

உலகின் ஏற்றத்தாழ்வுகளைப் புரிந்துகொள்ளத் தொடங்கும் இளைஞர்களை வசீகரிக்கும் முதல் பெயர்களில் ஒன்று சேகுவேரா. சேகுவேராவுக்குப் பள்ளிக் காலத்திலேயே வாசிப்பு ஆர்வம் மிகுந்திருந்தது. வளர்ந்தவுடன் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்தார்.
அப்போது தனது நண்பர் அல்பர்ட்டோவுடன் தென்னமெரிக்கக் கண்டத்தில் 14,000 கி.மீ. பயணம் சென்றார் சேகுவேரா. ‘மோட்டார் சைக்கிள் டைரீஸ்’ என்கிற பெயரில் அந்த அனுபவங்களை நூலாகவும் எழுதியிருக்கிறார். இந்தப் பயணத்தின்போதுதான் வறுமை, ஏற்றத்தாழ்வு, தொழிலாளர்கள் மோசமாக நடத்தப்படுதல் போன்ற பல்வேறு விஷயங்களை சேகுவேரா அறிந்துகொண்டார்.
அர்ஜென்டினாவில் பிறந்திருந்தாலும் மேற்கண்ட அனுபவங்களின் காரணமாக, கியூபாவின் விடுதலைக்காகப் போரிட்ட இளைஞர் படையில் அவரும் முக்கிய உறுப்பினர் ஆனார். 1959இல் கியூபாவுக்கு விடுதலை கிடைத்த பிறகு, கியூபாவின் தொழில் துறை அமைச்சர் ஆக்கப்பட்டார்.
அதன் பிறகும் அவர் பேசாமல் இருக்கவில்லை. கியூபா மட்டும் விடுதலை பெற்றால் போதுமா எனப் பொலிவியாவின் விடுதலைக்காகப் போராடத் தொடங்கினார். இப்படிக் கடந்த நூற்றாண்டின் மிகப் பெரிய புரட்சிக்காரரின் வரலாற்றைச் சிறாா் அறிந்துகொள்ளும் வகையில் எளிமையாக எழுதியிருக்கிறார் எழுத்தாளர் பாமரன். சிறார் இலக்கியத்துக்கு அவருடைய வரவு வரவேற்கத்தக்க ஒன்று.
எளிய மொழிநடையில், பெரிய எழுத்துகளில் சேகுவேராவின் கதையைச் சுவாரசியமாகச் சொல்கிறது இந்தப் புத்தகம். இந்த நூலை மேலும் சுவாரசியமாக்குகின்றன ஓவியர் சாரதியின் ஓவியங்கள். மேற்கத்திய சித்திரக்கதைப் புத்தகங்களுக்கு இணையான தரத்தில் இடம்பெற்றுள்ள ஓவியங்கள், இந்த நூலுக்குத் தனி அழகைச் சேர்க்கின்றன.
குறும்புக்காரன் குவேரா, பாமரன், நாடற்றோர் பதிப்பகம்,
தொடர்புக்கு: 94435 36779