

ப
ழைய புத்தகக் கடையிலிருந்து ஒரு புத்தகத்தை வாங்குகிறீர்கள். நன்றாகத் தூசி தட்டிவிட்டு நிதானமாகப் பிரித்துப் பார்க்கிறீர்கள். முதல் பக்கத்தில் ஒரு பெயர் எழுதியிருக்கிறது. மாதம், ஆண்டு இருக்கிறது. இன்னும் கீழே கையெழுத்து. உள்ளே பிரித்துப் பார்த்தால் பல பக்கங்களில் கோடுகள் கிழிக்கப்பட்டிருக்கின்றன. சில பத்திகளுக்கு அருகில் நட்சத்திரக் குறிகள் இருக்கின்றன. சில இடங்களில் ஒரு சில வார்த்தைகள் எழுதப்பட்டிருக்கின்றன. சரி, இதையெல்லாம் வைத்துக்கொண்டு இதற்கு முன்பு இந்தப் புத்தகத்தை வைத்திருந்தவர் பற்றி உங்களால் ஏதாவது கண்டுபிடிக்க முடியுமா?
எடுத்த எடுப்பிலேயே சில விஷயங்களைச் சொல்லிவிடலாம். எழுதப்பட்டிருக்கும் பெயரை வைத்து அவர் ஓர் ஆண் என்று சொல்லிவிடலாம். புத்தகம் வாங்கிய ஆண்டு இருப்பதால் இந்தப் புத்தகம் எத்தனை ஆண்டு பழையது என்று சொல்லிவிடலாம். எங்கே வாங்கியிருக்கிறார் என்னும் குறிப்பு இல்லை. அது ஆங்கிலப் புத்தகமாக இருந்தால் அவருக்கு ஆங்கிலம் படிக்கத் தெரியும். அவருக்குத் தமிழும் தெரியும். ஏனென்றால் அவர் தமிழில் கையெழுத்துப் போட்டிருக்கிறார். சும்மா பொழுதுபோக்குக்காகப் படிப்பவர்போல் தெரியவில்லை. ஆழமாகவும் அதிகமாகவும் படிப்பவர். கையெழுத்து தெளிவாகவும் அழகாகவும் இருக்கிறது. நிறைய எழுதிப் பழகியவராக இருக்க வேண்டும். எழுத்தாளராகவோ பள்ளி ஆசிரியராகவோ இருக்கலாமோ?
சரி, வேறு என்ன சொல்லலாம்? கையெழுத்துக்குக் கீழே ஒரு பூ வரைந்திருப்பதைப் பார்த்தால் நல்ல ரசனை கொண்டவர் என்பது தெரிகிறது. ஓவியமும் அவருடைய பொழுதுபோக்குகளில் ஒன்றாக இருக்கக்கூடும். அதனால்தான் சிவப்பு, பச்சை, கறுப்பு என்று பல வண்ணப் பேனாக்களும் பென்சில்களும் வைத்திருந்தார் போலிருக்கிறது. படிக்கும்போது முக்கியம் என்று தோன்றிய வரிகளுக்குக் கீழே கோடு போட்டிருக்கிறார்.
ஆனால் கோணலும் மாணலுமாக இல்லாமல் கோடுகள் நேராகக் கிழிக்கப்பட்டிருக்கின்றன. எனவே, அவரிடம் ஒரு ஸ்கேல் இருந்திருக்க வேண்டும். ஒரு புத்தகத்தைப் படிக்க ஆரம்பிக்கும்போதே கவனமாக ஸ்கேல், பேனா, பென்சில் எல்லாவற்றையும் எடுத்து வைத்துக்கொண்டு படிப்பவராக இருந்திருக்கிறார். இவை எல்லாவற்றையும் வைத்துக்கொள்ள நிச்சயம் ஒரு மேஜை தேவைப்பட்டிருக்கும். உட்கார்ந்து படிக்க ஒரு நாற்காலி.
சரி? வேறு ஏதாவது? புத்தக அட்டை இப்போதும் மடங்காமல் இருப்பதைப் பார்த்தால் அவர் கவனமாகப் புத்தகத்தைப் பயன்படுத்தியிருக்கிறார் என்று தெரிகிறது. புத்தகம் படிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் நீண்டகாலம் அதை வைத்து பாதுகாக்கவேண்டும் என்றும் அவர் விரும்பியிருக்கிறார். எதையும் சீராக, ஒழுங்காகச் செய்ய வேண்டும் என்று அவர் நினைத்திருக்கிறார். பக்கத்தின் ஓரங்கள் மடங்கியிருக்கவில்லை. பக்கத்தை மடிப்பது தவறு என்று அவர் நினைத்திருக்க வேண்டும்.
புத்தகத்தின் முதுகில் ஆங்கிலத்தில் ஹெச் 43 என்று ஒரு சிறு காகிதத்தில் எழுதி ஒட்டியிருக்கிறார். இது வரலாற்றுப் புத்தகம் என்பதால் ஹிஸ்டரி என்பதைக் குறிக்க அவர் ‘ஹெச்’ என்னும் எழுத்தைப் பயன்படுத்தியிருக்கலாம். 43 என்பது புத்தகத்தின் எண். அதாவது, வரலாற்றுத் துறையில் அவர் வாங்கி வைத்திருக்கும் புத்தகங்களில் இது 43வது. அதற்குப் பிறகும் அவர் நிறைய புத்தகங்கள் வாங்கியிருக்கவேண்டும். மேலும் வரலாறு போக வேறு துறைகளிலும் அவர் புத்தகங்களை வாங்கி வைத்திருக்கவேண்டும். அப்படியானால் அவர் தன் வீட்டில் ஒரு நூலகத்தை உருவாக்கி வைத்திருக்கவேண்டும்.
அவ்வளவுதானா? இருங்கள். பேனா, பென்சில், ஸ்கேல் போக அவரிடம் கத்திரிக்கோல், பசை போன்ற பொருள்களும் இருந்திருக்க வேண்டும். நிறைய புத்தகங்களை வாங்குபவரிடம் அலமாரிகளும் இருந்திருக்க வேண்டும், இல்லையா? அவர் கண்ணாடி அணிந்திருப்பாரா? இருக்கலாம். ஏதேனும் நூலகத்தில் உறுப்பினராக இருந்திருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இவ்வளவு படிப்பவர் நிச்சயம் ஏதேனும் எழுதவும் முயற்சி செய்திருக்க வேண்டும். இவர் புத்தகம் வாங்கிய ஆண்டை அடிப்படையாக வைத்து அப்போது வெளிவந்த பத்திரிகைகளைத் தேடினால் இவர் எழுதிய கட்டுரைகள் அல்லது புத்தகங்கள் ஏதேனும் அகப்படலாம்.
இன்னும் கொஞ்சம் ஆராய்ந்தால் மேலும் பல விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாம். உதாரணத்துக்கு, அவர் எந்தெந்த வரிகளை எல்லாம் அடிக்கோடு போட்டு வைத்திருக்கிறார் என்பதை வைத்து அவருக்கு என்னென்ன பிடிக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளலாம். அதை வைத்துக்கொண்டு அவர் எப்படிச் சிந்தித்தார் என்றுகூட யூகிப்பது சாத்தியம்தான். ஒரே ஒரு பழைய புத்தகம். அதை வைத்துக்கொண்டு எத்தனை எத்தனை விஷயங்களை யூகிக்க முடிகிறது பார்த்தீர்களா?
வரலாற்றுப் புத்தகம் மட்டுமல்ல, வரலாறுகூட இப்படிதான் உருவாகிறது. அகழ்வாராய்ச்சி செய்பவர்களின் முக்கியமான வேலை கடந்த காலத்தைத் துப்பறிந்து கண்டுபிடிப்பதுதான். உடைந்த கட்டிடங்கள், பழைய நாணயங்கள், பானை ஓடுகள், ஆபரணங்கள், பாத்திரங்கள், கல்வெட்டுகள், எலும்புகள் என்று எல்லாவற்றையும் தோண்டி எடுத்து ஒவ்வொன்றாக இவர்கள் ஆராய்வார்கள். இந்தக் கட்டிடம் எப்போது கட்டப்பட்டிருக்கும்?
நாணயத்தில் யாருடைய உருவம் பொறிக்கப்பட்டிருக்கிறது? அவர் எந்த மன்னர்? முத்து மணி மாலைகளை எப்படிச் செய்திருப்பார்கள்? பானைகளைப் பயன்படுத்திய மனிதர்கள் யார்? அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள்? இப்படிப் பல கேள்விகளை எழுப்பி விடைகளைத் தேடுவார்கள். எல்லாவற்றுக்கும் விடை கிடைத்துவிடும் என்று சொல்ல முடியாது. இருந்தாலும் கேள்விகள் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.
துப்பறியும் ஆர்வம் கொண்ட எல்லோருக்கும் வரலாறு பிடிக்கும். வரலாறு பிடிக்க வேண்டுமானால் துப்பறியத் தெரிந்திருக்க வேண்டும்.
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com