

கல்பாக்கத்தில் ‘அதிவேக ஈனுலை’ திறக்கப்பட்டுள்ளதே, அதைப் பற்றி விளக்க முடியுமா, இதனால் நமக்கு ஆபத்து ஏதும் இல்லையா, டிங்கு? - ஜெப் ஈவான், 7-ம் வகுப்பு, புனித பாட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கோட்டூர்புரம், சென்னை.
நம் நாட்டின் எரிசக்தி பாதுகாப்புக்காக ‘அதிவேக ஈனுலை’ திறக்கப்பட்டிருப்பதாக அரசாங்கம் சொல்கிறது. இந்தியாவில் தோரியம் அதிகமாகக் கிடைக்கிறது. அதனால், யுரேனியத்தைக் குறைவாகவும் தோரியத்தை அதிகமாகவும் பயன்படுத்தி, எரிபொருள் தயாரிக்கப்பட இருக்கிறது.
மூன்று கட்டங்களாக நடைபெறும் அணுசக்தித் திட்டத்தில், ஒருகட்டத்தில் எரிக்கப்படும் எரிபொருள், இன்னொரு கட்டத்தில் எரிபொருளாகப் பயன்படுத்தப்படும். முதல் கட்ட அதிவேக ஈனுலையில் யுரேனியம் எரிபொருளாக இருக்கும்.
அடுத்த கட்டத்தில் புளுட்டோனியம் எரிபொருளாக இருக்கும். இதிலிருந்து கிடைக்கும் யுரேனியம் 233 மூன்றாவது கட்டத்தில் எரிபொருளாக இருக்கும். இப்படி இன்னோர் அணு உலைக்கு எரிபொருள் தருவதால் இதை, ‘ஈனுலை’ என்கிறார்கள். இந்த யுரேனியம் 233 மூலம் அணுகுண்டு தயாரிக்க இயலாது.
அதனால், விஞ்ஞானிகள் இந்த அதிவேக ஈனுலையால் ஆபத்து இல்லை என்கிறார்கள். ஆனால், சூழலியல்ரீதியாகப் பாதிப்பு ஏற்படலாம் என்பதால் இந்தத் திட்டத்தைச் சூழலியல் மீது அக்கறைகொண்டவர்கள் எதிர்க்கிறார்கள், ஜெப் ஈவான்.
வீட்டிலிருந்து அப்பாவோ அம்மாவோ புறப்படும்போது, எங்கே போகிறீர்கள் என்று கேட்டால் கோபப்படுகிறார்கள். போகும் காரியம் நடக்காது என்று சொல்லிவிட்டு, சில நிமிடங்கள் உட்கார்ந்துவிட்டுச் செல்கிறார்கள். இப்படிக் கேட்டால் காரியம் நடக்காதா, டிங்கு? - ச. கவிப்ரியா, 6-ம் வகுப்பு, அரசு நடுநிலைப் பள்ளி, சேலம்.
வெளியே செல்பவர்கள், செல்லும் இடத்தைச் சொல்லிவிட்டுச் செல்வதுதான் நல்லது. அப்படிச் சொன்னால், நீங்கள் கேள்வி கேட்க வேண்டிய அவசியமே இருக்காதே! மற்றபடி எங்கே போகிறீர்கள் என்று கேட்பதால், எதற்காகப் போகிறார்களோ அந்தக் காரியம் நடக்காது என்பதற்கும் சில நிமிடங்கள் உட்கார்ந்துவிட்டுச் செல்வதால் அந்தக் காரியம் நடந்துவிடும் என்பதற்கும் அறிவியல்ரீதியான காரணம் ஒன்றும் இல்லை, கவிப்ரியா.