

‘சல்மான் ருஷ்டி, உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர் யார்? உங்களைக் கவர்ந்த புத்தகம் எது? உங்களுக்குப் பிடித்த நாடு எது?’ இப்படித் தொடங்கி பிடித்த நிறம், பிடித்த விலங்கு, பிடித்த சினிமா, பிடித்த பாட்டு என்று எல்லாரும் என்னிடம் திரும்பத் திரும்ப கேட்கிறார்கள். எனக்கு இந்தக் கேள்விகளில் எப்போதும் ஆர்வம் இருந்ததில்லை. ஏனென்றால் பிடித்த விஷயங்களைப் பேசுவதும் கேட்பதும் எல்லாருக்கும் எளிதானது, பிடித்தமானது.
உங்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை வைத்து அல்ல, என்ன பிடிக்கவில்லை என்பதை வைத்தும் பிடிக்காததை நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை வைத்தும்தான் நீங்கள் யார் என்பதை நான் முடிவு செய்வேன்.
பிடித்த கதையை மீண்டும், மீண்டும் படிக்கலாம். பிடித்த பாடலை எல்லா நேரமும் கேட்கலாம். பிடித்த மனிதர்களோடு பழகுவதும் பேசுவதும் சிரித்து மகிழ்வதும் அற்புதமான தருணங்கள். உங்களுக்குப் பிடிக்காத கதையை, பிடிக்காத பாடலை, பிடிக்காத மனிதர்களை என்ன செய்யப்போகிறீர்கள்?
நான் கதை எழுதுபவன் என்று உங்களுக்குத் தெரியும். என்னுடைய ஒரு கதை உங்களுக்குப் பிடிக்கவில்லை என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்தக் கதையை நீங்கள் என்ன செய்யலாம்? ‘உன் கதை எனக்குப் பிடிக்கவில்லை. பத்து பக்கங்கள்கூட என்னால் படிக்க முடியவில்லை.
இதை நான் படிக்க மாட்டேன்’ என்று சொல்லலாம். இதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ‘நான் ஆண்டுக்கணக்கில் மாய்ந்து மாய்ந்து எழுதிய கதையை பிடிக்கவில்லை என்று எப்படிச் சொல்லலாம்’ என்று உங்களிடம் சண்டைக்கு வரமாட்டேன்.
‘உன் கதை மட்டுமல்ல, உன்னையும் பிடிக்கவில்லை என்பதால் நீ இதுவரை எழுதியதையும், இனி எழுதப்போவதையும் படிக்கப் போவதில்லை’ என்றும் நீங்கள் சொல்லமுடியும். ‘பரவாயில்லை, உங்களுக்குப் பிடித்த எழுத்தாளரை நீங்கள் வாசித்துக்கொள்ளுங்கள், வாழ்த்துகள்’ என்று உங்கள் கையைப் பிடித்துக் குலுக்குவேன். வேறு யாரைப் படிப்பது என்று கேட்டால் நானே பல நல்ல படைப்புகளை உங்களுக்கு அறிமுகமும் செய்வேன்.
ஒரு படி மேலே சென்று இன்னொன்றும் நீங்கள் செய்யலாம். ‘ருஷ்டியின் கதையைப் படிக்காதே. படித்தால் உன் நேரம்தான் வீணாகும். அவருக்கு எழுதவே வரவில்லை’ என்று உங்களுக்குத் தெரிந்தவர்களிடம் எல்லாம் சொல்லலாம்.
நீங்கள் ஒரு விமர்சகர் என்றால் நான் எழுதியது ஏன் மோசமான கதை என்பதை விளக்கலாம். என் கதையிலுள்ள குறைகளை எல்லாம் கண்டுபிடித்துச் சுட்டிக்காட்டலாம். என் புத்தகத்தை யாராவது உங்கள் கண்முன்னால் படித்துக்கொண்டிருந்தால், ஐயோ பாவம் இந்த ஜீவன் என்று வருந்தலாம். இதற்கெல்லாம் உங்களுக்கு முழு உரிமை இருக்கிறது.
சிலர் இவற்றை எல்லாம் விட்டுவிட்டு இன்னொரு வழியில் செல்வார்கள். எனக்குப் பிடிக்காத ஒரு கதை எவருக்கும் பிடிக்கக் கூடாது. என்னால் ஏற்க முடியாத கதை இந்த உலகில் எங்கும் வாழக் கூடாது. நான் படிக்க விரும்பாத ஒரு புத்தகம் அழிக்கப்பட வேண்டும். எனக்குப் பிடிக்காத ஒரு கருத்தை எவரும் வைத்திருக்கக் கூடாது.
இது ஏன் தவறானது என்றால் எல்லாருக்கும் பிடித்த ஓர் எழுத்தாளர், எல்லாருக்கும் பிடித்த ஒரு கதை இந்த உலகில் இதுவரை தோன்றியதில்லை. இனி மலரவும் வாய்ப்பில்லை. எனக்குப் பிடித்த டால்ஸ்டாய் உங்களுக்குப் பிடிக்காமல் போகலாம். நான் வெறுக்கும் ஒரு புத்தகத்தை நீங்கள் கொண்டாடி மகிழலாம்.
ஒரு நூலகம் சென்றால் அங்கே எனக்குப் பிடித்த ஆயிரம் புத்தகங்கள் இருக்கும். எனக்குப் பிடிக்காத ஆயிரம் புத்தகங்கள் இருக்கும். நான் இதுவரை படிக்காத, பிடிக்குமா பிடிக்காதா என்றே தெரியாத ஆயிரம் புத்தகங்களும் இருக்கும்.
நான் விரும்பும் எழுத்தாளரின் நூலுக்கு அருகில் நான் விரும்பாத எழுத்தாளரின் நூலும் ஒட்டிக்கொண்டிருக்கும். எதிரெதிர் கருத்துகளைக் கொண்டிருக்கும் இரண்டு நூல்கள் ஒன்றின் தோள் மீது இன்னொன்று கை போட்டபடி உரையாடிக் கொண்டிருக்கும். என்னிடம் வராதே, நான் பெரிய ஆள் என்று நேற்று வந்த ஒரு நூலை டால்ஸ்டாய் பிடித்துத் தள்ள மாட்டார்.
தேவதைக் கதைகளும் மாயாஜாலக் கதைகளும் இந்த இரண்டையுமே ஏற்காத அறிவியல் நூல்களோடு கலந்திருக்கும். என் கடவுள் உயர்ந்தவர் என்று ஒரு நூலும் இல்லை என்னுடையவரே என்று இன்னொரு நூலும் இரண்டுமே இல்லை என்று மூன்றாவது நூல் சொல்லும். கருத்தை மறுக்குமே தவிர, இந்தப் புத்தகம் இருக்கும் இடத்தில் நான் இருக்க மாட்டேன் என்று ஒரு நூலும் சொல்லாது.
நான் வாழும் உலகம் இந்த நூலகம்போல் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். எனக்குப் பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் இருவருமே இங்கே சம உரிமையோடு வாழ வேண்டும். பிடித்த கதைகள், பிடிக்காத கதைகள். பிடித்த கருத்துகள், பிடிக்காதவை அனைத்தும் செழிக்க வேண்டும். ஒன்றோடு மற்றொன்று உரையாட வேண்டும்.
நமக்குப் பிடிக்காதவற்றை நாம் அகற்றத் தொடங்கினால் நமக்குப் பிடித்தவற்றை வேறொருவர் அகற்றுவார். நமக்கு நெருக்கமான பாடல்கள் தொடர்ந்து ஒலிக்க வேண்டுமானால், நம்மால் நெருங்க முடியாத பாடல்களை நாம் அனுமதிக்க வேண்டும்.
நான் விரும்பாத நிறங்கள் மறைந்தால் உலகின் வண்ணம் தொலைந்துவிடும். வண்ணங்கள் இல்லாத உலகில் கதைகள் இருக்காது. கதைகள் இருக்கும்வரை மட்டுமே நாம் இருப்போம். நாம் இருந்தால்தான் நான்.
- marudhan@gmail.com