விடுமுறையில் வாசிப்போம்: பள்ளியின் புதுமை முயற்சி

விடுமுறையில் வாசிப்போம்: பள்ளியின் புதுமை முயற்சி
Updated on
1 min read

மாணவர்களின் வாசிப்பையும் சிந்தனையையும் தூண்டும் வகையில் பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது திருச்சி எஸ்.ஆர்.வி. பள்ளி. இந்த ஆண்டில் மற்றொரு முன்னோடிச் செயல்பாடாக, தங்கள் பள்ளி மாணவர்கள் வாசிப்பதற்காக 40 பிரத்யேக நூல்களை (விற்பனை உரிமை: பாரதி புத்தகாலயம்) வெளியிட்டுள்ளது.

சிறார் இலக்கியத் துறையில் பங்களித்துவரும் முக்கிய எழுத்தாளர்கள் இந்த நூல்களைத் தொகுத்திருக்கிறார்கள். வயதுக்கு ஏற்ற வகையில் நூல்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அழ.வள்ளியப்பா, பெ.தூரன், கி.ராஜநாராயணன், ச.தமிழ்ச்செல்வன், உதயசங்கர், ச.மாடசாமி, கமலாலயன், யூமா வாசுகி, விழியன், ஞா.கலையரசி, ச.முத்துக்குமாரி போன்றோர் நூல்களை எழுதியுள்ளனர்.

மாணவர்களுக்கான ‘கதைக் கம்பளம்’ கதைத் தொகுப்பு, பெற்றோர்-ஆசிரியர்களுக்கான ‘கல்விக் கதைகள்’ வழிகாட்டு நூல் ஆகியவற்றை ச.தமிழ்ச்செல்வன் தொகுத்துள்ளார். மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்காக மலையாளச் சிறார் கதைகளை ‘நதியில் நீர் வரும்போது’ என்கிற நூலாக யூமா வாசுகி மொழிபெயர்த்துள்ளார்.

விஷ்ணுபுரம் சரவணன், ஆதி வள்ளியப்பன் ஆகியோர் நூல்களை எழுதியுள்ளதுடன், தொடக்க நிலை மாணவர்களுக்கான நூல்களைத் தொகுத்துள்ளனர். நடுநிலை மாணவர்களுக்கான நூல்களை யெஸ். பாலபாரதி தொகுத்துள்ளார்.

தங்கள் வாழிடத்தைப் பற்றி மாணவர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்கிற அக்கறையுடன் நூல்கள் இடம்பெற்றுள்ளன. உதாரணமாக ஊர், தெரு, மாநிலத்துக்கான அடையாளங்களை அறிமுகப்படுத்துகிற ‘பேசும் தெரு’, ‘கனியும் மலரும் சந்தைக்குப் போறாங்க’, ‘எல்லாரும் கொண்டாடுவோம்’, திருச்சி பகுதி முன்னோடிகளின் வரலாற்றைக் கூறும் ‘திருச்சி மாவட்டச் சான்றோர்கள்’ ஆகிய நூல்கள் இப்படிப்பட்டவை.

பாடல்கள் மூலம்தான் குழந்தைகள் கல்விக்குள் நுழைகின்றனர். பாரதியாரிலிருந்து பாவண்ணன் வரைக்குமான படைப்பாளிகள் எழுதிய சிறார் பாடல்களை உள்ளடக்கிய ‘பிள்ளைக்கவி அமுது’ நூல் அப்படிப்பட்டது. வரைவது மூலம் படைப்பாற்றலை ஊக்குவிக்கும்வகையில் அரவிந்த் குப்தா எழுதிய ‘வரைவோம் விளையாடுவோம்’ நூலும் தொகுப்பில் உண்டு.

சிறார்களான யாழினி, ரமணி, மீனா, எஸ்.அபிநயா ஆகியோர் எழுதிய கதைகளும் நூல்கள் ஆகியுள்ளன. பி.டி.ஈஸ்ட்மேன், கேரன் ஹேடாக், லியோ லயன்னி போன்ற பிரபல வெளிநாட்டு எழுத்தாளர்களின் படைப்புகளும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in