோவை.
அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை, முத்து சுப்பிரமணியன். ‘கடவுள்’ என்பது நம்பிக்கை சார்ந்த விஷயம். பூக்களுக்கு மணம் எப்படி வருகிறது, சூரியன் இன்னும் எவ்வளவு காலம் இருக்கும் போன்ற கேள்விகளுக்கு எல்லாம் அறிவியல் ரீதியான விளக்கங்களைக் கண்டுபிடித்து வைத்திருக்கிறோம்.
பூக்களுக்கு மணம் எப்படி வருகிறது என்று உறுதி செய்யப்பட்டுவிட்டதால் அதை வைத்து உங்களுக்குப் பதில் சொல்லிவிட முடியும். இந்த அறிவியல் உண்மை என்பது மாறாதது, மாற்றுக் கருத்துகளுக்கு இடம் இல்லாதது. ஆனால் நம்பிக்கை என்பதை அப்படிச் சொல்ல முடியாதே.
உங்களுக்கு நம்பிக்கை இருக்கலாம், இன்னொருவருக்கு நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். இன்று உங்களுக்குக் கடவுள் மீது நம்பிக்கை இருக்கலாம். பிற்காலத்தில் நீங்கள் இதுகுறித்து தேடிப் படித்து, பல விஷயங்களைக் கற்று, ஒரு முடிவுக்கு வருவீர்கள்.
அப்போது கடவுள் நம்பிக்கை இருந்தால் தொடருங்கள். கடவுள் நம்பிக்கை இல்லை என்றால் விட்டுவிடுங்கள். இது ஒவ்வொருவர் விருப்பம் சார்ந்தது. நானும் படித்து, கற்றுத் தேர்ந்துதான் சொந்தமாக ஒரு முடிவுக்கு வந்தேன்,