கற்கள் நடந்து போகுமா?

கற்கள் நடந்து போகுமா?
Updated on
1 min read

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ‘ரேஸ் டிரெக் பிளாஸா’ என்ற இடம் மிகவும் பிரசித்தி பெற்றது. இதற்கு இன்னொரு பெயரும் உண்டு.‘மரண சமவெளி’ (Death Valley) என்று. ஏன் தெரியுமா?

இங்கு கண்ணுக்கெட்டிய தூரம் வரை மனிதர்களையோ உயிரினங்களையோ, மரம், புல் பூண்டுகளையோ பார்க்க முடியாது. கிட்டத்தட்ட பாலைவனம் போல என்று வைத்துக் கொள்ளுங்கள். எந்த விதமான உயிரினங்களும் இங்கே இல்லாததால் இதை மரண சமவெளி என்றழைக்கிறார்கள்.

இங்கே வறட்சி அதிகமாக உள்ள காலங்களில் நிலங்கள் வெடிக்கும். குளத்தில் தண்ணீர் வற்றினால் வறட்டி போல இருக்கும் அல்லவா? அது போல. அப்படி வெடிக்கும் இடங்களில் எல்லாம் ‘ஐஸ்’ படர்ந்திருக்கும். இங்கு இன்னொரு மர்மமும் இருக்கிறது. இந்த மர்ம பூமியில் கற்கள் தானாகவே நகர்ந்து செல்லுமாம். நீண்ட காலமாக நடந்து வரும் இந்த மர்மத்திற்கான காரணம் இதுவரை யாருக்குமே தெரியாது.

கற்கள் தானாக நகருவதற்கான அடையாளங்கள் மட்டும் தெளிவாக உள்ளன. இந்த இடத்தில் உள்ள கற்கள் 2 அல்லது 3 ஆண்டுகளில் அந்த முழுப் பிரதேசத்தையுமே சுற்றி வருவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

இந்தப் பரந்த நிலப்பரப்புக்கு அருகே உள்ள மலையில் இருந்து கற்கள் உடைந்து துண்டுகளாக விழுகின்றன. அவையே இந்தப் பகுதியில் இப்படிச் சுற்றித் திரிகின்றன. சில கற்கள் 10 ஆயிரம் அடிகள் வரைகூட நகர்கின்றனவாம். இன்னும் சில கற்களோ ஒரு அடி மட்டுமே நகர்கின்றனவாம்.

இந்த மர்மப் பிரதேசம் பற்றி முதன் முதலில் 1948-ம் ஆண்டில் தகவல் வெளியானது. 1972-80 ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் ஆய்வுகள் சூடுபிடித்தன. அங்கே வேகமாக வீசும் காற்றின் காரணமாக கற்கள் நகர்கின்றன என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால், இங்கே கடும் காற்று வீசுவதே இல்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

புரியாத புதிராய் விளங்கும் இந்தப் பிரதேசத்தில் மனித நடமாட்டம் இல்லாவிட்டாலும், கற்களின் நடமாட்டமும் ஆய்வுகளும் மட்டும் விடாமல் நடந்துகொண்டே இருக்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in