

ஒ
ரு நூலகம் எப்படி இருக்கும்?
புத்தகங்கள், அவற்றை வைக்க அலமாரிகள், வார, மாத இதழ்கள், நாளிதழ்கள், உட்கார்ந்து படிக்க மேசைகள் - நாற்காலிகள், சில கணினிகள், நூலகர், உதவியாளர்கள்… அப்புறம் நிறைய அமைதி!
இவை மட்டும்தான் ஒரு நூலகத்தில் இருக்க வேண்டுமா என்ன? மாற்றி யோசிப்போமே என்று உலகில் சில நூலகங்களின் அமைப்பையே ஆச்சரியம் அளிக்கும் விதத்தில் வடிவமைத்துள்ளார்கள். அதுவும் சிறுவர்களுக்கான நூலகங்கள். அவை எங்கே இருக்கின்றன? எப்படி இருக்கின்றன? வாருங்கள், சிறு உலா செல்லலாம். இங்கே நீங்கள் உற்சாகமாகச் சத்தம் எழுப்பியபடியே வரலாம். ‘சைலன்ஸ் ப்ளீஸ்’ தேவையில்லை!
செர்ரிடோஸ் மில்லினியம் நூலகம்
கலிஃபோர்னியாவின் செர்ரிடோஸ் நகரத்தில் அமைந்த பழைய நூலகம். ஆனால், 2002-ல் முழுக்க முழுக்க உள் அலங்காரம் எல்லாம் மாற்றப்பட்டு, நவீனப் பொலிவுடன் புதுப்பிக்கப்பட்டது. ஒரு நூலகம் எப்படி எல்லாம் இருக்குமோ, அந்த அமைப்பை எல்லாம் மாற்றி, முற்றிலும் புதுமையாகக் கட்டப்பட்ட நூலகம் இது. அதுவும் குழந்தைகளுக்கான பிரிவில் நுழையும்போதே பிரம்மாண்ட புத்தகங்கள் வழியே நுழையும்படியான வாசல் வரவேற்கும்.
உள்ளே பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள். மாபெரும் மரம் ஒன்றின் கீழ் கால் நீட்டி அமர்ந்து படிக்கலாம். அல்லது லைட் ஹவுஸ் ஒன்றில் வசதியாகச் சாய்ந்து உட்கார்ந்து வாசிக்கலாம். நம் அருகிலேயே டைனோசரின் எலும்புக்கூடு ஒன்று சமர்த்தாக நின்றுகொண்டிருக்கும். இன்னொரு பக்கம், மிகப் பெரிய கண்ணாடித் தொட்டிக்குள் சுறாக்கள் செல்லப் புன்னகையுடன் நீந்திக்கொண்டிருக்கும். இங்கே விண்கலம் உண்டு. சிறு தியேட்டர் உண்டு. ஓவியக்கூடம், கலைக்கூடம், கம்ப்யூட்டர் ஒர்க்-ஸ்டேஷன்ஸ் என இன்னும் பல உண்டு.
பிரெண்ட்வுட் நூலகம்
அமெரிக்காவின் பிரெண்ட்வுட் நகரத்தில் அமைந்துள்ள குழந்தைகள் நூலகம், ஒரு மாயலோகம். தேவதைக் கதைகளில் வரும் உலகத்துக்குள் நுழைந்துவிட்ட உணர்வைத் தரும்படி அமைக்கப்பட்டிருக்கிறது இந்த நூலகம். உள்ளே நுழையும் குழந்தைகளை மரப்பொந்தில் அமர்ந்திருக்கும் ஆந்தை வரவேற்கும். உட்கார்ந்து படிக்க பெரிய புத்தகப் பொம்மைகள்தான் நாற்காலி. இங்கே கதை சொல்லும் மரமும் உண்டு. மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமை இங்கே மேஜிக் காட்சிகள், பொம்மலாட்டம், கோமாளிகளின் கதை சொல்லும் நிகழ்வென ஒரே கொண்டாட்டமும் குதூகலமும் நிறைந்திருக்கும்.
பிப்லோ டோயென் நூலகம்
10 முதல் 15 வயதுவரையிலான குழந்தைகளுக்கு மட்டும் நார்வேயின் ஆஸ்லோ நகரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் நூலகம் இது. ஒரு டிரக், தரையில் மெத்தைகள், சிறு தியேட்டர், விதவிதமான நாற்காலிகள். இங்கே புத்தகங்கள் படிக்கலாம். படம் பார்க்கலாம். சமைக்கக் கற்றுக்கொள்ளலாம். உட்கார்ந்து கதை கேட்கலாம். நம் மனதுக்குப் பிடித்த வேலைகளைச் செய்யலாம். குழந்தைகள் இங்கே இருக்கும் நேரத்தில் சந்தோஷமாக ஏதாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே இந்த நூலகம் அமைக்கப்பட்டதன் நோக்கம்.
மயிங்கா நூலகம்
மத்திய ஆப்பிரிக்க நாடான புருண்டியின் மயிங்கா என்ற நகரில் கட்டப்பட்டுள்ள நூலகம் மிகவும் முக்கியமானது. இங்கே பளபளப்பான, நவீன வசதிகள் எதுவும் கிடையாது. நகரின் முதல் நூலகமும் ஒரே நூலகமும் இதுதான். காது கேளாத குழந்தைகளுக்காக அமைக்கப்பட்ட சிறப்பு நூலகமும்கூட. இந்த ஊரில் கிடைக்கும் மண், மரம், கயிறு, ஓடு, இதரப் பொருட்களைக் கொண்டு, காற்றோட்டத்துடனும் வெளிச்சத்துடனும் அமைக்கப்பட்ட இந்தச் சிறிய நூலகம், பல குழந்தைகளின் முகத்தில் புன்னகையைக் கொண்டு வந்திருக்கிறது.
கழுதை நூலகம்
குழந்தைகள் படிப்பதற்காக மலைப்பாதைகளில் இரண்டு கழுதைகள் நூல்களைச் சுமந்து, நடமாடும் நூலகமாகத் திரிகின்றன தெரியுமா?. லூயிஸ் சொரியானோ, கொலம்பியாவின் ஓர் ஆரம்பப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். அங்கே மலைக் கிராமங்களில் வாழும் குழந்தைகளுக்குப் பள்ளி அருகில் இல்லை. அவர்களுக்கு நூலகம் பற்றி எல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. ஆகவே, இரண்டு கழுதைகளை வாங்கி, அவற்றின் முதுகில் சிறு அலமாரிகளை மாட்டி, புத்தகங்களை அடுக்கி, நடமாடும் நூலகமாக்கினார். மலைக் கிராமத்தின் குழந்தைகளுக்கும் புதுப்புது புத்தகங்களும், அவற்றின் வழியே இந்த உலகமும் அறிமுகமாயின. நூல்களைக் கொண்டு செல்வதோடு மட்டுமல்லாமல், குழந்தைகளுக்குக் கதைகளை, செய்திகளை, கட்டுரைகளை வாசித்தும் காண்பிப்பார் லூயிஸ். அந்த நடமாடும் நூலகத்தின் பெயர் பிப்லியோபுர்ரோ (Biblioburro).
குழந்தைகளுக்காகப் புத்தகங்களைச் சுமக்கும் அந்த இரண்டு சமர்த்துக் கழுதைகளின் பெயர்களைச் சொல்ல மறந்துவிட்டேனே!
ஆல்ஃபா, பீட்டா.
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: mugil.siva@gmail.com