

கொஞ்சிக் கொஞ்சிப் பேசும் பச்சைக் கிளி உங்களுக்குப் பிடிக்கும் அல்லவா? அதைப் போன்ற ஒரு கிளியை வீட்டிலேயே உருவாக்கலாம். முயற்சித்துப் பார்க்கிறீர்களா?
தேவையான பொருள்கள்:
பச்சை மற்றும் சிவப்புக் களி மண், பச்சை நிற சார்ட் பேப்பர், கறுப்பு நிற ஸ்கெட்ச் பேனா, கத்தரிக்கோல், குண்டூசி, பசை.
செய்முறை:
1 கொஞ்சம் பச்சை நிறக் களிமண்ணை எடுத்துக்கொண்டு அதை உருண்டையாகப் உருட்டிக்கொள்ளுங்கள்.
2 படத்தில் காட்டியது போல கிளியின் அலகுப் பகுதியைச் சிவப்பு நிறக் களிமண்ணைக் கொண்டு உருவாக்குங்கள். தலை மற்றும் உடம்புப் பகுதியைப் பச்சைக் களிமண்ணைக் கொண்டு செய்துகொள்ளுங்கள்.
3 கிளியின் இறக்கைக்கும் வாலுக்கும் தேவையான பாகத்தை பச்சை நிற சார்ட் பேப்பரில் படத்தில் காட்டியுள்ளது போல் வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.
4 இப்போது கிளியின் உடம்பு, தலை, அலகு, வால் ஆகிய பகுதிகளை ஒன்றாக இணைத்துக் கொள்ளுங்கள்.
5 குண்டூசியின் உதவியால் இறக்கைகளைக் கிளியின் உடம்புடன் இணைத்துக்கொள்ளுங்கள். குண்டூசியின் தலைப்பகுதி கிளியின் உடம்புபகுதியில் செங்குத்தாகப் பொருந்தியிருக்க வேண்டும். கிளியின் கழுத்துப் பகுதியையும் கண்களையும் கறுப்பு ஸ்கெட்ச் பேனாவால் வரைந்துகொள்ளுங்கள்.
இப்போது உங்கள் கண்ணெதிரே கண்சிமிட்டும் பச்சைக் கிளி தயாராகியிருக்குமே? நூலைக் குண்டூசியின் தலைப்பகுதியில் கட்டி கிளியைத் தொங்கவிட்டு அழகு பாருங்கள்.