கதை: தேவதையிடம் என்ன கேட்டான் கார்த்திக்?

கதை: தேவதையிடம் என்ன கேட்டான் கார்த்திக்?
Updated on
2 min read

ஞாயிற்றுக்கிழமை கண் விழித்தவுடன் சின்னுவுக்குப் பூரி வாசனை வந்தது. பல்லைக்கூடத் தேய்க்காமல், “அம்மா, பூரியா?” என்று கேட்டுக் கொண்டு அடுக்களைக்கு வந்தாள் சின்னு.

“முதல்ல பல் தேய்ச்சிட்டு வா. பாரு, கார்த்திக் குளிச்சிட்டு சமத்தா இருக்கான்” என்று சொல்லி, சின்னுவை அங்கிருந்து அனுப்பினார் அம்மா.

குளித்து, பூரியைச் சாப்பிட்டு முடித்த பிறகு,கார்த்திக்கும் சின்னுவும் தோட்டத்திற்குச் சென்றுவிளையாடினார்கள். அந்த மரத்தின் அடியில் ஒரு சின்ன பொந்து தெரிந்தது. சின்னு விளையாடிக் கொண்டிருக்கும்போது அவளது குரங்கு பொம்மை தவறி அந்தப் பொந்துக்குள் விழுந்தது. சின்னு அவள் சின்ன கையை உள்ளே விட்டு பொம்மையை எடுத்தாள்.

அந்தக் குரங்கு பொம்மையின் தலைக்கு மேல் ஒரு பெரிய பட்டாம்பூச்சி இருந்தது. அது அழகான நீலமும் பச்சையும் சேர்ந்த நிறத்தில் ஜொலித்துக் கொண்டிருந்தது.

“அண்ணா, இங்க பாரு. இந்தப் பட்டாம்பூச்சி எவ்வளவு அழகா இருக்குன்னு!” என்று ஆச்சரியமாகக் கத்தினாள் சின்னு.

“இங்க குடு” என்று அந்தப் பட்டாம்பூசியை வாங்கியவன், அதைக் கூர்ந்து பார்த்தான். அது சிறகைப் பெரிதாக விரித்தது.

“சின்னு, இது பட்டாம்பூச்சி மாதிரி தெரியல” என்றான் கார்த்திக்.

அந்தப் பட்டாம்பூச்சி தேவதை கார்த்திக்கையும் சின்னுவையும் பார்த்து, “என்னை விட்டுவிடுங்கள். உங்களுக்கு என்ன வேண்டுமோ அதைக் கொடுக்கிறேன்” என்றது.

“பாவம்... அதை விட்டுடலாம்” என்று சின்னு கார்த்திக்கிடம் கெஞ்சினாள்.

“அதெல்லாம் இல்ல. நான் என்ன கேட்கிறேனோ அதை அந்தத் தேவதை கொடுத்தாதான் விடுவேன்” என்று சொல்லிக்கொண்டு பட்டாம்பூச்சியின் இறகுகளைக் இன்னும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான் கார்த்திக்.

“சரி கேள். ஆனால், மூன்று முறை மட்டும்தான் நீ கேட்பதை என்னால் செய்ய முடியும்” என்றது தேவதை.

சின்னுவுக்குப் பட்டாம்பூச்சியைப் பார்க்கப் பாவமாக இருந்தது. “அதுதான் சரின்னு சொல்லிடுச்சே, அதை விடேன்” என்று பரிதாபப்பட்டாள். “அப்படி எல்லாம் விட முடியாது” என்று சொல்லி முதல் வேலையைத் தேவதைக்குக் கொடுத்தான் கார்த்திக்.

“விதவிதமான ஐஸ்க்ரீம் கொண்டு வா” என்று கார்த்திக் சொன்னதும், அதைச் செய்து முடித்தது தேவதை.

வேக வேகமாகச் சாப்பிட்டு முடித்த கார்த்திக்,“இந்த விமான பொம்மையைப் பெருசாக்குப் பார்ப்போம்” என்றான். தேவதை அந்தப் பொம்மையைச் சுற்றி ஏதோ மாயா ஜாலம் செய்ய, அது கொஞ்சம் பெரிதாக மாறியது.சின்னுவுக்குக் கார்த்திக் செய்யும் எதுவும் பிடிக்கவில்லை. அவள் தேவதையை நினைத்துப் பரிதாபப்பட்டாள்.

மூன்றாவது வேலைக்காகத் தேவதை காத்துக் கொண்டிருக்க கார்த்திக், “இந்தப் பொம்மையில் என்னையும் சின்னுவையும் ஏத்திக்கிட்டுப்பறக்கணும்” என்றான். “நல்லா யோசித்துக் கேள் கார்த்திக். இதற்குப் பின் நீ கேட்கும் எதுவும் என்னால் தர முடியாது. என்ன தேவையோ அதைக் கேள்” என்று பொறுமையாகச் சொன்னது தேவதை.

“நான் சொல்வதை மட்டும் நீ செய். அப்பதான் உன்னை விடுவேன்” என்று சொல்லிவிட்டுச் சிரித்தான் கார்த்திக்.

“வேண்டாம் அண்ணா. எனக்குப் பயமா இருக்கு” என்று சின்னு சொன்னதை அவன் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. சின்னுவை இழுத்துக்கொண்டு விமானத்தில் உட்கார்ந்தான்.விமானம் பறந்து ஒரு பாலைவனத்தில் இறங்கியது. “ஐயோ, இது என்ன இடம்?” என்று கார்த்திக்கும் சின்னுவும் பதற்றமானார்கள்.

அந்த இடத்தைச் சுற்றிச் சுற்றிப் பார்த்தான் கார்த்திக். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை சூடான மணல் மட்டுமே தெரிந்தது. சின்னு ‘ஓ’ என்று அழ ஆரம்பித்தாள். கார்த்திக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.அதே பட்டாம்பூச்சி தேவதை வந்தது.

“ஏய், தேவதையா நீ? இப்பவே எங்களை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போ" என்று கோபத்துடன் கத்தினான் கார்த்திக்.

“இனி நீ சொல்வது எதையும் என்னால் செய்ய முடியாது கார்த்திக். மூன்று விஷயங்களும் நீ உனக்காகவே கேட்டுக் கொண்டாய். சின்னுவிடம் ஒருமுறைகூட என்ன வேண்டும் என்று நீ கேட்கவில்லை. நீ நினைத்ததை மட்டுமே கேட்டதால் இதுதான் சரியான தண்டனை” என்றது தேவதை.

சின்னு அழுதுகொண்டே, “நான் அண்ணனுக்காக மன்னிப்பு கேட்கிறேன். எங்களை வீட்டுக்கு கூட்டிக்கொண்டு போ” என்றாள்.

"நீ அழாதே சின்னு. உன்னை மட்டும் நான் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறேன்” என்றது தேவதை.

"இல்ல... இல்ல... எனக்கு அண்ணனும் வேணும்" என்று அழ ஆரம்பித்தாள் சின்னு.சின்னுவுக்காக தேவதை அவர்களை மீண்டும் தோட்டத்தில் இறக்கி விட்டது.

“என்னை மன்னித்துவிடு தேவதை” என்றான் கார்த்திக்.

“உன்னைக் காப்பாற்றியது நான் அல்ல, சின்னு” என்று சொல்லிவிட்டுப் பறந்தது தேவதை.

- நஸீமா ரஸாக்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in