கதை: சோனுவைப் பாராட்டிய யானைகள்

கதை: சோனுவைப் பாராட்டிய யானைகள்

Published on

குறிஞ்சிக் காட்டிலிருந்த குகை ஒன்றில் தாய்க் கரடி ஒன்று சீனு, மோனு, சோனு ஆகிய தன் மூன்று குட்டிகளுடன் வசித்துவந்தது.

தாய்க் கரடி பிறருக்கு நன்மை செய்யும் மனம் கொண்டது. “பிள்ளைகளே, தினமும் நீங்கள் மற்றவர்களுக்கு ஏதேனும் ஒரு நன்மை செய்ய வேண்டும்” என்று அறிவுறுத்தியது. குட்டிக் கரடிகளும் அதற்குச் சம்மதித்தன.

தினமும் சீனு, மோனு, சோனு ஆகிய மூன்றும் வெளியே சென்று வந்ததும் தாய்க் கரடி, “இன்று என்ன நன்மை செய்தீர்கள்?” என்று கேட்கும். குட்டிக் கரடிகளும் தாங்கள் செய்த நன்மைகளைச் சொல்லும்.

அன்றும் தாய்க் கரடி, குட்டிகளின் வருகைக்காகக் காத்திருந்தது. அந்தி சாயும் பொழுதில் மூன்று குட்டிகளும் குகைக்கு வந்து சேர்ந்தன.

தாய்க் கரடி, “பிள்ளைகளே, இன்று நீங்கள் மற்றவர்களுக்கு என்ன நன்மை செய்தீர்கள் என்று சொல்லுங்கள். பிறகு நாம் உண்ணலாம்” என்றது.

“அம்மா, இன்று ஒரு மரத்தின் மீதிருந்த கூட்டிலிருந்து குருவிக் குஞ்சு ஒன்று கீழே விழுந்துவிட்டது. நல்லவேளை... அதற்குக் காயம் ஏதும் படவில்லை. கீழே விழுந்த குஞ்சைத் தூக்கிச் செல்லத் தாய்க் குருவியால் இயலவில்லை. அதனால் நான் அந்தக் குருவிக் குஞ்சை எடுத்து, கூட்டில் வைத்தேன்” என்றது சீனு.

“ஆஹா, உண்மையிலேயே சிறந்த நன்மை செய்திருக்கிறாய் சீனு” என்று பாராட்டியது தாய்க் கரடி. அதைக் கேட்டு மற்ற இரண்டு குட்டிக் கரடிகளும் கைதட்டின.

“மோனு, நீ என்ன நன்மை செய்தாய்?” என்று கேட்டது தாய்க் கரடி.

“அம்மா, நான் வரும் வழியில் மான் ஒன்று பசியோடு நின்றிருந்தது. ஒரு மரத்திலிருந்து இலைதழைகளைப் பறித்து அதற்கு உண்ணக் கொடுத்தேன். மான் எனக்கு நன்றி சொன்னது” என்றது மோனு.

“சபாஷ்! ஓர் உயிரின் பசியைத் தீர்த்திருக்கிறாய்” என்று தாய்க் கரடி சொன்னதும், மற்ற இரண்டு கரடிக் குட்டிகளும் கைதட்டின.

அடுத்து தாய்க் கரடி கடைக்குட்டியிடம், “சோனு, நீ ஏன் பேசாமல் இருக்கிறாய்? இன்று நீ என்ன நன்மை செய்தாய்?” என்று கேட்டது.

“அம்மா, நான் உணவு தேடிவிட்டுத் திரும்பி வந்து கொண்டிருந்தேன். அப்போது வழியில் ஒரு குட்டி யானையைப் பார்த்தேன். அது என்னுடன் சிறிது நேரம் விளையாட விரும்பியது. நானும் அந்தக் குட்டி யானையுடன் விளையாடினேன். சற்று நேரத்தில் அந்தக் குட்டி யானையின் அம்மாவும் வேறு யானைகளும் வந்தார்கள். குட்டி யானை அவர்களோடு போய்விட்டது” என்றது சோனு.

அதைக் கேட்ட சீனுவும் மோனுவும் விழுந்து விழுந்து சிரித்தன.

“தம்பி, இதுதான் நீ செய்த நன்மையா? கொஞ்ச நேரம் குட்டி யானையோடு பேசி, விளையாடிவிட்டு வந்திருக்கிறாய். ஏதோ பெரிய நன்மை செய்தது போல இதைச் சொல்கிறாயே?” என்று சோனுவைக் கேலி செய்தன.

சோனுவுக்கு வருத்தமாக இருந்தது. அது தன் அம்மாவின் முகத்தைப் பார்த்தது. சோனுவுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று புரியாமல் தாய்க் கரடியும் யோசித்துக் கொண்டிருந்தது.

அப்போது குகைக்கு வெளியே யானை மகிழ்ச்சியாகப் பிளிறும் சத்தம் கேட்டது.

“சோனு, வெளியே வா. உனக்குப் பரிசு தருவதற்காக நாங்கள் வந்திருக்கிறோம்” என்று யானைகள் அழைத்தன.

‘யானைகள் எதற்காகச் சோனுவுக்குப் பரிசு கொண்டு வந்திருக்கின்றன?’ என்று தாய்க் கரடி மட்டுமல்ல, சீனுவும் மோனுவும்கூட யோசித்தன.

தாய்க் கரடி தன் குட்டிகளுடன் குகைக்கு வெளியே வந்தது. குட்டி யானையும் அதன் தாய் யானையும் நின்றிருந்தன.

தாய் யானை தாய்க் கரடியிடம், “இன்று உங்கள் பிள்ளை சோனு எங்கள் பிள்ளையின் உயிரைக் காப்பாற்றியிருக்கிறான். அதற்காக நன்றி சொல்லிப் போகவே நாங்கள் வந்திருக்கிறோம். கூடவே சோனுவுக்காகப் பரிசும் கொண்டு வந்திருக்கிறோம்” என்று சொன்னது.

“சோனு உங்கள் பிள்ளையின் உயிரைக் காப்பாற்றினானா? என்ன சொல்கிறீர்கள்?” என்று வியப்பாகக் கேட்டது தாய்க் கரடி.

“இன்று மாலை நாங்கள் எல்லாரும் தண்ணீர் குடிப்பதற்காக ஏரிக்குச் சென்றோம். அந்த நேரத்தில் எங்கள் செல்லக் குட்டி கூட்டத்திலிருந்து பிரிந்துவிட்டான். எங்களைத் தேடி அலைந்து, வழிதவறிச் சென்று விட்டான். தனியே இருக்கப் பயந்துகொண்டிருந்த அவன், உங்கள் சோனுவைப் பார்த்திருக்கிறான். தன்னுடன் கொஞ்ச நேரம் விளையாடும்படி சொல்லியிருக்கிறான். சோனுவும் அதற்குச் சம்மதித்து இருவருமாக விளையாடிக் கொண்டிருந்தார்கள். சற்று நேரத்தில் நாங்கள் அங்கே சென்றுவிட்டோம். சோனு விளையாடச் சம்மதிக்கவில்லை என்றால் எங்கள் செல்லக் குட்டி எங்களைத் தேடிக்கொண்டு பெரிய பள்ளத்துக்கு அருகில் போயிருப்பான். நல்லவேளை... அப்படி எதுவும் நிகழவில்லை” என்று சொன்னது தாய் யானை.

பிறகு பழங்களும் தேனடையும் நிறைந்த கூடை ஒன்றை சோனுவுக்குப் பரிசாகத் தந்துவிட்டு, தாய் யானையும் குட்டி யானையும் விடைபெற்றுச் சென்றன.

தாய்க்கரடி சீனுவிடமும் மோனுவிடமும், “பார்த்தீர்களா! சோனு செய்தது நன்மையா என்று அவனைக் கேலி செய்தீர்கள். ஆனால், அவன் குட்டி யானையைப் பெரும் ஆபத்திலிருந்து காப்பாற்றி இருக்கிறான். நாம் செய்யும் சிறிய நன்மையும் அதைப் பெற்றவர்களுக்குப் பெரிய உதவியாக இருக்கக்கூடும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். கூடவே, குறை சொல்லாமல் இருப்பதும் பெரிய நன்மைதான் என்று தெரிந்து கொள்ளுங்கள்” என்றது.

சீனுவும் மோனுவும் தாய் சொன்னதைப் புரிந்துகொண்டன.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in