

நான் போகும் இடம் எல்லாம் அந்தப் பறவையைக் காண்கிறேன். நான் வீட்டுக்குள் அமர்ந்திருந்தால் என் ஜன்னலுக்கு அருகில் வந்து உட்கார்ந்து கொள்ளும். அப்படியும் இப்படியுமாக அசையும் அலகைக் கொண்டு ஜன்னல் கம்பியை வருடும். கீழே எதையோ போட்டுக் கொத்தும்.
பிறகு தலையை உயர்த்தித் தனது கோலிக்குண்டு கண்களால் என்னை உற்றுப் பார்க்கும். ‘எமிலி, எல்லாம் சரியாக இருக்கிறதா? ஒழுங்காக இருக்கிறாயா, என்று விசாரிப்பதுபோல் இருக்கும் அந்தப் பார்வை. நிமிடத்துக்கு நிமிடம் அது என்னைப் பார்த்துக்கொண்டே இருக்கும்.
நான் வேறு அறைக்குப் போனால் அதுவும் நகர்ந்து, நகர்ந்து அங்கே வரும். அங்குள்ள ஜன்னலில் அமரும். அங்கிருந்து என்னைப் பார்க்கும். எமிலி, நான் இங்கேதான் இருக்கிறேன். கவலைப்படாதே!
பள்ளிக்குப் போவேன். நூலகத்தில் அமர்ந்து படிப்பேன். கடைக்குப் போவேன். தோழியோடு பேசுவேன். உறங்குவேன். காய்ச்சல் வந்து படுத்துக் கிடப்பேன். அதைச் செய்யாதே, இதைச் செய்யாதே, அங்கே போகாதே, இங்கே உட்காராதே என்று எந்நேரமும் விரட்டிக்கொண்டிருக்கும் அப்பாவை நினைத்து அஞ்சுவேன்.
நீ ஏன் மெலிந்திருக்கிறாய்? நீ ஏன் தலைமுடியை இப்படி வைத்திருக்கிறாய்? நீ ஏன் இன்னும் கொஞ்சம் அழகான ஆடை அணிந்துகொள்ளக் கூடாது? நீ ஏன் வாரா வாரம் தேவாலயம் வருவதில்லை? கடவுளை நம்புகிறாய்தானே? எல்லாரையும்போல் ஏன் அதிக நண்பர்கள் உனக்கு இல்லை? ஏன் எப்போதும் வீட்டில் அடைந்து கிடக்கிறாய்? இப்படி நூறு கேள்விகளால் என்னைத் துளைக்கும் மனிதர்களிடம் இருந்து ஓடி ஒளிந்துகொள்வேன். ஒருவருக்கும் தெரியாமல் மெழுகுவத்தி ஒளியில் கவிதை எழுதுவேன்.
அப்போதெல்லாம் பறவையை என் கண்கள் தேடாது. அதைப் பற்றி என் மனம் சிந்திக்காது. அவ்வளவு ஏன்... அப்படி ஒரு பறவை இருக்கிறது என்பதையே நான் மறந்து விடுவேன்.
ஆனாலும் எனக்கு உறுதியாகத் தெரியும். பறவை என்னை மறக்காது. கதவோ ஜன்னலோ காற்றோ ஒளியோ இல்லாத இடத்தில் அடைந்து கிடந்தாலும் அது எங்கிருந்தாவது, எப்படியாவது என்னைக் கவனித்துக்கொண்டுதான் இருக்கும்.
எமிலியின் முகம் ஏன் இப்படி வாடியிருக்கிறது? அவள் ஏன் சோர்ந்து படுத்திருக்கிறாள்? அவள் ஏன் அழுகிறாள்? அவள் ஏன் கோபத் தோடு இருக்கிறாள்? அவள் வலியை, வருத்தத்தை எப்படிப் போக்குவது? வாடிக்கிடக்கும் அவள் முகத்தில் எப்படிப் புன்னகையைக் கொண்டுவந்து ஒட்டுவது?
நான் வெளியில் இறங்கி நடக்க ஆரம்பித்தால் என் தலைக்கு மேலே மிதந்து, மிதந்து வரும். நான் மகிழ்ச்சியோடு குதித்தால் அதுவும் விருட்டென்று பறந்து காற்றில் துள்ளும். அதன் சிறகுகள் வெள்ளை மேகம்போல் மெலிதாக இருக்கும். எனக்கு என்னவோ, தேவைப்பட்டால் ஒரு மலையைக்கூட அந்தச் சிறகுகளால் சுமந்து செல்ல முடியும் என்றே தோன்றுகிறது.
ஒரு பறவையால் எப்படி ஒரே நேரத்தில் மென்மையாகவும் உறுதியாகவும் இருக்க முடிகிறது என்பதை என்னால் கண்டறிய முடியவில்லை. மழை, வெயில், பனி, புயல் எதற்கும் அது அஞ்சுவதில்லை. அது எப்படிச் சாப்பிடும், என்ன சாப்பிடும், எப்படித் தண்ணீர் குடிக்கும், எப்போது தூங்கும், எப்போது விழிக்கும் என எதுவும் எனக்குத் தெரியாது.
ஒருநாளும் அது சோர்ந்து பார்த்ததில்லை. ஒருநாளும் கோபம் கொண்டு பார்த்ததில்லை. ஒருநாளும் அழுததில்லை அது. நம்மைப்போல் பறவைக்குக் கோபமோ சோர்வோ அழுகையோ வருவதில்லை போல.
குதித்து, குதித்து என்னிடம் பலமுறை வந்திருக்கிறது. ஏதோ பேசுவதுபோல் வாயைத் திறந்து மூடியிருக்கிறது. என் விரல்கள்மீது, தொடைமீது, தோள்மீது, (நான் உற்சாகத்தோடு இருக்கும்போது தலைமீதும்) அமர்ந்திருக்கிறது. ஆ, அதன் பாடலை எப்படி இதுவரை சொல்லாமல் விட்டேன்? அப்படி ஒரு குரலை அதற்கு முன்பு எங்கும் கேட்டதில்லை நான்.
இசை மட்டும்தான், சொற்கள் அதனிடம் இல்லை. இருந்தாலும் அது பாடும் ஒவ்வொரு முறையும் அது பாடுவது எனக்குப் புரிவதுபோல் இருக்கும். ஒரே பாடலை எப்போதும் அது பாடிக்கொண்டிருப்பதில்லை.
நான் சோகமாக இருக்கும்போது அது பாடும் பாடல் வேறு, நான் குதூகலத்தோடு இருக்கும்போது அது பாடும் பாடல் வேறொன்று. எமிலியின் சோகத்தைக் குறைக்க வேண்டும், எமிலியின் மகிழ்ச்சியை அதிகப்படுத்த வேண்டும் என்று எப்படிப் பறவைக்குத் தெரிந்தது?
ஏன் இப்படித் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே நடக்கிறாய் என்று ஒரு நாள் அப்பா சிடுசிடுத்தபோது, “பறவை என் பின்னால் வருகிறதா என்று பார்த்தேன்” என்றேன். “என்ன பறவை?” “அதோ, அது” என்றேன். “எது?” என்றார். அன்றுதான் உணர்ந்தேன்.
அப்பாவால் அந்தப் பறவையைப் பார்க்க முடியவில்லை. அல்லது அவர் கண்களுக்குப் பறவை தெரியவில்லை. அல்லது அப்பாவின் கண்களுக்குப் படாமல் என்னை மட்டும் பின்தொடர வேண்டும் என்று அந்தப் புத்திசாலிப் பறவைக்குத் தெரிந்திருக்கிறது. என் நண்பர்கள் சிலரிடம்கூட விசாரித்துப் பார்த்துவிட்டேன்.
“என் அலமாரியின்மீது அமர்ந்திருக்கும் பறவையை உன்னால் காண முடிகிறதா?” “என்ன உளறுகிறாய்? வீட்டுக்குள் எப்படிப் பறவை வரும்?” என்று சிரித்தார்கள் அவர்கள். ஆக, அவர்களாலும் காண முடியவில்லை.
அப்படியானால் அது எனக்கே எனக்கான பறவையா? அப்படி ஒரு பறவை இருக்க முடியுமா? சரி, கேட்டுத்தான் பார்ப்போமே என்று ஒருநாள் கேட்டேன். அப்போது பறவை என் மடிமீது அமர்ந்திருந்தது. நீ யார்? உன் பெயர் என்ன? ஏன் என் கண்களுக்கு மட்டும் தெரிகிறாய்? தனது சிறிய அலகைத் திறந்து அது பாடத் தொடங்கியது. நான் அதுவரை கேட்டிராத புதிய பாடல். சொற்கள் இல்லாத, அதே நேரம் என்னால் மட்டும் புரிந்துகொள்ள முடிந்த பாடல்.
‘எமிலி, நான் உன் பறவை. உனக்காகவே பறக்கிறேன் நான். உன்னைக் காப்பதற்காகவே வளர்ந்திருக்கின்றன என் சிறகுகள். என் பாடலுக்குத் தேவையான சொற்கள் உன்னிடம்தான் இருக்கின்றன. உன் சொற்களுக்குத் தேவையான இசையை நான் மட்டுமே வழங்க முடியும். என் கண்களுக்கு நீ மட்டுமே தெரிகிறாய். உன் கண்களுக்கு நான் மட்டும். எனக்குப் பெயர் இல்லை. உனக்குப் பிடித்திருந்தால் ‘நம்பிக்கை’ என்று நீ என்னை அழைக்கலாம்.’
காயம்பட்ட மான் வேகமாக ஓடும். கடினமான காலம் நம்மை வலிமையாக்கும்.
- எமிலி டிக்கின்சன், புகழ்பெற்ற அமெரிக்கக் கவிஞர்.
| காயம்பட்ட மான் வேகமாக ஓடும். கடினமான காலம் நம்மை வலிமையாக்கும். - எமிலி டிக்கின்சன், புகழ்பெற்ற அமெரிக்கக் கவிஞர். |