

ஓர் எழுத்தாளரின் வாசகராக இருப்பது எளிது. அவர் எழுத்தை மீண்டும், மீண்டும் ரசிப்பதும் அவரை வானம் வரை உயர்த்திக் கொண்டாடுவதும் எளிது. ஆனால், அவரோடு ஒரே வீட்டில் வாழ்வது அவ்வளவு எளிதல்ல. அவர் மனைவியாக 50 ஆண்டுகள் வாழ்ந்த அனுபவத்தில் சொல்கிறேன். டால்ஸ்டாய் லேசுபட்டவர் கிடையாது.
‘எனக்குப் புதிய ஆடை வேண்டும், குழந்தைகளுக்கும் துணி எடுக்க வேண்டும். வெளியில் போகலாமா?’ என்று கேட்டால் முறைப்பார். ‘எனக்குத் துணிகூட வாங்கத் தெரியாது என்று நினைத்துவிட்டாயா? ‘சரி, சரி நீங்களே வாங்கி வாருங்கள்’ என்று அனுப்பிவிட்டு, அவர் வரும்வரை கனவு கண்டுகொண்டு இருப்பேன். குழந்தைகளுக்கு என்ன வாங்குவார்? எனக்குப் பிடித்த வண்ணத்தில் நான் விரும்பியதை வாங்கி வருவாரா? அதெல்லாம் அவர் நினைவில் இருக்குமா?
ச்சே, எவ்வளவு பெரிய எழுத்தாளர்! அவரைப் போய் இப்படி எல்லாம் சந்தேகப்படலாமா? ‘ஹை, அப்பா இது எனக்கா?’ என்று குழந்தைகள் இன்னும் கொஞ்ச நேரத்தில் குதியாகக் குதிக்கப் போகிறார்கள். நான் வந்திருந்தால்கூட இவ்வளவு பொருத்தமாக வாங்கியிருக்க மாட்டேன் என்று மகிழ்ச்சியில் என் கண்கள் நனையப் போகின்றன.
எதிர்பார்த்தபடியே டால்ஸ்டாய் வந்துசேர்வார். ‘அப்பப்பா, எவ்வளவு அலைச்சல்’ என்று அலுப்போடு பையை நீட்டுவார். ‘சோனியா, உனக்கும் குழந்தைகளுக்கும் மட்டுமல்ல, வீட்டுக்குத் தேவையான துணிமணியையும் சேர்த்தே வாங்கி வந்திருக்கிறேன். நாளைக்கே ஒரு நல்ல தையல்காரரை அழைத்து மளமளவென்று வேலையை ஆரம்பித்துவிடு!’
மலர்ச்சியோடு பையைப் பிரிப்பேன். பழுப்பா அல்லது அழுக்கா என்று கண்டுபிடிக்க முடியாதபடி ஒரு பெரிய துணி சுருண்டு படுத்துக்கிடக்கும். ஒருவேளை படுக்கை விரிப்பாக இருக்குமோ? கீழே நமக்கான துணிமணி இருக்குமோ? அவசரமாக வெளியில் எடுப்பேன். ஆனால், அந்தத் துணி எடுக்க, எடுக்க வளர்ந்து கொண்டே போகும். குழப்பத்தோடு, முழுக்க வெளியில் உருவிப் போட்டுவிட்டு அடியில் பார்த்தால், பை காலியாக இருக்கும்!
‘என்னங்க இது, எனக்கும் குழந்தைகளுக்கும் எதுவும் வாங்கவில்லையா’ என்று கேட்டால், ‘என்னைப் பார்த்தால் உனக்கு எப்படித் தெரிகிறது’ என்பது போல் விழிப்பார். ‘உனக்கு, எனக்கு, குழந்தைகளுக்கு, படுக்கையில் விரிப்பதற்கு, என் மேஜையில் விரிப்பதற்கு என்று எல்லாவற்றுக்கும் சேர்த்து மொத்தமாக ஒரே துணியாக வாங்கிவிட்டேன். இன்னும் சில தினங்களில் நம் வீடு புது வீடுபோல் பளபளப்பாக மின்னப்போகிறது, பார்!’
எங்கள் வீட்டுக்கு நீங்கள் வந்தால் எது படுக்கை, எது திரைச்சீலை, எது மிதியடி, எது நான் என்று தெரியாமல் திகைத்து நிற்பீர்கள். ஒருவேளை நான் அசைந்தால், ‘ஓ, அவர்தான் சோனியா போலிருக்கிறது’ என்று தெரிந்துகொள்ளலாம்.
இல்லாவிட்டால், என்னிடம்பேசுவதாக நினைத்துக் கொண்டு ஜன்னலிடம்தான் நீங்கள் பேசிக்கொண்டு நிற்க வேண்டும். நிஜமாகவே பாவம் என் குழந்தைகள். படுக்கையில் அவர் களைப் போட்டால், எது குழந்தை, எது தலையணை என்று நானே திணறிவிடுகிறேன்.
இதே டால்ஸ்டாய் இன்னொன்றும் செய்வார். அர்த்த ராத்திரியில் பேய் பிசாசுகூட உறங்கும் நேரத்தில், ‘சோனியா, சோனியா எழுந்திரு, அவசரம்’ என்று அலறுவார். திருதிருவென்று விழிப்பேன்.
‘ஒரு பெண் முழுநீள கவுன் அணிந்திருக்கிறாள். அழகான பூ வேலைப்பாடுகள் போட்ட வெள்ளை கவுன். கீழ்ப்பகுதி தரையில் புரளும் அளவுக்கு நீளமான கவுன் அது. ஒரு குதிரை வண்டி வந்து நிற்கிறது. அதில் அவள் ஏற வேண்டும்.
இப்போது அவள் என்ன செய்வாள்? அப்படியே கால் வைத்து ஏறிவிடுவாளா? அப்படி ஏறினால் கவுன் தடுக்காதா? தடுக்காமல் இருக்க அவள் என்ன செய்வாள்? தனது ஆடையைக் கொஞ்சம் உயர்த்திப் பிடித்தபடி ஏறுவாளா? ஆம், எனில் எப்படி என்று எனக்குக் கொஞ்சம் செய்து காட்ட முடியுமா? இப்போதே, இந்த நொடியே, தயவுசெய்து’ என்று கேட்பார்.
சட்டென்று எழுந்து நின்று அந்தப் பெண்ணைப் போல் என்னைக் கற்பனை செய்துகொண்டு, எனது ஆடையை மெலிதாக உயர்த்திப் பிடித்தபடி, இல்லாத குதிரை வண்டியில் ஏறுவதுபோல் பாவனை செய்வேன். ‘இரு, இரு... அப்படியே நில்’ என்பார். என்னென்ன விரல்களை எப்படி எல்லாம் பயன்படுத்துகிறேன் என்று ஆராய்வார். ‘சரி, நீ தூங்கு’ என்று சொல்லிவிட்டு, அவசர அவசரமாக ஓடுவார். மேஜை முன்னால் அமர்ந்துகொண்டு விறுவிறுவென்று எழுத ஆரம்பித்துவிடுவார்.
அவர் உருவாக்கும் பெண்ணுக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது என்று அவருக்குத் தெரியும். ஒரே ஓரிடத்தில் வரும் ஒரு சிறிய குழந்தையின் ஆடையில்கூட அவ்வளவு கவனம் செலுத்துவார். அவர் கதையில் வரும் திரைச்சீலைகள்கூட அழகிய வண்ணத்தில் அழகாக அசைந்தாடும்.
ஆனால், அவர் குழந்தைகளுக்கு என்ன பிடிக்கும், பிடிக்காது என்று அவருக்குத் தெரியாது. எனக்குப் பிடித்தது நீண்ட வெள்ளை கவுன் என்று அவருக்குத் தெரியாது. பூ வேலைப்பாடுகள் போட்ட, கால் வரை வளர்ந்து, தரை வரை நீண்டு புரளும் கவுன். தன் கதை நாயகிக்கு டால்ஸ்டாய் பார்த்துப் பார்த்து வாங்கி போட்ட அதே கவுன்!
‘அச்சச்சோ, உனக்கு வருத்தமாக இல்லையா சோனியா’ என்றால் ஆம், கொஞ்சம் வருத்தம்தான். ஆனால், வருத்தத்தைவிட அவர் அளிக்கும் மகிழ்ச்சி பெரிது. நான் அவருடைய முதல் வாசகி. அவர் உருவாக்கும் உலகை அருகிலிருந்து பார்க்கிறேன். அந்த உலகில்தான் வாழ்கிறேன். அவருடைய கற்பனையின் ஒரு பகுதி நான். நான் இல்லாத ஒரே ஒரு புத்தகத்தைக்கூட அவர் எழுதியதில்லை. இதைவிட வேறு என்ன வேண்டும் எனக்கு?
(இனிக்கும்)
அனைத்தையும் நேசிப்பதால் அனைவரையும் புரிந்துகொள்கிறேன். - உலகப் புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய்.
- marudhan@gmail.com