தேன் மிட்டாய் 04: ஒவ்வொரு பெண்ணுக்கும் ஓர் அறை

தேன் மிட்டாய் 04: ஒவ்வொரு பெண்ணுக்கும் ஓர் அறை
Updated on
2 min read

ஆனால் அது எப்படிச் சாத்தியம்? விளையாடுகிறாயா வர்ஜீனியா உல்ஃப்? ஒவ்வொரு வீட்டிலும் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு தனி அறை ஒதுக்கிக் கொடுப்பது சாத்தியம் என்றா நினைக்கிறாய்? இந்த உலகில் எவ்வளவு பெண்கள் வாழ்கிறார்களோ அவ்வளவு அறைகள் வேண்டும் என்பாயா? ஏன்? அவர்களுக்குதான் வீடுகள் இருக்கின்றனவே, போதாதா? தனி அறையை வைத்துக்கொண்டு அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள்? சொல்லு வர்ஜீனியா.

சொல்கிறேன். அதற்கு முன்பு, இவ்வளவு கேள்விகளை எழுப்பிய உங்களுக்கு ஒரே ஒரு சின்ன கேள்வி. உங்களுக்கு ஜுடித் ஷேக்ஸ்பியர் தெரியுமா? அவரைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? அவர் என்ன எழுதியிருக்கிறார், எவ்வளவு எழுதி இருக்கிறார் என்று தெரியுமா?

ஆனால், அவர் அண்ணனை உங்களுக்கு நன்றாகத் தெரியும். அவர் எவ்வளவு நாடகங்கள் எழுதி இருக்கிறார், அவை என்னென்ன, மொத்தம் எவ்வளவு கவிதைகள் என எல்லாமே உங்களுக்குத் தெரியும். உறக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் அவர் சொற்களைக் கடகடவென்று ஒப்பிக்கும் பலரை நான் பார்த்திருக்கிறேன்.

ஆனால், அதே வீட்டில் வாழ்ந்து, வளர்ந்த அவர் தங்கை ஜுடித்தைத் தெரிந்தவர்கள் இந்த உலகில் ஒரே ஒருவர்கூட இருக்க வாய்ப்பில்லை என்று உறுதியாக என்னால் சொல்ல முடியும். ஏன் இப்படி நடக்க வேண்டும் என்று உங்களில் யாராவது யோசித்திருப்பீர்களா? மாட்டீர்கள். நானே சொல்லிவிடுகிறேன்.

ஷேக்ஸ்பியரின் வீட்டில் அவருக்கு என்று ஓர் அறை இருந்தது. அதில் அவருக்குப் பிடித்தமான நூல்கள் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். அவருக்கு என்று ஒரு பெரிய மேஜை இருந்தது. அதில் அப்போதைக்குத் தேவைப்படும் சில நூல்களை எடுத்து வந்து ஓரத்தில் வைத்திருப்பார்.

மேஜைக்கு எதிரில் மெத்தென்று ஒரு நாற்காலி இருக்கும். அதில்தான் அமர்வார். யோசிப்பார். எழுதுவார், சில நேரம் தலைகவிழ்ந்து சிறு தூக்கமும் போடுவார். மேஜையின் நடுவில் கத்தைக் கத்தையாக வெள்ளைக் காகிதங்கள் காத்திருக்கும். ஒரு மைக்கூடும் தொட்டு எழுத இறகுகளும் இருக்கும். இரவு, பகல் எல்லாம் பார்க்க மாட்டார். எப்போது வேண்டுமானாலும் எவ்வளவு மணி நேரம் வேண்டுமானாலும் எழுதிக்கொண்டே இருப்பார்.

எழுதி, எழுதி சலிப்படைந்தால் எழுந்து வீட்டைவிட்டு வெளியில் வருவார். நண்பர்களைச் சந்திப்பார். அவர்களோடு சேர்ந்து தேநீர் அருந்துவார். மகிழ்ச்சியாக அரட்டை அடிப்பார். காலாரச் சிறிது தூரம் நடந்து காற்று வாங்கிவிட்டு, தன் அறைக்குத் திரும்புவார். உற்சாகத்தோடு மீண்டும் எழுதத் தொடங்கினால் கடகடவென்று சொற்கள் கொட்டத் தொடங்கும். எந்தத் தடையும் இருக்காது.

எழுதும்போது யாராவது வீட்டு மணியை அடித்தால் ஷேக்ஸ்பியர் பதற மாட்டார். அவ்வளவு ஏன், அந்த மணிச் சத்தம்கூட அவர் காதில் கேட்காது. அவர் அறைக் கதவுகள் உறுதியானவை. வெளி உலகின் எந்த ஓசையும் அவர் உலகுக்குள் அவர் அனுமதியின்றி நுழையாது. யாரும் அவரைத் தொந்தரவு செய்ய மாட்டார்கள். ஷேக்ஸ்பியரின் உலகம் அமைதியானது. அழகானது. மென்மையானது. அதனால், அவரால் பலவற்றைக் கற்பனை செய்ய முடிந்தது. பல கதைகளை உருவாக்க முடிந்தது.

ஆனால் பாருங்கள், ஜுடித்துக்கு இந்த வசதிகள் எதுவுமே கிடையாது. குழந்தைகள் ஓயாமல் அவர் கால்களைப் பிடித்துச் சுற்றிக்கொண்டே இருக்கும். அது வேண்டும், இது வேண்டும் என்று அழைத்துக்கொண்டே இருக்கும்.

அழைப்பு மணியை யாராவது அழுத்தினால் முதல் ஆளாக அவர்தான் பதறுவார். வாருங்கள், உட்காருங்கள், என்ன சாப்பிடுகிறீர்கள் என்று உபசரிப்பார். கோப்பைக் கோப்பையாகத் தேநீர் தயாரித்துக்கொண்டே இருப்பார். தட்டுத் தட்டாக உணவு தயாரித்துக் கொண்டுவந்து கொடுத்துக்கொண்டே இருப்பார்.

வீடு, குழந்தைகள், துணிமணி, பாத்திரம், உணவு, விருந்தினர்கள், மேலும் தேநீர், மேலும் உணவு, திரும்பவும் வீடு, திரும்பவும் குழந்தைகள் என்று இருபத்து நான்கு மணி நேரமும் செக்குமாடுபோல் சுற்றிச் சுற்றி வருவார்.

இரவு எல்லாரும் வந்து சேர்ந்த பிறகு, எல்லா ஓசைகளும் அடங்கிய பிறகு, பொத்தென்று ஒரு மூட்டைபோல் படுக்கையில் சரிவார். காலை அவர் எழுந்திருப்பதற்குள் அவருக்கான வேலைகள் மூலைக்கு மூலை எழுந்து நின்று காத்துக்கொண்டிருக்கும்.

ஜுடித்துக்கு என்று அந்த வீட்டில் தனியே மேஜை கிடையாது. நாற்காலி கிடையாது. ஆசைப்பட்ட புத்தகங்களை அவர் வாங்கிச் சேர்த்து வைக்க முடியாது. பொழுதுபோக்கு கிடையாது. நண்பர்கள் கிடையாது. அண்ணனைப் போல் நினைத்த நேரத்தில் வீட்டைவிட்டுப் புறப்பட்டு காலார நடைபோட முடியாது.

அவர் சம்பாதிப்பதில்லை. அவரிடம் பணம் இல்லை. அவரால் படிக்க முடியாது. எழுதவும் முடியாது. எனவே, அவர் படிக்கவில்லை, எழுதவில்லை. வீட்டில் உள்ள பிற பெண்கள்போல் அவர் ஒரு ‘நல்ல பெண்ணாக’ மட்டும் இருந்துவிட்டார்.

ஜுடித்தைப் பற்றி ஏன் யாருமே கேள்விப்படவில்லை என்றால், அப்படி ஒரு பெண் உண்மையில் இல்லவே இல்லை. ஷேக்ஸ்பியர்போல் ஒரு பெண் வரலாற்றில் உருவாகவே இல்லை. ஏன் தெரியுமா? ஷேக்ஸ்பியருக்கு இருந்ததுபோல் அந்தப் பெண்ணுக்குத் தனியே ஓர் அறை இல்லை. உலகின் ஓசைகளில் இருந்து, அழைப்புகளில் இருந்து, தொந்தரவுகளில் இருந்து காப்பாற்ற ஓர் அறை அவருக்கு அமையவில்லை.

ஒரு ஷேக்ஸ்பியரை, ஒரு டிக்கன்ஸை, ஒரு டால்ஸ்டாயை உலகம் உருவாக்கிவிடுகிறது. ஆனால், ஒரு ஜுடித்தை எப்படி உருவாக்குவது என்று உலகுக்கும் அதில் வசிப்பவர்களுக்கும் தெரியவில்லை. அதனால்தான் ஜுடித்தை அவர்களுக்குத் தெரியவில்லை.

அப்படி ஒருவர் ஏன் வரலாற்றில் இல்லை எனும் கேள்வியும் அவர்களுக்குத் தோன்றுவதே இல்லை. எனக்கு ஜுடித் முக்கியம். எனவே, அவரை நான் உருவாக்கினேன். ஒவ்வொரு பெண்ணுக்கும் ஓர் அறையைக் கொடுத்துப் பாருங்கள். ஜுடித்துகள் புதிது புதிதாக மலர்ந்துகொண்டே இருப்பார்கள்!

(இனிக்கும்)

- marudhan@gmail.com

என் சுதந்திர மனதைக் கட்டுப்படுத்தும் கதவோ பூட்டோ இந்த உலகில் ஒருவரிடமும் இல்லை. - வர்ஜீனியா உல்ஃப்
Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in