கதை: காகம் கரைந்தால் விருந்தினர் வருவார்களா?
நான்சிக்குக் கேள்விகள் கேட்பது என்றால் மிகவும் பிடிக்கும். அது ஏன் அப்படி இருக்கிறது, இது ஏன் இப்படி இருக்கிறது என்று எப்போதும் கேள்விகளைக் கேட்டுப் பதிலைத் தெரிந்துகொள்வதில் அவள் ஆர்வமாக இருப்பாள்.
அன்று காகம் ஒன்று பறந்து வந்து, நான்சி வீட்டுத் திண்ணையில் அமர்ந்து, ‘கா... கா...’ என்று கரைந்தது.
“அம்மா, இந்தக் காக்கா ஏன் இப்படிக் கத்திக்கிட்டே இருக்கு? அதுக்கு எதுவும் பிரச்சினையா?” என்று நான்சி கேட்டாள்.
“கொஞ்சம் இரு, அதுகிட்ட கேட்டுச் சொல்றேன்” என்றார் நான்சியின் அம்மா.
உடனே நான்சிக்குச் சிரிப்பு வந்துவிட்டது. “எனக்கு இப்போ பதில் தெரிஞ்சே ஆகணும்” என்றாள்.
“ஒத்த காக்கா கத்தினால் நம்ம வீட்டுக்கு விருந்தாளி வருவாங்கன்னு பெரியவங்க சொல்வாங்க.
மத்தபடி அது ஏன் கத்துதுன்னு எனக்குத் தெரியல நான்சி.”
“போங்கம்மா, இதை எல்லாம் நான் நம்ப மாட்டேன். உண்மையான காரணம் வேணும்.”
பேசிக்கொண்டிருந்த போதே, நான்சியின் அத்தை காரிலிருந்து இறங்கினார்.
“பார்த்தாயா, இதோ உங்க அத்தை
வந்துட்டாங்க. காக்கா சரியா சொல்லியிருக்கு” என்றபடி விருந்தினரை வரவேற்கச் சென்றார் நான்சியின் அம்மா.
நான்சிக்கு ஆச்சரியமாக இருந்தது. ‘அது எப்படி, அத்தை வருவது காக்காவுக்குத் தெரியும்?’ என்று யோசித்தாள்.
காகத்தைத் தேடினாள். அங்கே அது இல்லை. தெருவில் எட்டிப் பார்த்தாள். அது குப்பைத் தொட்டியில் எதையோ கொத்தித் தின்று கொண்டிருந்தது. அருகில் இன்னும் நான்கு, ஐந்து காகங்கள் இருந்தன.
‘விருந்தினருக்கும் காகத்துக்கும் தொடர்பில்லை. வேறு என்னவோ காரணம் இருக்கு. அதை எப்படியாவது கண்டுபிடிச்சே தீரணும்’ என்று நினைத்தாள் நான்சி.
அத்தை வாங்கிவந்த தின்பண்டங்களைச் சாப்பிட்டுக்கொண்டே யோசித்தாள்.
நாள்கள் சென்றன.
“கா... கா...” என்று காகம் ஒன்று தொடர்ந்து கரைந்துகொண்டிருந்தது.
அம்மா நான்சியைப் பார்த்தார். அவள் வாசலுக்கு ஓடினாள்.
“எதுக்கு இப்படி ஓடறே நான்சி?”
“ஒத்த காக்கா கத்தினா வீட்டுக்கு விருந்தாளி வருவாங்கன்னு சொன்னீங்க, அதான் யாரும் வர்றாங்களான்னு பார்க்கப் போறேன்.”
அம்மாவுக்குச் சிரிப்பு வந்தது.
அன்று விருந்தினர் யாரும் நான்சியின் வீட்டுக்கு வரவில்லை.
“போன மாசம் காக்கா கத்தினவுடன் அத்தை வந்தாங்க. ஆனா, இன்னிக்குக் காக்கா கத்தியும் யாரும் வரலையே?” என்று அம்மாவிடம் கேட்டாள் நான்சி.
“எல்லாத் தடவையும் வர மாட்டாங்க.”
“அது எப்படிம்மா? தனியா இருக்கும்போது மட்டும்தான் காக்கா அதிகமா கத்துது. கூட்டமா இருக்கும்போது இவ்வளவு கத்தறது இல்ல.”
“அட, இவ்வளவு தெரிஞ்சு வச்சிருக்கீயே! நீ சொல்றது உண்மைதான் நான்சி.”
வாசலுக்குச் சென்றாள். குப்பைத் தொட்டியின் மீது அமர்ந்து ஒரு காகம் தொடர்ந்து கரைந்துகொண்டே இருந்தது.
சில நிமிடங்களில் ஏராளமான காகங்கள்
குப்பைத் தொட்டிக்கு வந்து சேர்ந்தன. எல்லாம் ஒற்றுமையாக எதையோ கொத்தித்தின்றன.
நான்சியின் முகத்தில் மகிழ்ச்சி. அவளது கேள்விக்குப் பதில் கிடைத்துவிட்டது! அம்மாவிடம் சொல்வதற்காக வீட்டுக்குள் ஓடினாள்.
“என்னாச்சு நான்சி? யாராவது வர்றாங்களா?” என்று கேட்டார் அம்மா.
“ஆமாம், ஆமாம்.”
“யாரு?”
“பெரியப்பா, பெரியம்மா, அக்கா, அண்ணன் வரப் போறாங்கம்மா.”
“வரப் போறங்களா?”
“ஆமாம். பூரி, கிழங்கு பண்ணப் போறதா சொன்னீங்களே, அவங்களுக்கும் சேர்த்துச் செய்யுங்கம்மா.”
“அவங்க வர்றதா எப்போ சொன்னாங்க?”
“இதோ, இப்பதான்” என்று சொல்லிவிட்டு, போன் செய்தாள் நான்சி.
“பெரிப்பா, நான்சி பேசறேன். இரவு சாப்பிட எல்லாரும் வந்துருங்க. ஆமாம், பூரியும் கிழங்கும் செய்யச் சொல்லிருக்கேன்” என்று சொல்லிவிட்டு வந்தாள் நான்சி.
“என்ன ஆச்சு உனக்கு? ஏன் இப்படி எல்லாம் பண்றே?”
“காக்கா எதுக்குக் கத்துதுன்னு நான் கண்டுபிடிச்சிட்டேம்மா.”
“எதுக்கு, என்ன கண்டுபிடிச்சே?”
“உணவைக் கண்டதும் தன் உறவினர்களுக்குக் குரல் கொடுத்து அழைக்குது. அந்த விஷயத்தைக் கண்டுபிடிச்சதைக் கொண்டாடத்தான் பெரியப்பாவை அழைத்தேன்.”
“ஓ, கிரேட் நான்சி.”
“ஓ, உங்களுக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்தும் எனக்குச் சொல்லல...”
“நீயா கண்டுபிடிக்கிறீயான்னு பார்த்தேன். கண்டுபிடிச்சிட்டே!”
“அப்போ இனி காக்கா கத்தினால்?”
“விருந்தாளி வர மாட்டாங்க. காக்காவுக்கு உணவு கிடைச்சு, கூட்டத்தை அழைக்குதுன்னு சொல்வேன்.”
அம்மாவுடன் நான்சியும் சேர்ந்து சிரித்தாள்.
