

பேய்த் தோட்டம் l ஞா.கலையரசி
தற்போது நிறைய பேர் குழந்தைகளுக்கு எழுத வந்திருக்கிறார்கள். அவர்களில் ஆர்ப்பாட்டமில்லாத வகையில், அதே நேரம் சுவாரசியமாகவும் புதிய கருத்துகளுடனும் எழுதிவருபவர் ஞா.கலையரசி. அவருடைய சமீபத்திய சிறார் கதைகளின் தொகுப்பு ’பேய்த் தோட்டம்’ என்கிற பெயரில் வெளியாகியுள்ளது.
வானம் வெளியீடு, தொடர்புக்கு: 91765 49991
தாத்தாவின் மூன்றாவது டிராயர் l சுகுமாரன்
நீண்ட காலமாகக் குழந்தைகளுக்கு எழுதிவரும் சுகுமாரன் மொழிபெயர்த்துள்ள உலக சிறார் எழுத்தாளர்களின் கதைத் தொகுப்பு. உலகை ஆட்டிப்படைத்துவரும் போர், நிறவெறி, இனவெறி, சர்வாதிகார ஆட்சி போன்றவற்றால் ஏற்படும் பாதிப்புகளை அடிப்படையாகக் கொண்டு குழந்தைகளுக்கு எழுதப்பட்ட கதைகள் இவை. போராட்டமும் துயரங்களும் நிறைந்த குழந்தைகளின் வாழ்க்கையைப் பற்றிய பதிவுகள் இவை.
புக்ஸ் ஃபார் சில்ரன், தொடர்புக்கு: 044-24332924
பூமிக்குப் பூக்கொடுப்போம் l டாக்டர் சு.முத்துச் செல்லக் குமார்
மின் சிக்கனம், பாட்டில் தண்ணீர், பிளாஸ்டிக் பைகள், காடு வளர்ப்பு, மின்சார கார், கடல் மாசு உள்ளிட்ட பிரச்சினைகள் சார்ந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளைத் தவிர்க்கும் முறைகள் குறித்தும் பேசுகின்றன கட்டுரைகள். குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் உரையாடல் வடிவில் சிறு கட்டுரைகளாக இவற்றை வடித்திருக்கிறார் டாக்டர் முத்துச் செல்லக் குமார்.
ருக்மணி மருத்துவத் தகவல் மையம், தொடர்புக்கு: muthuchellakumar@gmail.com
வாண்டுகளுக்கான மூலிகைகள் l மருத்துவர் வி.விக்ரம்குமார்
குழந்தைகளுக்கு நமது காய்கறிகள், கீரைகள் குறித்து விரிவாகக் கற்றுத்தர வேண்டிய அவசியம் இருக்கிறது. சுண்டைக்காய், மணத்தக்காளி, கறிவேப்பிலை, பிரண்டை, முடக்கறுத்தான், நொச்சி என 20 மருத்துவத் தாவரங்கள் குறித்துக் குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் விளக்குகிறது விக்ரம்குமார் எழுதியுள்ள இந்த நூல்.
காக்கைக் கூடு, தொடர்புக்கு: 90436 05144
கஜராஜன் கலீம் தாத்தா! l யோகேஸ்வரன்
டாப்ஸ்லிப் யானை முகாமில் உள்ள கலீம் எனும் யானையை முன்வைத்து காடு சார்ந்த அனுபவங்களைப் பதிவுசெய்துள்ளார் சிறுவன் யோகேஸ்வரன். காடுகளில் அவர் மேற்கொண்ட பயணங்கள், அங்கே பார்த்த வரையாடுகள், இருவாச்சிகள், அணில்கள், காட்டுமாடுகள் எனப் பல்வேறு விலங்குகள் குறித்து இந்நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
மெளவல் பதிப்பகம், தொடர்புக்கு: 97877 09687
வாசிப்புப் பேரியக்கம் l விழியன்-விஷ்ணுபுரம் சரவணன்
இன்றைய மாணவர்களிடையே வாசிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் நூல். வாசிப்பில் உள்ள சவால்கள், அவற்றை எப்படிச் சமாளிப்பது, யார் வாசிப்பை முன்னெடுப்பது, என்ன செய்யலாம் எனப் பல்வேறு அம்சங்களைப் பற்றிப் பேசுகிறது இந்தக் குறுநூல்.
புக்ஸ் ஃபார் சில்ரன், தொடர்புக்கு: 044-24332924
மூணுகால் முயல் l உதயசங்கர்
சின்னு முயலுக்கு மூன்று கால்கள் மட்டுமே உள்ள ஒரு பொம்மை முயல் கிடைக்கிறது. சின்னு முயல் அதன் பிறகு என்ன செய்தது? இதை அடிப்படையாகக் கொண்டு சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு இந்தக் கதையை எழுதியிருக்கிறார் பிரபல எழுத்தாளர் உதயசங்கர். ஓவியங்கள்: உ.நவீனா.
இயல் பதிப்பகம், தொடர்புக்கு: 94884 06868
ரீனாவின் மேக விளையாட்டு l சாலை செல்வம்
மேகத்தைப் பார்த்தால் நமக்கெல்லாம் என்ன தோன்றும்? நிறைய உருவங்கள் தோன்றும் இல்லையா? ரீனா என்கிற சிறுமியும் மேகத்தைப் பார்க்கிறாள். அதன் பிறகு ரீனா கற்பனைக் குதிரையில் பறந்து செல்வதுதான் கதை. ஒளிப்படங்களையும் மரியான் பிரிட்டோ வரைந்த ஓவியங்களையும் இணைத்து இந்த நூல் சுவாரசியமாக உருவாக்கப்பட்டுள்ளது.
மரியான் ஸ்கெட்ச் ஸ்டோரீஸ், தொடர்புக்கு: 99409 59464
சூரியக் குடும்பம்l பா.ஸ்ரீகுமார்
நாம் புவியில் வசிக் கிறோம். புவி, சூரியக் குடும்பத்தின் எட்டுக் கோள்களில் ஒன்று. சூரியனோ பால்வெளி மண்டலத்தில் உள்ளது. பால்வெளி மண்டலம் பல்லாயிரம் விண்மீன் திரள்களாக விரிந்து பிரபஞ்சமாக இருக்கிறது. இப்படி வானியல் விரிந்துகொண்டே சென்றாலும், அதில் அடிப்படையாக எட்டுக் கோள்களைப் பற்றிய அடிப்படைத் தகவல்களை வண்ணப்படங்களுடன் தருகிறது இந்த நூல்.
சுட்டி மீடியா, தொடர்புக்கு: 98409 69757
நிலவொளியில் மீன்மாதர் l ஷரண்யா மணிவண்ணன், தமிழில்: பொன்னி அரசு
மீன்மாதர் எனப்படும் கடல்கன்னிகள் குறித்தகதைகள் உலகெங்கும் உள்ளன. அந்தக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு குழந்தைகளுக்கான இந்தக் கதை எழுதப்பட்டுள்ளது. நிலவொளி என்கிற சிறுமிக்கு அவளுடைய அம்மா கதை கூறும் பாணியில் இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது. ஷரண்யா மணிவண்ணனே அழகான வண்ணப் படங்களை வரைந்துள்ளார்.
மேஜிக் லாம்ப் வெளியீடு, தொடர்புக்கு: 99425 11302
ஏப்ரல் 23: உலகப் புத்தக நாள்