

கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரி, வேள் பாரியாகப் பெரியவர்களுக்கான நாவல் மூலம் பரவலாக அறியப்பட்டுள்ளார். இயற்கையோடு இயைந்து வாழ்ந்த பாரி மன்னனின் இளமைக் காலம் எப்படி இருந்திருக்கும்? அதைச் சொல்வதற்கு, மண்ணையும் மக்களையும் புரிந்துகொண்ட ஒரு மன்னனாகப் பாரி உருவெடுத்த காலத்துக்கே நம்மை அழைத்துச்செல்கிறது உதயசங்கர் எழுதியுள்ள 'பறம்பின் பாரி' இளையோர் நாவல்.
உதயசங்கரின் இளையோர் நாவல் வரிசையின் மையமாக இருக்கும் கேப்டன் பாலு, இந்த நாவலில் திரையன் எனப் பாரி காலத்து இளைஞனாகக் கூடுவிட்டு கூடு பாய்ந்துவிடுகிறான். தனியாகவா, இல்லை. வழக்கம்போல் சாத்தன் என்கிற ஆதனுடன்தான் அவன் பயணிக்கிறான்.
சங்க இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள இந்த நாவல், இளைய வாசகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப சாகசம் நிறைந்ததாகவும் பரபரப்பாகவும் அமைந்திருக்கிறது.
வேட்டை, எதிரிகளுடனான மோதல், கொற்றவை வழிபாடு, சேவல் போர் எனச் சங்க இலக்கிய காலத்துக்கே நம்மை அழைத்தும் சென்றுவிடுகிறது. நாவலின் எழுத்துக்குச் சிறந்த துணையாக ஓவியர் பிள்ளையின் ஓவியங்கள் நம் கற்பனைக்குக் களம் அமைத்துக் கொடுக்கின்றன.
'ஆதனின் பொம்மை', 'பீம்பேட்கா', 'யார் அந்த மர்ம மனிதன்' வரிசையில் நம் இளைஞர்களுக்கு வரலாற்றை அறிமுகப்படுத்தும் 'பறம்பின் பாரி' நாவல், இளையோர் இலக்கியத்தில் தவிர்க்க முடியாத ஒரு புத்தகமாக இருக்கும். வெளியாகிக் குறைந்த காலத்திலேயே எழுச்சித் தமிழர் சிறார் இலக்கிய விருதை இந்த நூல் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
பறம்பின் பாரி, உதயசங்கர், வானம் வெளியீடு, தொடர்புக்கு: 91765 49991