

கடவுள் யார்? அவர் எப்படி இருப்பார்? எங்கே இருப்பார்? அவர் ஒருவரா, பலரா? அவரைக் காண முடியுமா? அவர் பேசுவதைக் கேட்க முடியுமா? அவரை அடைவதற்கு என்ன வழி? ஒரு காலத்தில் இதுபோன்ற கேள்விகள்தான் என்னைப் போட்டுத் துளைத்து எடுத்துக்கொண்டிருந்தன.
எல்லாரும் அப்பா, அம்மா, வீடு, படிப்பு, வேலை என்று மும்முரமாக இருந்தபோது நான் மட்டும் வானத்தைப் பார்த்தபடி தீவிரமாகச் சிந்தித்துக்கொண்டு இருப்பேன். ஒருவேளை சூரியன்தான் கடவுளோ? குளுமையான நிலவில் ஒருவேளை கடவுள் வாழ்கிறாரோ? மின்னும் நட்சத்திரம் ஒவ்வொன்றும் ஒரு கடவுளாக ஏன் இருக்கக் கூடாது?
ஒரு நாள் வழக்கம்போல் ஏதோ யோசித்தபடி நடந்து சென்று கொண்டிருந்தபோது, தற்செயலாக அந்த மனிதரைச் சந்தித்தேன். ஒரு கணம் உறைந்து நின்றுவிட்டேன்.
இவர் என் வீதியில் காய்கறி விற்பவர் அல்லவா? என்ன ஆயிற்று இவருக்கு? ஏதாவது நோய் தாக்கிவிட்டதா? ஏன் இப்படி எலும்பும் தோலுமாக மாறிவிட்டார்? நடக்கக்கூட முடியாமல் இவர் எங்கே போய்க் கொண்டிருக்கிறார்? இவருடைய கடை என்னானது? கவனித்துக்கொள்ள வீட்டில் யாருமே இல்லையா?
தயங்கித் தயங்கி அவரை நெருங்கினேன். “உங்களுக்கு என்ன ஆச்சு” என்றேன். நான் சொன்னது அவர் காதில் விழுந்தது போலவே இல்லை. சட்டென்று அவர் கை என்னை நோக்கி நீண்டது.
சருகு போல் இருந்தது அந்தக் கை. நடுங்கிக்கொண்டும் இருந்தது. குழிபோல் இருந்த கண்ணைக் கொண்டு என்னைப் பார்த்தார். வெடித்திருந்த அவர் உதடுகள் மெல்ல அசைந்தன. “பசி.”
அன்று இரவு என்னால் உறங்க முடியவில்லை. இல்லையில்லை, அன்று முதல் என்னால் உறங்க முடியவில்லை. கண்களை மூடும் ஒவ்வொரு முறையும் அவர் கை என்னை நோக்கி நீண்டு வளர்ந்துகொண்டே இருந்தது. என் வீட்டிலுள்ள உணவை எல்லாம் அள்ளிக்கொண்டு வந்து அளித்தேன்.
இருக்கும் காசு, பணம் எல்லாவற்றையும் கொண்டுவந்து குவித்தேன். ஆடை, படுக்கை, பாத்திரம் என்று ஒன்றையும் விட்டு வைக்கவில்லை. இப்போதாவது அந்தக் கையின் நடுக்கம் குறைகிறதா, இப்போதாவது நிறைவு பெறுகிறதா என்று கவனித்தேன். இல்லை.
சுருங்கி, சருகு போல் இருந்த அந்தக் கை அப்படியேதான் நீண்டிருந்தது. நான் மலை அளவு குவித்தவை அனைத்தும் இப்போது எறும்புகள்போல் காட்சி அளித்தன. அந்தக் கை எப்போது போதும் என்று சொல்லும்? என் காதில் இரவும் பகலுமாக ஒலித்துக்கொண்டிருக்கும் பசி எனும் குரல் எப்போது மறையும்?
வானிலிருந்து நான் தூக்கி வீசப்பட்ட கணம் அது. வள்ளலாராக நான் மாறிய கணமும் அதுவேதான். தலையை அண்ணாந்து கடவுளை ஆராய்ந்து கொண்டிருந்த நான், என் பார்வையைக் கீழே இறக்கி மனிதர்களை ஆராயத் தொடங்கியது அதன் பிறகுதான்.
அந்த மனிதர் என்னிடம் பேசியது ஒரு சொல்தான். அந்த ஒரு சொல் நான் அதுவரை வாசித்து அறிந்து வைத்திருந்த மாபெரும் தத்துவங்கள் எல்லாவற்றையும் உதிர்த்துவிட்டது. நான் அதுவரைகண்டுகொண்டிருந்த கனவுகள்எல்லாவற்றையும் கலைத்துப் போட்டது.
அதன்பின் அது என்னிடம் சொன்னது. ‘வானம் அல்ல புழுதி பறக்கும் பூமிதான் உன் வீடு. அதுதான் உன் உலகம். அதிலுள்ள உயிர்கள் அனைத்தும் உன் உறவுகள். நீ இதுவரை கற்றதை எல்லாம் துறந்துவிட்டு இங்கே புதிதாகப் படிக்கத் தொடங்கு.
உன் கண்களையும் காதுகளையும் புதுப்பித்துக்கொண்டு எல்லாக் காட்சிகளையும் எல்லா ஓசைகளையும் கனிவோடு பார்க்கவும் கனிவோடு கேட்கவும் பழகிக்கொள்.
நீ தேடும் கடவுள் மேலே இல்லை, இதே புழுதியில்தான் இருக்கிறார். அவர் ஒருவர் அல்ல, பலர். உன் உலகின் நோயைத் தீர்க்க ஒரு கடவுள் போதாது. எனவே பலரை உருவாக்கு. நமக்குத் தேவைப்படும் கடவுள்களை நாம்தான் உருவாக்கிக்கொள்ள வேண்டும்.’
கடவுள் யார் என்று இப்போது எனக்குத் தெரியும். அவரை என்னால் தெளிவாகக் காண முடியும். அவர் குரலை நன்றாக என்னால் கேட்கவும் முடியும். மனிதன் மட்டுமல்ல, பறவை, பாலூட்டி, பூச்சி, தாவரம் என்று எந்த உயிர் வாடுவதைக் கண்டாலும் யார் உருகி, வாடுகிறாரோ அவர் கடவுள்.
அம்மா ஏதேனும் கொடுங்கள் என்று ஒரு கை நடுங்கியபடி நீண்டு வரும்போதே அதை யார் கனிவோடு பற்றிக்கொள்கிறாரோ அவர் கடவுள். அந்தக் கையின் நடுக்கத்தைப் போக்குவது என் கடமை என்று யார் உளமாற நம்புகிறாரோ அவர் கடவுள். பசி எனும் குரல் எந்தத் திசையில் இருந்து புறப்பட்டு வந்தாலும் துடித்துப் போய் இந்தாருங்கள் என்று தன்னிடம் இருப்பதை யார் அள்ளித் தருகிறாரோ அவர் கடவுள்.
அன்பு பெருகும்போது, அள்ளிக்கொடுக்கும் கரங்கள் பெருகும்போது பசி மறையத் தொடங்கும். பசி மறையும்போது கடவுள் களுக்கான தேவை மறையும். அந்தத் தேவை மறையும்போது கடவுள்கள் மறைவார்கள். கடவுள்கள் மறையும்போது நாம் அனைவரும் மனிதர்களாக மாறுவோம்!
(இனிக்கும்)
- marudhan@gmail.com