

இன்றைய குழந்தைகள் பலரும் தமிழில் வாசிக்கச் சிரமப்படுகிறார்கள். அவர்களுக்காகச் சிறார் நூல்கள் பல படைக்கப்பட்டாலும், எளிதில் வாசிக்கும் வகையில் அவர்களுடைய வாசிப்பு நிலை இல்லை. இதைப் போக்குவதற்காக அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கான வாசிப்பு இயக்கம் முக்கியமான ஓர் அடியை எடுத்து வைத்தது.
இந்த இயக்கத்தின் முக்கிய அம்சம் குறைந்த சொற்கள், சிறிய வாக்கியங்கள், குழந்தைகளை எளிதில் கவரும் புதுமையான கதைகள். அதே வகையில் ஐந்து நூல்களைச் சிறார் வாசிப்பு நூல் வரிசையாக புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ளது: சுட்டிச் சுண்டெலி-ஞா.கலையரசி, சிரிப்பு ராஜா-மு.முருகேஷ், நாம்...நாம்... பிரியசகி, ச.மாடசாமி, கலாப்பாட்டியும் நிலாப்பேத்தியும்- சாலை செல்வம், மீனின் அழுகை - புவனேஸ்வரி, மோ.கணேசன். ஒவ்வொரு புத்தகத்திலும் இரண்டு சிறிய கதைகள் இடம்பெற்றுள்ளன.
கதைகளுக்கு ஓவியர் பிள்ளை வரைந்துள்ள ஓவியங்கள் சுவாரசியம் கூட்டுகின்றன. புதிதாக வாசிக்கத் தொடங்கும் குழந்தைகளுக்கும் குழந்தைகளிடையே வாசிப்பை எளிதாக ஊக்குவிப்பதற்கும் இது போன்ற புத்தகங்கள் உதவும்.
சிறார் வாசிப்பு நூல் வரிசை,
வெளியீடு: புக்ஸ் ஃபார் சில்ரன், தொடர்புக்கு: 044-24332924