கதை: நான் யார்?

கதை: நான் யார்?
Updated on
2 min read

காட்டில் ஒட்டகச்சிவிங்கிக்கு ஒரு குட்டி பிறந்தது. அடர்பழுப்பு நிறத்தில் அழகாக இருந்த அந்தக் குட்டி, நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தது. அதனால் அம்மா சிவிங்கி, உயரமான மரங்களில் உள்ள இலைகளைத் தேடிச் சாப்பிடச் சென்றது.

அந்த வழியே வந்த குரங்குக் குட்டி, அழகாகத் தூங்கிக் கொண்டிருக்கும் சிவிங்கிக் குட்டியைப் பார்த்தது. அதனிடம் பேச வேண்டும் என்கிற ஆர்வத்தில் அருகில் வந்து நின்றது. தூக்கத்தில் இருந்து விழித்த சிவிங்கிக் குட்டி, கண்களைத் திறந்து குரங்கைப் பார்த்துச் சிரித்தது.

குரங்குக் குட்டி, "நீதான் ஒட்டகச்சிவிங்கியா?" என்று சந்தேகமாகக் கேட்டது.

"எனக்குத் தெரியாதே, ஏன் அப்படிக் கேக்கற?" என்று குட்டிச் சிவிங்கி கேட்டது.

"ஒட்டகச்சிவிங்கின்னா அது உடம்புல புள்ளிகளும் வெள்ளைக் கோடுகளும் இருக்குமே... உன் உடம்புல புள்ளிகளையும் கோடுகளையும் காணோமே?" என்று குரங்குக் குட்டி யோசித்தது.

சிவிங்கிக் குட்டி தன்னைக் குனிந்து பார்த்துக்கொண்டது. "ஓ... ஆமா... ஒண்ணுமே காணோமே... என் அம்மாவுக்கு இருந்ததே... அதெல்லாம் எங்கே போயிருக்கும்?” என்று ஒன்றும் புரியாமல் கேட்டது.

"எனக்கு ஒரு யோசனை தோணுது" என்று சொன்ன குரங்குக் குட்டி, சிவிங்கிக் குட்டியைக் குதிரை இருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றது. "இவன் உன்னை மாதிரி இருக்கானா?” என்று குதிரையிடம் கேட்டது.

சிவிங்கிக் குட்டியை மேலும் கீழும் பார்த்த குதிரை, முடிகள் அடர்ந்த அதன் வாலை சுழற்றியது. "இவனுக்கு என்னைப் போல அடர்த்தியான வால் இல்லையே" என்று சொல்லிவிட்டு, குதிரை காட்டுக்குள் ஓடியது.

"அதோட வால் எவ்வளவு அழகா இருக்குல்ல?" என்று குதிரை ஓடும்போது காற்றில் அழகாக ஆடிய வாலை, சிவிங்கிக் குட்டி ரசித்துப் பார்த்தது.

"அட, நீ யாருன்னு நான் கண்டுபிடிக்கப் பார்க்கறேன், நீ குதிரை வாலை ரசிச்சிக்கிட்டு இருக்க. வா என்கூட" என்று மான் இருந்த இடத்திற்கு சிவிங்கிக் குட்டியை அழைத்துச் சென்றது குரங்குக் குட்டி.

அங்கே மான் புல் மேய்ந்து கொண்டிருந்தது. "யார் இவன்?" குரங்குடன் இருந்த சிவிங்கிக் குட்டியைப் பார்த்துக் கேட்டது மான்.

"நானும் அதைத் தெரிஞ்சிக்கதான் உன்கிட்ட வந்தேன். ஒருவேளை இவன் உன்னை மாதிரி இருக்கானோ என்று நினைத்தேன்" என்றது குரங்குக் குட்டி.

அந்த மானுக்கு அழகான கொம்புகள் இருந்தன. "இவனுக்கு என்னை மாதிரி கொம்பு இல்லையே, தவிர இவ்ளோ உயரமா இருந்தா எப்படிக் கீழ இருக்கிற புல்லைச் சாப்பிடறது?" என்று சொல்லிவிட்டு மானும் காட்டுக்குள் ஓடியது.

"ஆஹா! இந்த மானுக்கு எவ்வளவு அழகான கொம்புகள் இருக்கு! காட்டுக்குள்ள இவ்வளவு வேகமா ஓடும்போது புதரிலோ மரத்திலோ மாட்டிக்காதா?" என்று கேட்டது சிவிங்கிக் குட்டி.

"ஐயோ, உன்னை நான் என்ன பேர் சொல்லிக் கூப்பிடறதுன்னு தெரியாம மண்டையை உடைச்சிக்கிட்டு இருக்கேன். ஆனா, நீ எல்லாரையும் ரசிச்சிக்கிட்டு இருக்க" என்று குரங்குக் குட்டி, தலை மேல் கை வைத்துக்கொண்டு சொன்னது.

அப்போது துள்ளிக் குதித்து ஓடிவந்த முயல், "இவன் யாரு ஒட்டகமா?" என்று கேட்டது.

"ஒட்டகம் பாலைவனத்துலதானே இருக்கும்? இங்க எப்படி வர முடியும்? இவன் குட்டி ஒட்டகச்சிவிங்கின்னு நினைக்கிறேன்" என்றது குரங்குக் குட்டி.

"ஒட்டகம் பாலைவனத்துல இருக்கும் சரி. ஒட்டகச்சிவிங்கி மட்டும் இந்தியக் காடுகளில் இருக்குமா?” என்று கேட்டது முயல்.

“நல்ல கேள்விதான். ஆனா, ஆப்பிரிக்காவில் இருந்து ரெண்டு ஒட்டகச்சிவிங்கிகள் சில வருஷங்களுக்கு முன்னால வந்ததாக என் அம்மா சொன்னார்” என்றது குரங்குக் குட்டி.

“ஓ, ஒட்டகச்சிவிங்கின்னா உடம்புல திட்டுகளும் வெள்ளைக் கோடுகளும் இருக்கணுமே..." என்றது முயல்.

"நாம வரைஞ்சிடலாமா?" என்று குரங்குக் குட்டி கேட்டது.

"ஆ... அங்க பாருங்க, என் அம்மா வர்றாங்க" என்று சிவிங்கிக் குட்டி ஓடியது.

"எங்கே எங்களுக்கு ஒண்ணும் தெரியலையே?" என்று குரங்கும் முயலும் சொல்ல, "என்னை மாதிரி நீளமான கழுத்து இருந்தா, தூரத்துல வர்றவங்களைக்கூடப் பார்க்க முடியும், அதோட இப்படி வேகமாவும் ஓட முடியும்" என்று சொல்லிக்கொண்டே அம்மாவை நோக்கி ஓடியது சிவிங்கிக் குட்டி.

குரங்கும் முயலும் வண்ணச் சாயத்தை எடுத்துக்கொண்டு வந்தன. சிவிங்கிக் குட்டியின் உடலில் அதன் அம்மாவைப் போல் வண்ணத்தைத் தீட்டிவிட்டன.

"அப்பாடா! இப்பதான் நீ ஒட்டகச்சிவிங்கி மாதிரி இருக்க" என்று திருப்திபட்டுக்கொண்டன முயலும் குரங்கும்.

அப்போது மழை கொட்ட ஆரம்பித்தது. குரங்கும் முயலும் வரைந்த கோடுகளும் திட்டுகளும் மழையில் கரைந்து போயின.

அதைப் பார்த்துச் சிவிங்கிக் குட்டிச் சிரித்தது.

"இன்னும் கொஞ்ச நாளில் கோடுகளும் திட்டுகளும் வந்துவிடும். திட்டுகளும் கோடுகளும் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இவன் என்னுடைய செல்லக் குட்டி" என்று அம்மா சிவிங்கிக் குட்டியை அணைத்துக்கொண்டது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in