பொம்மைகளின் கதை: ஜப்பானின் அடையாளம் ஹகடா

பொம்மைகளின் கதை: ஜப்பானின் அடையாளம் ஹகடா

Published on

தெ

ற்கு ஜப்பானில் கியுஷூ தீவில் அமைந்திருக்கும் அழகிய நகரம் புகுவோகா. புகுவோகாவும் அருகில் உள்ள ஹகடா நகரமும் 1889-ல் இணைந்து, புகுவோகா என்றே அழைக்கப்படுகின்றன. இந்த நகரின் பெருமை மிக்க அடையாளம் ஹகடா பொம்மைகள்.

ஜப்பான் முழுவதுமே கைவினைக் கலைஞர்களுக்கும் பொம்மைகளுக்கும் புகழ்பெற்றது. ஹகடா பொம்மைகள் கொலு பொம்மைகளை ஒத்த வடிவுடையவை.

மெருகூட்டப்படாத பளிங்குக் களிமண்ணில் செய்யப்படும் ஹகடா பொம்மைகள், 400 ஆண்டுகள் தொன்மையுடையவை. கூரை ஓடு செய்யும் கைவினைஞரான சவுஹிச்சி மசாகிதான் இந்தப் பொம்மைகளைச் செய்யத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் அதிக வண்ணங்கள் இல்லாமல் இருந்த பொம்மைகளுக்கு வண்ணம் கொடுத்தவர் 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிச்சிபை நகானொகொ.

களிமண்ணை நீர் ஊற்றி நன்கு பிசைந்துகொள்வார்கள். கத்தி, கரண்டி கொண்டு செதுக்குவார்கள். பொம்மையின் உட்புறத்திலுள்ள களிமண்ணை நீக்கிவிடுவார்கள். அப்போதுதான் பொம்மை லேசாக இருக்கும். அந்தப் பொம்மையைப் பத்து நாட்கள் வெயிலில் காய வைக்க வேண்டும். பின்னர் சூளையில் 900 டிகிரி வெப்பநிலையில் 8 மணி நேரம் சுடுவார்கள். சூடு குறைந்த பிறகு காய்கறி, தாவரச் சாறுகளிலிருந்து எடுக்கும் வண்ணங்களைப் பூசுவார்கள்.

மென்மையான மேற்பரப்பும் அற்புதமான கலைத்திறனும் கொண்டவை ஹகாடா பொம்மைகள். ஃபுமி என்ற அழகிய ஜப்பானிய பெண் பொம்மைகளும் சாமுராய் வீரர் பொம்மைகளும் ஹகடா பொம்மைகளாக உலகம் முழுவதும் வலம்வருகின்றன.

Doll-1

அரண்மனைகள், செல்வந்தர்களின் வீடுகளை அலங்கரிக்கும் ஆபரணங்களாகவும் ஹகடா பொம்மைகள் உள்ளன.

ஹகடா பொம்மைகளைச் செய்வதற்கு நுட்பமான கைத்திறனும் பொறுமையும் தேவைப்படும். ஹகடா பொம்மைகளை உருவாக்குவதற்கான அடிப்படைத் திறன்களில் தேர்ச்சி பெறுவதற்கே ஓரிரண்டு ஆண்டுகள் ஆகும். அதனால் இளைஞர்கள் தற்போது ஹகடாவைச் செய்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனாலும் ஜப்பானிலும் உலக அளவிலும் ஹகடா பொம்மைகளுக்கு வரவேற்பும் மதிப்பும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

ஹகடா பொம்மைக் கலைஞரையும் ஹகடா பொம்மைகளையும் கவுரவிக்கும் மாதம் ஜூலை. புகுவோகா நகரத்தில் ஜப்பானின் மிகப் பெரிய திருவிழாவாக ஹகடா ஜியான் யமாகசா நடைபெறுகிறது. ஜூலை முதல் தேதி, கஜாரியமகாசா என்றழைக்கப்படும் சப்பரங்களில் ஒவ்வொரு தெருவிலும் ஹகடா பொம்மைகள் கொலுபோல் அடுக்கி வைக்கப்படும்.

தொடர்புக்கு: sankararamasubramanian.p@thehindutamil.co.in

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in