

வ
னத்தின் அடிவாரத்தைத் தாண்டி வேர்களும் உருட்டுக் கற்களும் நிறைந்த ஒற்றையைடிப் பாதையில் அவர்கள் நடந்து சென்றுகொண்டிருந்தனர்.
முதலில் ஆதிவாசிச் சிறுவன் நீலனும் அவனுக்குப் பின்னால் இரண்டு பேராசிரியர்களும் அடுத்து இருபது மாணவர்களும் கடைசியில் வன அலுவலரும் நடந்துகொண்டிருந்தனர்.
”இது காட்டுப்பன்றி நடமாடும் இடம். அதோ இடக்கைப் பக்கம் தெரியுதே ஒரு பாதை, அது மான் நடமாடும் இடம். இனிமேல் எதுவும் பேசாதீங்க. நான் சொல்வதை மட்டும் கேட்டுக்கோங்க. அந்தப் பாறைகளுக்குப் பின்னால பாருங்க, புலி நடமாடுற இடம்” என்றதும் அனைவரும் அமைதியாகவும் சிறிது பயத்துடனும் நடந்து சென்றனர்.
நகரத்தில் இருக்கும் கல்லூரியில் வன இயல் படிப்பவர்கள் இந்த மாணவர்கள். வனத்தில் ஒருநாள் தங்கி, நேரடியாக அனுபவத்தைப் பெறுவதற்காக வந்திருக்கிறார்கள். மாலை நான்கு மணிவரை நடந்தவர்கள், களைத்து ஒரு பாறையில் அமர்ந்தனர். அருகில் ஓர் ஓடை சலசலத்து ஓடிக்கொண்டிருந்தது.
ஆதிவாசி மக்கள் புட்டு, சுண்டல், பானகம் போன்றவற்றை அனைவருக்கும் வழங்கினார்கள். ருசித்துக்கொண்டே அன்றைய நிகழ்வுகளை விவாதித்தனர். அப்போது ஒரு குரங்குக் கூட்டம் ஓடையில் குதித்து விளையாடிக்கொண்டிருந்தது. அதைக் காட்டினான் நீலன். உடனே மாணவர்களும் ஓடையில் குதித்து, ஆசைத் தீர விளையாடினார்கள்.
பின்னர் ஒரு பெரிய மரத்தின் மீது கட்டப்பட்ட மர வீட்டுக்கு, ஏணி மூலம் ஏறிச் சென்றனர். வன அலுவலர் பேச ஆரம்பித்தார்.
“மாணவர்களே, வனத்தைப் பற்றி அறிந்துகொள்ள வனத்திலேயே வாழும் நீலனைத் தவிர வேறு யாரும் பொருத்தமாக இருக்க முடியாது. நீலன், உன்னுடைய அனுபவங்களை இவர்களுக்குச் சொல்லு” என்று அழைத்தார்.
“நான் அவ்வளவு பெரிய ஆளு இல்லங்க” என்று நீலன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே ஏதோ சத்தம் கேட்டது. அங்கும் இங்கும் பார்த்தான். சற்றுத் தூரத்தில் ஒரு பெரிய பாறை மீது புலி தன் குட்டிகளுடன் விளையாடிக்கொண்டிருந்தது. ஒரு குட்டியை வாயால் கவ்வி வீசியது. இன்னொரு குட்டி மீது பாய்ந்தது. பிறகு பாறைக்குப் பின்னால் ஒளிந்துகொண்டது. குட்டிகள் தாயைத் தேடி ஓடின.
“நீங்க எல்லாம் கொடுத்து வச்சவங்க. இந்த அற்புதமான காட்சி எல்லோருக்கும் பார்க்கக் கிடைக்காது!” என்றான் நீலன்.
“காட்சி அற்புதமாக இருந்தாலும் திக்திக்குனு அடிச்சிக்குது” என்றார்கள் மாணவர்கள்.
“தாய்ப்புலி, தன் குட்டிகளுக்கு எப்படி வேட்டையாடணும், எதிரியைக் கண்டால் எப்படி ஓடி ஒளியணும்னு கத்துக் கொடுக்குது. புலி பலசாலி. மனிதர்களைத் தவிர எதுக்கும் பயப்படாது. புலி வனத்தைக் காப்பாத்துது. அதனால் வனம் செழிக்குது. மான் போன்ற விலங்குகளின் எண்ணிக்கை புலியால் கட்டுப்படுத்தப்படுது. இல்லைன்னா அவை பெருகி வனத்தையே சாப்பிட்டுக் காலி செய்துவிடும்” என்றான் நீலன்.
“நீ சொல்ற தகவல்கள் சுவாரசியமா இருக்கு. மேலே சொல்லு” என்றார்கள் மாணவர்கள்.
”யானை மிகப் பெரிய விலங்கு. பலசாலி. காட்டுக்குள் செடி, கொடிகளை உரசிக்கிட்டுப் போகும். அப்போது பூக்களில் உள்ள மகரந்தம் யானையின் உடலில் ஒட்டிக்கும். யானை அடுத்த செடிக்குப் போகும்போது மகரந்தம் ஒட்டிக்கொண்டு, மகரந்தச் சேர்க்கை நடக்குது. புலி சாப்பிடும் மிச்சத்தைச் சாப்பிட்டு, வனத்தைச் சுத்தம் செய்கின்றன கழுதைப்புலிகளும் கழுகுகளும். பறவைகள் பழங்களைச் சாப்பிட்டு, கழிவு வழியே விதைகளை வெளியேற்றுகின்றன.
அதனால் புதிதாகச் செடி, கொடிகள் முளைக்கின்றன. வண்டுகளும் பூச்சிகளும் பூந்தேனை உண்டு, மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகின்றன. தானாங்காச்சி மரம்னு ஒண்ணு இருக்கு. நாளைக்குக் காட்டறேன். அந்த மரத்தின் விதையைத் தூக்கிப் போட்டால், காற்றுக்குச் சுற்றிக்கொண்டே வேற இடத்தில் போய் விழும். இதனால் அங்கே புதுசா மரம் உருவாகும். எனக்குத் தெரிஞ்சது இவ்வளவுதாங்க” என்றான் நீலன்.
எல்லோரும் சத்தம் வராமல் கைதட்டி, மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.
”நாங்க கல்லூரியில் படித்ததைவிட நீலன் கிட்ட நிறைய தெரிஞ்சுக்கிட்டோம். அனுபவ மேதை” என்று நீலனைப் பாராட்டினார் ஒரு பேராசிரியர்.
இரவு வெகு நேரம் நீலனுடன் உரையாடிவிட்டு, பூச்சிகளின் ரீங்காரத் தாலாட்டைக் கேட்டுக்கொண்டே உறங்கினார்கள் மாணவர்கள்.