

அ
மெரிக்காவைச் சேர்ந்த பீட்ரைஸ் அலெக்சாண்டர், தனது பெயரிலேயே வடிவமைத்த துணி பொம்மைகள்தான் ’மேடம் அலெக்சாண்டர்’ பொம்மைகள். குழந்தைகள் புத்தகம், பாடல்கள், திரைப்படக் கதாபாத்திரங்களை சட்டப்பூர்வமாக உரிமை பெற்று, பொம்மைகளாக்கிய முதல் பொம்மை வடிவமைப்பாளர் இவர்தான்.
முதல் உலகப் போரின்போது பொருளாதாரத் தடை காரணமாக ஜெர்மனியிலிருந்து பொம்மைகள் இறக்குமதி செய்யப்படுவது தடை செய்யப்பட்டிருந்தது. அப்போதுதான் மேடம் அலெக்சாண்டர் தனது முதல் பொம்மையைச் செய்தார். மூக்கும் முழியுமாக அவர் செய்த பொம்மை செஞ்சிலுவை தாதியர் அணியும் உடையை அணிந்திருந்தது. போர்க் காலம் என்பதால் அந்தப் பொம்மைகள் குழந்தைகளிடையே மிகுந்த புகழைப் பெற்றன. 1923-ல் கடன் பெற்று சகோதரிகள், அண்டைவீட்டார் என 16 பேருடன் சேர்ந்து அலெக்சாண்டர் பொம்மை நிறுவனத்தை ஆரம்பித்தார் மேடம் அலெக்சாண்டர்.
முதல் உலகப் போருக்குப் பின்னர் உறுதியான பிளாஸ்டிக்கிலும் 1960-களில் வினைலிலும் பொம்மைகளைச் செய்யத் தொடங்கினார். 1960-களில் அமெரிக்காவின் முன்னணி பொம்மைத் தயாரிப்பாளராகப் புகழ்பெற்றார். 1980-களில் மேடம் அலெக்சாண்டர் ஓர் ஆண்டுக்கு 10 லட்சம் பொம்மைகளைத் தயாரித்தார். பார்பி பொம்மைகள் உருவாவதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இவர் உருவாக்கிய பேஷன் பொம்மை ‘சிஸ்ஸி’.
மேடம் அலெக்சாண்டர் தயாரித்த புஸ்ஸி கேட் பொம்மை, பெயருக்கு ஏற்ற மென் ரோம உடையுடன் புசுபுசுவென்று இருக்கும். ‘தி பர்ஸ்ட் லேடிஸ் ஆப் தி யுனைட்டெட் ஸ்டேட்ஸ்’ பொம்மைகளும், தேவதைக் கதைகள் பொம்மைகளும் புகழ்பெற்றவை. இவர் 1953-ல் அறிமுகம் செய்த வெண்டி பொம்மை, இன்றும் உலகம் முழுவதும் புகழ்பெற்றிருக்கிறது.
சின்ட்ரெல்லா, ரேம்போ முதல் ஹல்க்வரை திரைப்படக் கதாபாத்திரங்கள் சார்ந்து குழந்தைகளிடம் நாயக, நாயகி பொம்மைகள் தயாரிக்கப்படுவதற்கு முன்னோடி மேடம் அலெக்சாண்டர். அத்துடன் சமகாலத்தில் வாழும் தலைவர்கள், ஆளுமைகளையும் பொம்மைகளாகச் செய்து பிரபலப்படுத்தியவர் இவர்தான். பிரிட்டனின் 36-வது ராணியாக இரண்டாம் எலிசபெத் பதவியேற்றபோது 1953-ல் 36 பொம்மைகள் கொண்ட செட் ஒன்றை உருவாக்கினார்.
ஆஸ்திரிய நாட்டிலிருந்து குடிவந்த பெற்றோருக்கு, 1895-ம் ஆண்டு பிறந்தவர் அலெக்சாண்டர். ப்ரூக்ளின் நகரத்தில் பெர்த்தா என்ற பெயரில் வளர்ந்த அவர், இருபது வயதில் தனது பெயரை பீட்ரைஸ் ஆக மாற்றிக் கொண்டார்.
இத்தாலியைச் சேர்ந்த லென்சி பொம்மைகளை உருவாக்கிய மேடம் லென்சிதான் இவருக்கு முன்மாதிரி. நாம் இழந்த உலகின் மகத்துவங்கள், அரண்மனை ஆடம்பரங்கள் மீது மேடம் பீட்ரைஸ் அலெக்சாண்டருக்குச் சிறுவயதிலிருந்தே ஈர்ப்பு இருந்தது.
அதைப் பிரதிபலிக்கும்படி அவர் உருவாக்கிய பொம்மைகள்தான் மேடம் அலெக்சாண்டர் பொம்மைகள். புலம்பெயர்ந்த ஏழைப் பெற்றோருக்குப் பிறந்த பெர்த்தாவாக அவர் தன்னைக் கருதவே இல்லை. அவருக்கு மேடம் பீட்ரைஸ் அலெக்சாண்டர் என்ற கம்பீரமான பெயர்தான் பிடித்திருந்தது.
தொடர்புக்கு: sankararamasubramanian.p@thehindutamil.co.in