

நாம் உயிர் வாழத் தேவையான சுவாசத்துக்கும் காற்றில் மிதந்து வரும் வாசனையை முகர்வதற்கும் மூக்குப் பயன்படுகிறது. விழிகளில் கண்ணீர் நிரம்பியதும், மூக்கின் வழியாகவும் வெளியேறும். நீண்ட நேரம் அழும்போது மூக்கின் வழியாக வெளியேறுவது சளி அல்ல, கண்ணீர்.
பேச்சுக்கும் மூக்குக்கும் தொடர்பிருக்கிறது. நாம் பேசும் ஒலிக்குச் சரியான வடிவம் கொடுக்க, தொண்டையின் குரல்வளை மட்டும் போதாது. மூக்கும் அதைச் சார்ந்த சைனஸ் அறைகளின் பங்களிப்பும் காரணம்.
மூக்கில் வெளிப் பக்கமாக நீட்டிக்கொண்டிருக்கும் முக்கோணக் கூம்பு ‘புறநாசி’ (External Nose). இதில் இரண்டு ‘புறநாசித் துவாரங்கள்’ (External Nostrils) உள்ளன. புறநாசியின் கீழ்ப் பகுதி குருத்தெலும்புகளால் ஆனது. ஆகவேதான் புறநாசியை விரல்களால் அசைக்கவும் இழுக்கவும் முடிகிறது. எலும்புகளால் ஆன மேல் பாகம் ‘நாசி முதுகு’ (Dorsum Nasi). நாம் சுவாசிக்கும் காற்று புறநாசி வழியாகத்தான் நுரையீரலுக்குள் சென்று வருகிறது. இந்த வகையில் மூக்கு ஒரு சுவாச உறுப்பாகச் செயல்படுகிறது.
நாசித் துவாரத்துக்குள் நுழைந்தால், அங்கு காணப்படுவது ‘உள் முன்நாசி’ (Nasal Vestibule). இங்கு சிறிய முடிகள் அசைந்து கொண்டிருக்கின்றன. நாம் உள்ளிழுக்கும் காற்றில் உள்ள கண்ணுக்குத் தெரியாத கிருமி, தூசு, துகள், துரும்புகளை வடிகட்டிச் சுத்தப்படுத்தி நுரையீரலுக்கு அனுப்புவது இவற்றின் வேலை. இவ்வாறு தினமும் 500 கன அடிக் காற்றை இவை சுத்தம் செய்து அனுப்புகின்றன.
இங்கு சங்கு போன்ற அமைப்பில் மூன்று ‘தடுப்பெலும்புகள்’ (Turbinates) உள்ளன. இவற்றை ‘மியூக்கஸ் மெம்பிரேன்’ எனும் மென்மையான சவ்வுப் படலம் மூடியுள்ளது. இது நிறமற்ற ஒரு திரவத்தைச் சுரந்தபடி உள்ளது. தினமும் ஒரு லிட்டர் திரவம் இவ்வாறு சுரக்கிறது. இது ஏறத்தாழ ஏர்கண்டிஷனர் மாதிரி செயல்படுகிறது. நாம் சுவாசிக்கும் காற்றைக் குளிர்வித்து, உடலுக்கு இதமான வெப்பநிலைக்கு மாற்றி அனுப்புகிறது. வெளிக்காற்றின் வெப்பநிலை மிக அதிக அளவில் இருந்து, அது அப்படியே உள்ளே போனால், நுரையீரல்கள் பாதிக்கப்படும்.
வைரஸ் கிருமிகள் மூக்கினுள் நுழைந்தால் அவற்றை வெளியே தள்ள இந்தத் திரவம் அதிகமாகச் சுரக்கும். அப்போது மூக்கிலிருந்து நீர் கொட்டும். அதுதான் ஜலதோஷம். பெரிய தூசியோ துகளோ உள்ளே நுழைந்தால், வேகமான வெளி சுவாசத்தைத் துணைக்கு அழைத்துக்கொண்டு, அவற்றை வெளியில் தள்ளும். அதுதான் தும்மல்.
மூக்கின் உள்பகுதி கூரையில் வாசனையை முகரும் பகுதி உள்ளது. 2.5 செ.மீ. சதுர அளவே உள்ள இந்தச் சிறுபகுதிதான் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வாசனைகளை உணரவைக்கிறது. பாலூட்டிகளில் முகரும் சக்தி மிக அதிகமாகக் கொண்டது, கரடி; நம்மைவிட 2,100 மடங்கு அதிகம். சுறா, அந்துப்பூச்சி, நாய், பாம்பு, எலிக்கும் முகரும் சக்தி அதிகம். நாய்க்கு முகரும் சக்தி நம்மைவிட 100 மடங்கு அதிகம். அதனால்தான் வேட்டைக்கும் திருடர்களைக் கண்டுபிடிக்கவும் நாயைப் பயன்படுத்துகிறோம்.
சாதாரணமாக, விலங்குகள் தங்கள் உணவைத் தேடுவதற்கும், எதிராளிகளின் நடமாட்டத்தைத் தெரிந்துகொள்வதற்கும் முகரும் சக்தியைப் பயன்படுத்திக்கொள்கின்றன. பெரும்பாலான பறவைகளுக்கு முகரும் சக்தி அவ்வளவாக இல்லை. ஆனால், கழுகு, கிவி, கிளி சில கடற்பறவைகளுக்கு முகரும் சக்தி அதிகம்.
புறநாசித் துவாரத்தில் விரல் விட்டால், ஒரு குகை மாதிரி உள்ளே போகிறதல்லவா? அந்தப் பகுதி ‘மூக்குப் பெட்டி’ (Nasal box). இது முன் பக்கம் புறநாசித் துவாரங்களில் திறக்கிற மாதிரி, பின்பக்கம் தொண்டைக்குள்ளும் இரு துவாரங்கள் வழியாகத் திறக்கிறது. அதுதான் சுவாசப் பாதை. மூக்குப் பெட்டகத்தின் முழு நீளத்துக்கும் நடுவில் ‘மூக்கு இடைச் சுவர்’ (Nasal septum) உள்ளது. இது மூக்குப் பெட்டகத்தை வலது, இடது என்று இரண்டு பகுதிகளாகப் பிரிக்கிறது. இந்தச் சுவரின் கீழ்ப் பகுதியில் வலது, இடது இரண்டு புறங்களிலும் விரல் நுழைகிற இடத்தில் ‘லிட்டில் பகுதி’ (Little's area) உள்ளது. இது மிகவும் நுண்ணிய ரத்தக் குழாய்கள் வந்து சேரும் இடம். இதை லேசாகச் சீண்டினாலே ரத்தம் கசிந்துவிடும்; ‘சில்லு மூக்கு’ (Epistaxis) என்று இதைச் சொல்வதுண்டு.
மூக்குக்கு இரண்டு பக்கமும் நான்கு ஜோடி சைனஸ் இருக்கின்றன. இவை மூக்கைச் சுற்றி சில எலும்புகளில் இருக்கும் காற்றடைத்த குழிகள். முன் நெற்றியில் எலும்புக்குப் பின்னால் ‘ஃபிரான்டல் சைனஸ்’ (Frontal sinus) உள்ளது. சற்றுக் கீழே மூக்குக்கும் கண்ணுக்கும் இடைப்பட்ட இடத்தில் இருப்பது, ‘எத்மாய்டு சைனஸ்’ (Ethmoid sinus). மூக்குக்குப் பின்புறம் மூளையை ஒட்டி உள்ளது, ‘ஸ்பீனாய்டு சைனஸ்’ (Sphenoid sinus). கன்னத்தில் இரு பக்கமும் பிரதானமாக இருப்பது, ‘மேக்ஸிலரி சைனஸ்’ (Maxillary sinus). இவை எல்லாமே சிறு துளைகள் வழியாக மூக்குப் பெட்டியுடன் தொடர்பில் உள்ளன.
சைனஸின் வேலை என்ன?
முகத்திலுள்ள எலும்புகளின் எடையைக் குறைப்பது இவற்றின் முக்கியமான வேலை. முகம் முழுவதும் எலும்புகளாகவே இருந்தால் மிகவும் கனமாக இருக்குமல்லவா? அந்தக் கனத்தைக் குறைப்பதில் சைனஸ்கள் உதவுகின்றன. எலும்புக் குழிகளுக்குள் காற்று புகுந்துகொள்வதால், அவற்றின் எடை குறைந்துவிடுகிறது.
கண்களுக்கும் மூளையின் அடிப் பகுதிக்கும் காற்றடைத்த மெத்தை மாதிரி இருந்து உதவுவது இவற்றின் அடுத்த வேலை. இவை தொண்டையோடும் தொடர்பு கொண்டுள்ளதால், நாம் எழுப்பும் குரலுக்குச் சரியான ஒலி வடிவம் தருகின்றன; குரலுக்கு வலு சேர்க்கின்றன. மிகவும் குளிர்ச்சியான காற்று மூக்கில் நுழைந்தால் அதை வெப்பப்படுத்தி, உள்ளே அனுப்புவதும் இவைதான்.
(இன்னும் அறிவோம்)
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்
தொடர்புக்கு: gganesan95@gmail.com