

டிட்டு அம்மாவை எதிர்பார்த்தபடி கூட்டில் காத்திருந்தது. இரையோடு வந்த தாய்க் குருவியைப் பார்த்ததும் அதற்கு ஒரே ஆனந்தம்.
“அம்மா, உங்ககிட்டே ஒண்ணு கேட்கணும்” என்று ஆசையோடு சொன்னது.
“என்ன டிட்டு? பசிக்கும்ல, மொதல்ல இரையைச் சாப்பிடு. மத்ததெல்லாம் பிறகு” என்றபடி ஊட்டிவிட்டது தாய்க் குருவி.
இரையை வாயில் ஒதுக்கிக்கொண்டபடியே, “ஆறறிவுன்னா என்னம்மா?” என்று கேட்டது டிட்டு.
“இதை எங்கே கேட்டே?”
“பக்கத்துத் தெருவில் என் நண்பர்களைப் பார்க்கப் போயிருந்தேன். அங்கே ஒரு பையன் படிச்சிட்டு இருந்தான். அவங்களுக்குத்தான் இந்த ஆறறிவு இருக்குதாம். நமக்கெல்லாம் கிடையாதாம்மா?”
சற்று யோசித்த தாய்க் குருவி, “ஆமா டிட்டு. பறவைகளாக இருக்குற நமக்கு மட்டுமல்ல, பூனை, நாய், கரடி போன்ற விலங்குகளுக்குமே ஐந்தறிவுதான்” என்றது.
“அப்போ யானை, சிங்கத்துக்கு?”
“மனுசங்களுக்கு மட்டும்தான் ஆறறிவு என் செல்லக் குட்டி” என்று தாய்க் குருவி பதில் சொன்னது.
“அம்மா, எதெல்லாம் ஐந்தறிவுன்னு கொஞ்சம் சொல்லுங்க” என்றது டிட்டு.
“கண்ணால் பார்க்குற அறிவு, காதால் கேட்குற அறிவு, உடம்பால் உணரும் அறிவு, மூக்கால் நுகரும் அறிவு, வாயால் ருசிக்கும் அறிவு இதைத்தான் அஞ்சறிவுன்னு சொல்வாங்க. இவை நமக்கும் இருக்கு. மனுசங்களுக்கும் இருக்கு” என்று நிறுத்தியது தாய்க் குருவி.
“அப்போ அந்த ஆறாவது அறிவுங்கறது எதும்மா?”
“இந்த ஐந்தையும் வைத்து உண்மையைக் கண்டறியும் பகுத்தறிவு மனுசங்களுக்கு உண்டு. அதெல்லாம் நமக்குத் தெரியாது. நீ தூங்கு. காலைல பேசிக்கலாம்“ என்றது தாய்க் குருவி.
டிட்டுவுக்குத் தூக்கம் வருமா என்ன? ‘அதென்ன பகுத்தறிவு’ என்று யோசித்தது. மனிதர்கள் நம்மைவிட உயர்ந்தவர்கள் என்பதை ஏற்றுக்கொள்ள அதற்கு மனம் வரவில்லை.
“நம்மால் பறக்க முடியும். இந்த மனிதர்களால் அது முடியுமா?” என்று அம்மா காதருகே முணுமுணுத்தது.
ஆனால், தாய்க் குருவி தூங்கிவிட்டது.
அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் தாய்க் குருவி கூட்டை விட்டுக் கிளம்பும்போது, “நம்மைப் போல மனிதர்களால் பறக்க முடியாதே...” என்று கேட்டது.
“என்ன டிட்டு, இன்னும் அதையேதான் யோசிச்சிட்டு இருக்கியா? பறப்பது நம் இயல்பு. நமக்கு இறக்கை இருக்கு. நாம் பறக்கிறோம். மனுசங்களுக்கு இறக்கை கிடையாது. அதனால பறக்க முடியாது.”
“அப்ப நாமதானே உயர்ந்தவர்கள்? வானிலிருந்து பூமியைப் பார்க்க நம்மால மட்டும்தானே முடியும்?”
சிரித்த தாய்க் குருவி, “டிட்டு, நீ சொல்றது உண்மைதான். ஆனால், இந்த மனிதர்கள் தங்களோட மூளையை உபயோகித்து, பறக்கும் இயந்திரத்தை உருவாக்கி, பறந்துட்டிருக்காங்களே” என்றவுடன் டிட்டுவுக்கு ஏமாற்றமாகிவிட்டது.
மனிதர்கள் தங்களைவிட ஓரறிவு அதிகமானவர்கள் என்பதை டிட்டுவால் ஏற்றுக்கொள்ளவே இயலவில்லை. யோசித்தது.
எதிரே இருந்த புங்கை மரத்தின் கிளையில் அமர்ந்த வெள்ளைப் புறாவிடம் தனது சந்தேகத்தைக் கேட்டது.
“புறா அண்ணா, நம்மைவிட மனிதர்கள் அறிவில் உயர்ந்தவர்களா?
“ஏன் டிட்டு?”
“நம்மால் கோபுர உச்சியில் போய் உட்கார முடியும்? இந்த மனிதர்களால் அது முடியுமா? ”
“ஹா... ஹா... அந்த உயர்ந்த கோபுரத்தையே மனிதர்கள்தானே கட்டியிருக்காங்க!”
டிட்டுவின் முகம் சுருங்கிவிட்டது.
பார்க்கும் விலங்குகள், பறவைகளிடம் எல்லாம் தன்னுடைய கேள்வியைக் கேட்டுக்கொண்டே இருந்தது டிட்டு.
மாலையில் தாய்க் குருவி கூட்டுக்கு வந்தது. “டிட்டு, உனக்கு இவ்வளவு நண்பர்களா? என்ன செய்றீங்க?” என்று ஆவலுடன் கேட்டது.
“இன்னிக்கு அதே தெருவில் ரெண்டு பேர் சாதி, சாதின்னு சண்டை போட்டுக்கிட்டாங்க. எங்களுக்குப் பயமா இருந்ததால நம்ம இடத்துக்கு அழைச்சிட்டு வந்துட்டேன்.”
“நல்ல விஷயம் பண்ணினே... உங்க எல்லாருக்கும் சாப்பிட ஏதாவது எடுத்துட்டு வரேன்.”
“அதெல்லாம் வேணாம், சாதின்னா என்னம்மா?”
“ஐயோ... அடுத்த கேள்வியை ஆரம்பிச்சிட்டீயா? அதைத் தெரிந்துகொண்டு என்ன செய்யப் போறே?”
“அவங்க பேசிக்கிட்டதை வெச்சு எனக்கே அர்த்தம் தெரிஞ்சிருச்சு. நீங்க சொல்லுங்க.”
“நீயே சொல்லு.”
“பறவைகளும் விலங்குகளும் சிவப்பு, கறுப்பு, உயர்வு, தாழ்வு என்றெல்லாம் பார்க்கறதில்லை. இவ்வளவுக்கும் நமக்கு ஐந்தறிவுதான் இருக்கு. ஆனா, ஆறறிவுன்னு சொல்லிக்கிற மனிதர்கள் சாதி வித்தியாசம் பார்க்கிறது தப்புதானே?”
தாய்க் குருவிக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
“டிட்டு, சொல்வதுதான் சரி. எல்லா மனிதர்களும் சமம் என்பதை ஒப்புக்கொள்ளாத வரை, அவர்களை ஆறறிவு கொண்டவர்கள்னு நாங்க ஏத்துக்க மாட்டோம்” என்றன டிட்டுவின் நண்பர்கள்.
“எல்லாரும் அப்படி வித்தியாசம் பார்க்க மாட்டாங்க... அதுவும் உங்களைப் போல சிந்திக்கும் மனிதக் குழந்தைகள் பார்க்கவே மாட்டாங்க” என்றது தாய்க் குருவி.
“ஓ, அப்படின்னா வித்தியாசம் பார்க்காதவங்களுக்கு எல்லாம் ஆறறிவு இருக்குன்னு ஒத்துக்கறேன்” என்றது டிட்டு.